St. Florian

மே 4

தூய ப்ளோரியன்

mary

தூய ப்ளோரியன் (மே 04)

என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிடமகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார் (லூக் 9: 26)

வாழ்க்கை வரலாறு :

ப்ளோரியன், 250 ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவில் உள்ள செட்டியு என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குழந்தைப் பருவத்தைக் குறித்த செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை.

ப்ளோரியன், உரோமை அரசன் டயோக்ளசியனின் படைப்பிரிப்பில் படைத்தளபதியாகப் பணிசெய்து வந்தார். அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உரோமைக் கடவுள்களை அவமதிக்கின்றார்கள் என்றும் நிக்கோமீதியாவிலிருந்த அரண்மனையின் அழிவுக்கு அவர்களே காரணம் என்ற தவறான செய்தி பரவி வந்தது. இதைக் கேள்விப்பட்ட அரசன் டயோக்ளசியன் சினம்கொண்டான். அவன் தன்னுடைய ஆளுநன் அக்குலினுசை அழைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றுபோடச் சொன்னான்.

அரசன் விடுத்த ஆணையை அக்குலினுஸ் தனக்குக் கீழ் இருந்த படைத்தளபதிகள் வழியாக செயல்படுத்த நினைத்தான். எனவே அவன் படைத்தளபதிகள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் கிறிஸ்தவர்களைக் கொன்றுபோடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அவனுடைய உத்தரவுக்கு எல்லாரும் கீழ்படிந்து நடந்தார்கள். ப்ளோரியனைத் தவிர. ப்ளோரியனோ, “என்னால் கிறிஸ்தவர்களை எல்லாம் கொன்றுபோட முடியாது. ஏனெனில் நான் ஓர் உண்மைக் கிறிஸ்தவன்” என்றார். இதைக் கேட்டு வெகுண்டெழுந்த அக்குலினுஸ் செய்தியை அரசன் டயோக்ளசியனிடம் சொல்ல, அவன் ப்ளோரியனைக் கொன்றுபோட உத்தரவிட்டான்.

அக்குலினுசோ ப்ளோரியனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தான், “ப்ளோரியனே! நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உரோமைக் கடவுளை வணங்கு. அப்படிச் செய்தால் நான் உன்னை உயிரோடு விட்டுவிடுகிறேன். இல்லையென்றால் நான் உன்னை உயிரோடு எரித்துவிடுவேன்” என்றான். அக்குலினுஸ் சொன்ன வார்த்தைக்கெல்லாம் ப்ளோரியன் மயங்கிவிடாமல், “நீங்கள் என்னை தீயில் போட்டு எரித்தாலும் என்னுடைய ஆன்மா தீயின் வடிவில் விண்ணகத்திற்குச் செல்லும்” என்றார். இதைக் கேட்டு இன்னும் சினங்கொண்ட அக்குலினுஸ் ப்ளோரியனின் தோலை உரித்து கட்டிவைத்து அடித்தான். அப்போதும் அவர் தன்னுடைய விசுவாசத்திலிருந்து சிறிதளவுகூட மாறவில்லை. எனவே அவன் ப்ளோரியனின் உடலை ஒரு கயிற்றில் வைத்து நன்றாகக் கட்டி ஏன்ஸ் கடலில் போட்டு ஆழ்த்தினான்.

இது நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு ப்ளோரியனின் இறந்த உடல் கரையொதுங்கியது. அவருடைய உடலை எடுத்த வலேரியா என்ற பெண்மணி அவருடைய உடலை நல்லடக்கம் செய்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ப்ளோரியனின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

துணிவோடு ஆண்டவருக்குச் சான்றுபகர்தல்

தூய ப்ளோரியனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய சிந்தனை ஒன்றே ஒன்றுதான். அதுதான் துணிவுடன் ஆண்டவருக்குச் சான்று பகரவேண்டும் என்பது ஆகும். தூய ப்ளோரியனுக்கு எத்துனை ஆபத்து வந்தபோதும், ஏன் உயிரே போகக் கூடிய சூழல் வந்தபோதும் தன்னுடைய விசுவாசத்திலிருந்து அவர் மாறாமல், துணிவுடன் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார். தூய ப்ளோரியனைப் போன்று நாம் துணிவோடு ஆண்டவருக்குச் சான்று பகர்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருத்தூதர் பணிகள் நூல் 4 ஆம் அதிகாரம், 1 லிருந்து 22 ஆம் வசனம் வரை உள்ள பகுதியில் இடம்பெறக்கூடிய நிகழ்வில், திருத்தூதர்கள் ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகர்ந்ததால், யூதத் தலைமைச் சங்கத்தினர் முன்பாக நிறுத்தி வைக்கப்படுவார்கள். அப்போது தலைமைக் குரு திருத்தூதர்களைப் பார்த்து, “நீங்கள் இந்த இயேசுவைக் குறித்து கற்பிக்கக்கூடாது” என்று சொல்வார். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது” என்று மிக உறுதியாகச் சொல்வார்கள். அவர்களிடம் இருந்த துணிச்சலைக் கண்டு, யூத தலைமைச் சங்கத்தாரால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

தூய ப்ளோரியனைப் போன்று, திருத்தூதர்களைப் போன்று துணிவோடு ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உயிருக்குப் பயந்து, மற்றவர்களின் ;பழிச்சொல்லுக்குப் பயந்து ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகர அஞ்சுகின்றோம். இத்தகைய சூழலில் தூய ப்ளோரியன் நமது கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார்.

ஆகவே, தூய ப்ளோரியன் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்கு துணிவுடன் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image