St. Pius V St. Erkenwald

ஏப்ரல் 30

தூய ஐந்தாம் பத்திநாதர்

mary

mary

தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)

நாம் வெற்றியாளர்களாக மாற அல்ல, நம்பிக்கைக்குரியவர்களாக வாழவே இறைவன் நம்மைப் படைத்துள்ளார்” (அன்னை தெரசா)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஐந்தாம் பத்திநாதர் எனப்படும் அந்தோனி மைக்கேல் 1504 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 17 ஆம் நாள், இத்தாலியில் உள்ள போஸ்கோ என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனவே இவர் தன்னுடைய பதினான்கு வயதில் டொமினிக்கன் சபையில் சேர்ந்து, அடுத்த பத்தாண்டுகளில் குருவாகவும், அதன்பின் வந்த ஆண்டுகளில் ஆயராகவும் கர்தினாலாகவும் 1566 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் நாள் திருத்தந்தையாகவும் மாறினார்.

அந்தோனி மைக்கேல் திருத்தந்தையாக உயர்ந்தபின் ஐந்தாம் பத்திநாதர் என்ற பெயரைத் தாங்கியவராய் திருச்சபைக்கு பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக 1545 லிருந்து 1563 வரை நடைபெற்ற திரிதெந்திய (Council of Trent) சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மிகத் துணிச்சலாக நடைமுறைப் படுத்தினார். அது மட்டுமல்லாமல் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினை சபைகளின் கோட்பாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். இதனால் இவருக்குப் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றையெல்லாம் இவர் கண்டுகொள்ளாமல், மிகத் துணிச்சலாக திருச்சபைக்காக உழைத்து வந்தார்.

திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள் நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும் கடுமையாக உழைத்தார். குறிப்பாக இங்கிலாந்து அரசியான முதலாம் எலிசபெத்தை திருச்சபையோடு இணைப்பதற்கு அரும்பாடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பா கண்டத்தில் இருந்த ஏனைய நாடுகளையும் திருச்சபையோடு இணைப்பதற்கு பாடுபட்டார் அதுவும் தோல்வியிலேதான் முடிந்தது. இப்படி பல்வேறு தோல்விகளை அவர் சந்தித்தாலும் திருச்சபைக்காக எதையும் செய்யத் துணிந்து வந்தார்.

1571 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் நாள் துருக்கியப் படைகள் ஐரோப்பிய நாடுகள்மீது படையெடுத்து வந்தன. இதனை உணர்ந்த திருத்தந்தை அவர்கள் கிறிஸ்தவப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, கிறிஸ்தவ நாடுகளைக் காப்பாற்றினார். திருத்தந்தை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தளவில் அவர் எப்போதும் டொமினிக்கன் சபையிலிருந்து கற்றுக்கொண்டு அனைத்துப் புண்ணியங்களையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். இரவில் நீண்டநேரம் முழந்தாள் படியிட்டு ஜெபித்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார்; ஏழை எளியவருக்கு தான தர்மங்களை நிறைய வழங்கினார்; நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் படுத்தினார்.

இப்படி திருச்சபைக்காக பல்வேறு பணிகளைச் செய்துவந்த திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1572 ஆம் ஆண்டு, மே திங்கள் 1 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தந்தை தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தோல்விகள் என்பவை வெறும் தோல்விகள் அல்ல, அவை வெற்றிக்கான படிக்கட்டுகள்

தூய ஐந்தாம் பத்திநாதருடைய வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்ற நம்முடைய மனதில் எழுகின்ற ஒரே சிந்தனை, வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற தோல்விகளை வெறும் தோல்விகளாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

திருத்தந்தை அவர்கள் நாடுகளை ஒருங்கிணைப்பதிலும் அவர்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் பல தோல்விகளைச் சந்தித்தார். அந்தத் தோல்விகளை எல்லாம் கண்டு மனமுடைந்து போகாமல், தொடர்ந்து இயேசுவுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைத்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் கடைசியில் துருக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் சந்திக்கின்ற தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெறுவதுதான் சிறப்பான ஒரு காரியமாகும்.

இந்த இடத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தோல்வியைக் குறித்து சொல்கின்ற கருத்துகளையும் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பது பொருத்தமானது “என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்”. தோல்வி என்பது ஒரு சம்பவம்தான், அதை நினைத்து வருந்துவதால் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற வைரமுத்துவின் வார்த்தைகள் கவனிக்கப்படவேண்டியவை.

ஆகவே, தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தொடர்ந்து இறைவனுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைப்போம். தோல்விகளைக் கண்டு துவளாமல், அவற்றிலிருந்து பாடம் கற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image