St. Laserian St. Galdinus

ஏப்ரல் 18

புனித கால்டினுஸ்

mary

புனித கால்டினுஸ்

நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தவேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்;. (உரோ 13:8)

இத்தாலி நாட்டில மிலான் நகரில் ஏறக்குறைய 1100-ஆம் ஆண்டு பிறந்தவர் கால்டினுஸ். புகழ்மிக்க வல்வர்சி டெல்லாசாலா குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறந்த கல்வி வழங்கப்பட்டது. அன்பும், அருள் வளமும் மிக்க குடும்பத்தின் வாரிசான இவர் இறைவனின் திருப்பணியாற்ற குருத்துவப் பயிற்சி பெற்று அருள்பொழிவு பெற்றார். இரண்டு பேராயர்களின் கீழ் தலைமைச் செயலராகவும், தலைமைத் திருத்தொண்டராகவும் பணியாற்றினார்.

கால்டினுசின் காலம் சவால் நிறைந்த காலமாகும். 1159-இல் திருத்தந்தை அட்ரியன் இறந்தபிறகுஈ புதிய திருத்தந்தையாக மூன்றாம் அலெக்சான்ண்டர் தேர்ந்தெடுக்கபட்டார். பேரரசர் ஃபிரடரிக் பார்பராசாவுக்கு ஆதரவாக இரந்த கர்தினால்கள் சிலர் ஒன்று சேர்ந்து பேரரசரின் தூண்டுதலின் பேரில் நான்காம் விக்டர் என்பவரைப் போட்டித் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

மிலான் நகர மக்கள் திருத்தந்தை மூன்றாம் அலெக்சான்டருக்கே வணக்கமும், மரியாதையும் செலுத்தியதால் பேரரசர் வெகுண்டெழுந்தார். மிலான் நகரைச் சுற்றி இராணுவ முற்றுகைக்கு உத்தரவிட்டார். பேராயர்கள் ஹ_பெர்ட் மற்றும் கால்டினுஸ் இருவரையும் கட்டாயத்தின் பேரில் ஊர்விட்டு ஊர் ஓட வைத்தார். எனவே மிலான் நகரில் ஆயர் இல்லாத நிலையானது. பட்டினியும், நோயும் மக்களைத் தாக்கி பலர் இறக்க ஆரம்பித்த போதுதான் பார்பராசா முற்றுகையைத் தளர்த்தினார்.
திருத்தந்தை மூன்றாம் அலெக்சான்ணடருடன் சேர்ந்து மகுலோன், மொன்பெல்லியர் மற்றும் க்ளர்மோன்ட் ஆகிய இடங்களுக்கு பயணித்தார். மேலும் சிசிலி வழியாக உரோமைக்கு திரும்பி வந்தபோதும் உடனிருந்தார். தன்னுடன் தொடர்ந்து 1165 வரை உடன் நடந்த கால்டினுசை 1165-ஆம் ஆண்டு உரோமையில் சாந்தா சபினா பேராலயத்தின் கர்தினாலாக திருத்தந்தை நியமித்தார்.

பேராயர் ஹ_பர்ட் 1166-இல் இறந்ததால் மிலான் நகர பேராயராக கால்டினுஸ் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தமது வாழ்நாள் முழுவதுமே தம் மக்களின் அமைதியான மற்றும் நிலையான வாழ்வுக்காக கால்டினுஸ் கையளித்தார். 1167-இல் லம்பார்டு நகருக்குத் திருப்பீடத் தூதுவராக நியமனம் பெற்றார். பேரரசர் பார்பராசா இறந்தவுடன் லம்பார்டு மறைத்தளம் முழுவரையும் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார். போட்டி திருத்தந்தை நான்காம் விக்டரை ஆதரித்த அனைத்துக் குருக்களையும் நீக்கிவிட்டு புதிய குருக்கள் மற்றும் ஆயர்களைத் திருப்பொழிவு செய்தார்.

பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் மிலான் நகர ஏழைகளுக்கு உதவி செய்து எல்லாரின் அன்புக்கும் உரியவராக விளங்கிய கால்டினுஸ் ஏப்ரல் 18, 1176-ஆம் ஆண்டு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை ஆற்றிவிட்டு அமர்ந்தவர் அப்படியே இறந்து இறைவனில் ஒன்றித்தார்.

கடன்பெறாது வாழும் வாழ்வும், அது தரும் மகிழ்வும் நிலையானது என்பதை உணர்கிறவர்கள் ஆசிர் பெறுவார்கள்.

image