St. Catherine of Siena St. Hugh of Cluny
St. Robert of Molesme

ஏப்ரல் 29

தூய சியென்னா கத்ரீன்

mary

mary

தூய சியென்னா கத்ரீன் (ஏப்ரல் 29)

நிகழ்வு

தூய சியென்னா கத்ரீன் தனிமையாக இருந்து ஜெபித்தபோது சாத்தான் அவரை அதிகமாகச் சோதித்தது. அப்படிப்பட்ட தருணத்தில் ஒருநாள் அவர் இயேசுவிடம், “ஆண்டவரே! நான் பலவாறாக சோதனைக்கு உட்படும்போது நீர் எங்கே சென்றீர்?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ சோதனைகளை வெற்றிகொள்ள என்னுடைய அருளைத் தந்து, உனக்குள்ளேதான் இருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ந்து போனார். ஆண்டவராகிய கடவுள் தனக்குள் இருப்பதை இத்தனை நாளும் உணராமல் இருந்துவிட்டோமே என்று வருந்தினார். அதன்பிறகு தனக்கு வந்த சோதனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார்.

வாழ்க்கை வரலாறு

கத்ரீன் 1347 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் இத்தாலியில் உள்ள சியென்னா நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஜாகோபா மற்றும் லாபோ பெமினிகாசா என்பவர் ஆவார். இவர் குடும்பத்தில் இவர் இருபத்து ஐந்தாவது குழந்தை, கடைக்குட்டி.

கத்ரீன் சிறுவயதிலிருந்தே கடவுள் மீது, அன்னை மரியாவின் மீது அதிகமான பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். அவர் ஒவ்வொருமுறையும் வீட்டு மாடிப்படியை ஏறி இறங்குகின்றபோது ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். இவர் அதிக அழகோடு இருந்தார். இதனால் இவருடைய தாய் இவரை சிறுவதிலேயே ஒரு பணக்கார இளைஞனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைத்தார். ஆனால் இவரோ, தான் யாரையும் மணக்கப் போவதில்லை, கிறிஸ்துவுக்கே தன்னை முழுமையாய் அர்ப்பணிக்கப் போவதாகவும் இருக்கிறேன் என்று சொல்லி, தன்னுடைய இலட்சியத்தில் மிக உறுதியாக இருந்தார். இவருடைய தாய் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், இவருடைய தந்தை கத்ரீனுடைய முடிவுக்கு ஆதரவு அளித்தார். அதனால் இவர் வீட்டில் இருந்த ஓர் அறையில் தன்னை அடைத்துக்கொண்டு ஜெபத்திலும், தவத்திலும் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாய் செலவழித்தார்.

கத்ரீன் தனியாய் இருந்து ஜெபித்தபோது நிறைய காட்சிகளைக் கண்டார். அதில் ஒரு காட்சியில் மரியாவும் இயேசுவும் அவரைப் பார்க்க வந்தனர். இயேசு அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்துவிட்டுச் சென்றார். அது கத்ரீனுடைய கண்களுக்குத் தவிர வேறு யார் கண்களுக்கும் தெரியவில்லை. இவர் தனியாய் இருந்து ஜெபித்த தருணங்களில் நற்கருணையை மட்டுமே உணவாக உட்கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இவருக்கு பதினெட்டு வயதை அடைந்தபோது டொமினிகன் மூன்றாம் சபையில் உறுப்பினராகச் சேர்ந்து தனி அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு வாழ்வதை விடுத்து, வெளியுலக வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடித்திக்கொள்ளத் தொடங்கினாள்.

இவர் வாழ்ந்த காலத்தில் திருச்சபையில் நிறைய குளறுபடிகள் நடந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானது திருத்தந்தை பதினோறாம் கிரகோரியார் பிரான்சில் உள்ள அவின்ஞன் என்ற இடத்தில் வீட்டுச் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தார். கத்ரீன்தான் பெருமுயற்சி எடுத்து, அவரை உரோமைக்கு கொண்டு வந்தார். இவருக்குப் பிறகு திருத்தந்ததை ஆறாம் அற்பன் வந்தார். அவருக்கும் இவர் பேருதவியாக இருந்து வந்தார். அந்த காலகட்டத்தில் திருச்சபையை மேலும் உலுக்கிய நிகழ்வு இயேசு வாழ்ந்த புனித பூமியான பாலஸ்தீன் இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எனவே இவர் திருத்தந்தையை அணுகி, எதிரிகள் மீது போர்தொடுத்து புனித நாடுகளை மீட்டுத்தர கேட்டுக்கொண்டார். அதன்படி எதிரி நாட்டவர்மீது சிலுவைப் போர்கள் தொடக்கப்பட்டு, புனித நாடுகளை மீட்கும் பணி தொடங்கியது.

கத்ரீன் நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவதில் வல்லவராக இருந்தார். குறிப்பாக அவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, சுமூகமான நிலை ஏற்பட பெரிதும் பாடுபட்டார். ஒருமுறை இவரி பிசா என்ற நகரில் இருந்த ஆலயத்தில் அமர்ந்து இறைவனிடம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஐந்து காய வரங்களைப் பெற்றார். இதனால் இவர் பெரிதும் அவஸ்தைப் பட்டார். ஆண்டவரிடம் இதை தன்னிடமிருந்து நீக்கிவிடுமாறு கேட்டார். ஆனால் ஆண்டவரோ ஐந்து காயங்களும் அவருக்கு இருக்குமாறு பணித்தார். இவர் ஜெப வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் தந்தார். இவருடைய Dialogue என்ற புத்தகம் மிகவும் பிரசித்து பெற்றது.

இப்படி பல்வேறு பணிகளை திருச்சபைக்கு செய்த கத்ரீன் 1382 ஆம் ஆண்டு ரோம் நகரில் இறையடி சேர்ந்தார். 1461 ஆம் ஆண்டு இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 1970 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஆறாம் சின்னப்பர் இவரை திருச்சபையின் மறைவல்லுனராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சியென்னா நகர் கத்ரீனின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்கருணை ஆண்டவரிடம் பக்தி

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது இவர் எந்தளவுக்கு நற்கருணை ஆண்டவரிடத்தில் ஆழமான, அசைக்க முடியாத பக்தி கொண்டு வாழ்ந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவர் நற்கருணையை மட்டுமே உணவாக உட்கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்தார். ‘நற்கருணையை வாழ்வளிக்கும் உணவாகப் பார்த்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நற்கருணை ஆண்டவரின் ஆழமான பக்திகொண்டு வாழ்கிறோமா? அவரை நம்முடைய வாழ்வில் உணர்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு, இவ்வுணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்” (யோவான் 6: 51). இயேசுவின் இவ்வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை, வாழ்வளிக்கும் உணவாகிய நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை நம்முடைய வாழ்வில் உணர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

1880 களில் ஓர் ஏழை குடும்பம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து, பிரான்சு நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் ஒரு சொகுசுக் கப்பலில் பயணம் செய்யத் தீர்மானித்தது. அவர்கள் இந்த கப்பல் பயணத்திற்காக தங்களிடமிருந்த எல்லாவற்றையும் செலவு செய்திருந்தார்கள். செலவுக்கு என்று சிறிதளவே அவர்களிடத்தில் பணம் இருந்தது. அதனால் நீண்டநாட்கள் இருக்கும் கப்பல் பயணத்திற்கு என்று கப்பலில் வழங்கப்படும் உணவை வாங்கி உண்டால், அதிக செலவாகும் என்று நினைத்து, தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டுவந்த ரொட்டித் துண்டையே உண்டு வந்தார்கள். இதைக் கவனித்து வந்த அந்தக் கப்பலில் பயணம் செய்துவந்த சக பயணி ஒருவர், “எதற்காக இந்த ரொட்டித் துண்டை உண்டு வருகிறீர்கள். கப்பலில் வழங்கப்படும் உணவை உண்ணலாமே?” என்றார். அதற்கு அவர்கள், “இங்கே வழங்கப்படும் உணவு விலை அதிகமாக இருக்கம் அல்லவா, அதனால்தான் எங்களுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை உண்கிறோம்” என்றார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அந்த சக பயணி, “பயணத்திற்காக நீங்கள் செலுத்திய தொகையிலேயே உணவுக்காக பணமும் அடங்கியிருக்கிறது” என்றார். இதைக் கேட்டு அவர்கள் தங்களுடைய விதியை நொந்துகொண்டார்கள்.

கப்பலில் வழங்கப்படும் உணவு இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என்ற உண்மை கூடத் தெரியாமல் இருந்த அந்த குடும்பத்தாரைப் போன்று, நாமும் இலவசமாக இறைவனின் அருளைத் தரும் நற்கருணைப் பிரசன்னத்தை நம்முடைய வாழ்க்கையில் உணராதவர்களாக இருக்கின்றோம். ஆகவே, தூய கத்ரீனைப் போன்று நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக வாழ்வோம். அதனால் நாம் திடம்பெற்ற மக்களாய் வாழ்வோம்.

அமைதியின் தூதுவர்களாய் வாழவேண்டும்

தூய சியென்னா நகர் கத்ரீன் நாடுகளுக்கு இடையேயும், திருச்சபையிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கு மிகப்பெரிய காரணியாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய முயற்சியாலேயே பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்தன. இவ்வாறு அவர் அமைதியின் தூதுவனாய் இந்த மண்ணுலகில் விளங்கினார். மலைப்பொழிவில் ஆண்டவர் இயேசு கூறுவார், “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவார்கள்” (மத் 5:9). நாம் இயேசு காட்டும் வழியில், தூய கத்ரீன் அவர்களது வழியில் நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மேலை நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த இசையமைப்பாளர் பாப்லோ காசல் என்பவர் ஆவார். இவர் அடிக்கடி சொல்லக்கூடிய செய்தி, “நான் அமைக்கும் இசை கோர்பு, பாடல்கள் அனைத்தும் இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்தவே. என் இசையைக் கேட்போரது இதயத்தில் ஒருவிதமான அமைதி பரவும். அந்த அமைதியே நான் இந்த உலகிற்கு கொடுக்க நினைத்தது”. பாம்லோ காசல் இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சி வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனாலும் அது சிறப்பான முயற்சியாகும். நாமும் நம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு இந்த உலகில் அமைதியை ஏற்படுத்த முயலவேண்டும்.

ஆகவே, தூய சியென்னா கத்ரீனின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் அதிக பக்தி கொண்டு வாழ்வோம். இந்த உலகில் அமைதியை ஏற்படுத்தும் கருவிகளாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image