St. Geroldus St. Leo IX

ஏப்ரல் 19

தூய ஒன்பதாம் சிங்கராயர்

mary

mary

தூய ஒன்பதாம் சிங்கராயர் (ஏப்ரல் 19)

ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்யபடுத்தியுள்ளேன்” (எரே 1: 9 -10)

வாழ்க்கை வரலாறு

ஒன்பதாம் சிங்கராயர் என்ற அழைக்கப்படும் புருனோ 1002 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். புருனோக்கு ஐந்து வயது நடக்கும்போது, டோல் நகரில் ஆயராக இருந்த பெத்தோல்டு என்பவரின் கண்காணிப்பில் விடப்பாட்டார். அவர் புருனோவை பக்தி நெறியில் வளர்த்து வந்தார்.

ஒருசமயம் புருனோ ஆயர் பெத்தோல்டுவிடமிருந்து விடைபெற்று வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது கொடிய விலங்குகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கின. அதனால் அவருக்கு உயிர்பிழைப்போமோ என்று அச்சம் வந்துவிட்டது. உடனே அவர் இறைவனை நோக்கி, தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். அப்போது தூய ஆசிர்வாதப்பர் அவருக்கு முன்பாகத் தோன்றி, தன்னுடைய கையில் இருந்த சிலுவையினால் அவருடைய காயங்களில் வைத்தார். மறுகணம் அவருடைய காயங்களை அனைத்தும் மறைந்தன. அடுத்த சில நொடிகளிலே தூய ஆசிர்வாதப்பரும் அங்கிருந்து மறைந்தார்.

இதைத் தொடர்ந்து புருனோ தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு நன்றியாக அன்றே இறைப்பணி செய்யப் புறப்பட்டார். குருத்துவப் படிப்புப் படித்து, குருவாகிய மாறிய புருனோ 1025 ஆம் ஆண்டு டோல் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1049 ஆம் ஆண்டு அவர் உரோமைக்குச் சென்றபோது அங்கிருந்தவர்கள் இவரை திருத்தந்தையாக உயர்த்தினார்கள். அதனை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்ட அவர், ஒன்பதாம் சிங்கராயர் என்ற பெயரைத் தாங்கி இறைப்பணியை மிகத் துணிச்சலோடு செய்யத் தொடங்கினார்.

இவர் திருத்தந்தையாக இருந்தது வெறும் ஐந்து ஆண்டுகள்தான். ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சபையில் இவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். திருச்சபைப் பொறுப்புகள் பணத்திற்காக ஏலம் விடப்பட்டன. இதனைக் கண்ட திருத்தந்தை அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார். சிமினி எனப்படும் இத்தகைய வழக்கத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்ததாக பொராங்கர் என்பவர் நற்கருணையில் இயேசு இருக்கின்றா? என்ற கேள்வியைக் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார். அவரையும் திருத்தந்தை அவர்கள் தன்னுடைய நுட்பமான நடவடிக்கையால் பேசவிடாமலே செய்தார்.

ஒரு சமயம் நார்மன் வகுப்பைப் சார்ந்தோர் உரோமை நகரைச் சூழ்ந்துகொண்டு சூறையாட நினைத்தனர். இதனைக் கடுமையாக எதிர்த்த திருத்தந்தை அவர்களை, அவர் திருத்தந்தை என்றுகூடப் பாராமல் கைதுசெய்து ஒன்பது மாதங்கள் கடுமையாகச் சித்ரவதை செய்தார்கள். இதனால் அவருடைய உடல் நலம் குன்றியது. ஏற்கனவே பலவிதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்த திருத்தந்தைக்கு இந்த சித்தரவதை அவருடைய உடல் நலனை மேலும் குன்றச் செய்தது. இதனால் அவர் 1054 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1087 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஒன்பதாம் சிங்கராயரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

அநீதியை எதிர்த்து உண்மையை நிலை நாட்டுவோம்.

தூய ஒன்பதாம் சிங்கராயரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய சிந்தனைக்கு தோன்றுவதெல்லாம் அவர் அநீதியை எதிர்த்து, உண்மையை நிலைநாட்டியதுதான். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம் உண்மையை இந்த உலகத்தில் நிலைநாட்ட முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இங்கே ஒரு சிறு நிகழ்வு.

பதினைந்தாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டில் மெக்டொனால்ட் என்ற பெயர்கொண்ட கொள்ளைக் கூட்டத் தலைவன், தன் குழுவினரோடு ஓர் ஏழைப் பெண்ணின் பசுமாடுகளைத் திருடிப் போய்விட்டான். இதை அறிந்த அந்த ஏழைப் பெண்மணி, “நான் அரசனிடம் புகார் தரும்வரை என்னுடைய கால்களில் செருப்பணியப் போவதிலை” என்று சபதமிட்டாள். இதனால் கோபமடைந்த மெக்டோனால்ட், அவள் கால்களில் குதிரைக் குளம்புகளை வைத்து அடித்துவிட்டான். காயம் ஆறும்வரை காத்திருந்த பெண் அரசவையில் முறையிட்டாள். விஷயம் அறிந்த அரசன், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைப் பிடித்தான். மட்டுமல்லாமல் அவர்களுடைய கால்களில் குதிரை லாடமிட்டு மூன்று நாட்கள் மக்கள் பார்வைக்கு வைத்திருந்தான். பின்னர் மேக்டோனால்டின் தலையைத் துண்டிக்கவும், மற்றவர்களைத் தூக்கில் போடவும் செய்தான். இதனால் நாட்டில் திருட்டுத் தொழிலே நின்றுபோனது.

திருட்டை ஒழித்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்த பிரான்சு நாட்டு அரசன் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நாமும் நாம் வாழக்கூடிய சூழலில், அநீதியை ஒழித்து, உண்மையை நிலைநாட்டுகின்ற போதுதான் இயேசுவின் சீடர்களாக முடியும்.

ஆகவே, தூய ஒன்பதாம் சிங்கராயரைப் போன்று உண்மையின் வழி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image