St. Antonius of Florence St. Athanasius St. Wiborada

மே 2

தூய அத்தனாசியஸ்

mary

mary

தூய அத்தனாசியஸ் (மே 02)

வாழ்க்கை வரலாறு

‘தப்பறைக் கொள்கைகளுக்கு மிகப்பெரிய சம்மட்டியாய்’ விளங்கிய அத்தனாசியஸ் கி.பி. 295 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள அலெக்ஸ்சாந்திரியா என்னும் நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் யார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை.

அத்தனாசியாரின் காலத்தில் ஆரியஸ் என்னும் குருவானவர் ஆரியபதம் என்னும் தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தார். இக்கொள்கை இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்து வந்தது. அலெக்ஸ்சாந்திரியா நகர ஆயருக்குச் செயரலாக இருந்து, பின்னர் ஆயராகவே உயர்ந்த அத்தனாசியஸ் ஆரிய பதத்தை மிகக் கடுமையாக எதிர்த்து, இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மை நிறுவுவதற்குப் பாடுபட்டார். இதற்கிடையில் 325 ஆம் ஆண்டு நைசேயா (Nicaea) சங்கம் கூடியது. இச்சங்கம் ஆரியபதத்தைக் கடுமையாக எதிர்த்தது. மட்டுமல்லாமல் அத்தப்பறைக் கொள்ளையைப் பரப்பி வந்த ஆரியஸ் என்னும் குருவை திருச்சபையிலிருந்து வெளியேற்றியது.

இவ்வாறு திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆரியஸ் தன்னோடு ஒருசில ஆட்களைச் சேர்ந்துக்கொண்டு ஆயர் அத்தனாசியசுக்கு மிகவும் தொல்லை கொடுத்துக்கொண்டே வந்தார். எந்தளவுக்கு என்றால் ஏறக்குறைய பதினேழு ஆண்டுகள் அவர் அலெக்ஸ்சாந்திரிய நகரில் ஆயராக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்படியிருந்தாலும் அத்தனாசியஸ் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இப்படி திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் தப்பறைக் கொள்கைகளிலிருந்தும் காப்பாற்றிய அத்தனாசியஸ் 373 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அத்தனாசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

துணிவோடு இருத்தல்

தூய அத்தனாசிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடம் இருந்த துணிச்சல்தான். அத்தனாசியசைப் பற்றி சொல்லப்படுகின்ற ஓர் சொல்லாடல் “Athanasius Against the World” என்பதாகும். அதாவது தூய அத்தனாசியஸ் இந்த உலகப் போக்கில் வாழவில்லை. உலகம் காட்டுகின்ற நெறிகளுக்கு எதிராகவே வாழ்ந்தார். அதனால் அவர் நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தார். அப்படியிருந்தாலும் அவர் இறுதிவரைக்கும் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். தூய அத்தனாசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து துணிச்சலை கொண்டிருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம்முடைய இந்திய நாட்டை ஆண்ட பிரதமர்களில் ‘இரும்பு மனுசி’யாக அறியப்படுகின்றவர் திருமதி. இந்திரக் காந்தி அவர்கள். அவர் பல்வேறு காரியங்களை மிகத் துணிச்சலாக செய்துவந்தார். அதனால் அவருக்கு எப்போதும் அச்சுறுத்தல் மற்றும் எதிர்ப்புகள் இருந்துகொண்டே இருந்தன. இதற்கிடையில் ஒருநாள் இந்திரா காந்தி அம்மையார் ஷாந்திநிகேதனில் இருந்த தன்னுடைய ‘நோய்வாய்பட்டிருந்த’ அன்னையைப் பார்ப்பதற்காக தனியாகச் சென்றார். இதைப் பார்த்து ஒருவர் (ரவீந்தரநாத் தாகூர்) அவரிடம், “உங்களுக்குத்தான் நிறைய எதிர்ப்புகள் இருகின்றனவே. எதற்காக இப்படி தனியாகச் செல்கிறீர்கள். துணைக்கு யாரையாவது கூட்டிக்கொண்டு போகலாமே?” என்று கேட்டார். அதற்கு அவர், “என்னுடைய தந்தை என்னை வளர்கின்றபோது துணிச்சலாகவே வளர்த்திருக்கின்றார். அதனால் நான் தனியாகப் பயணிப்பதற்கு குறித்து எனக்குப் பயமில்லை” என்றார். இதைக் கேட்டு ரவீந்தரநாத் தாகூர் மிகவும் மிகவும் வியந்து போனார்.

தூய அத்தனாசியாரிடன், இந்திரா காந்திடம் இருந்த துணிச்சல் நம்மிடம் இருக்கின்றதா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் செய்துவருகின்ற பணியில் ஏதாவது எதிர்ப்போ அல்லது ஆபத்தோ வந்தால் பின்வாங்குகின்றோம். ஆனால் அத்தனாசியார் அப்படியில்லை. அவருக்கு தன்னுடைய பனிக்காலம் முழுவதும் எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் தன்னுடைய கொள்கையில் மிக மிக உறுதியாக இருந்தார். தூய அத்தனாசியாரிடம் இருந்த துணிச்சலை நம்மிடமும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

யோசுவா புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்வு. யோசுவா ஆண்டவராகிய கடவுளைப் பார்த்து, இஸ்ரயேல் மக்களை எப்படி வழிநடத்துவது என்று கேட்கும்போது ஆண்டவராகிய கடவுள் அவரிடம், “வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமானா நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்” (1:9) என்பார். அதன்பிறகு யோசுவா இஸ்ரயேல் மக்களை நல்ல விதமாய் வழிநடத்திச் செல்வார். யோசுவாக்குச் சொன்ன அதே ஆறுதல் மொழிகளைத்தான் இறைவன் நமக்கு சொல்கின்றார். நாமும் துணிவுள்ள மக்களாக வாழ முயற்சிப்போம்.

ஆகவே, தூய அத்தனாசியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று விசுவாசத்தை உறுதியாகக் காத்துக்கொள்ள துணிவுள்ளவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image