St. Maximus of Jerusalem St. Hilary of Arles St. Angelo

மே 5

தூய ஆஞ்சலோ

mary

தூய ஆஞ்சலோ

“யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்திப் பறைசாட்சிக்கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்” (மாற் 1: 14 – 15)

வாழ்க்கை வரலாறு

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூதாவில் உள்ள எருசலேமில், ஒரு யூதக் குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத்தில் இருந்த பெண் மிகவும் பக்தியானவள். ஒரு சமயம் அன்னை மரியா அந்தப் பெண்ணுக்குத் தோன்றி, “நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெசியா ஏற்கனவே வந்துவிட்டார்; உனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறக்கும். அவர்களில் ஒருவன் திருச்சபையில் பிதாபிதாவாகவும், மற்றவன் கார்மேல் சபையில் சேர்ந்து பின்னாளில் மறைசாட்சியாகவும் உயிர் துறப்பான்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

இந்தக் காட்சிக்குப் பிறகு அந்தப் பெண்ணும் அவளுடைய கணவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து, மரியா அந்தப் பெண்மணிக்குச் சொன்னது போன்று, அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ஆஞ்சலோ. ஆஞ்சலோ வளரும்போதே இறை அச்சத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கி வந்தார். கிரேக்கம், லத்தின், ஹீப்ரு போன்று மொழிகளிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். இப்படி நாட்கள் மிகவும் சந்தோசமாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், ஆஞ்சலோவின் பெற்றோர் இறந்து போனார்கள்.

ஆஞ்சலோவிற்கு பதினெட்டு வயது நடக்கும்போது அவர் கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் மிகவும் முன்மாதிரியான துறவியாக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவர் இயேசு அவருக்கு முன்பாகத் தோன்றி, “ஆஞ்சலோ! நீ உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு நற்செய்தி அறிவி” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். அப்போது ஆஞ்சலோவோ வேறெதுவும் யோசிக்காமல் உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்றார். போகிற வழியில் இருந்த பலேர்மோ என்ற இடத்தில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, 200 க்கு மேற்ப்பட்டவர்களையும் மனம் திருப்பினார். தொடர்ந்து அவர் லாகத்தா என்னும் இடத்திலும் நற்செய்தியை அறிவித்து பலரை மனம் திருப்பினார்.

லாகத்தா என்ற இடத்தில் அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது தவறான முறையில் வாழ்ந்துவந்த பெரேங்கினுஸ் என்பவனைக் குறித்துக் கேள்விப்பட்டார். உடனே அவர் பெரேங்கினுசிடம் சென்று அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினார். இதனால் அவன் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவனாய் நினைத்தான். அவன் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். எனவே, அவன் அதற்கான தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

ஒரு சமயம் ஆஞ்சலோ மக்களுக்கு முன்பாகப் போதித்துக் கொண்டிருக்கும்போது பெரேங்கினுசின் ஆட்களில் ஒருவன், கூட்டத்திற்குள் புகுந்து ஆஞ்சலோவை வெட்டிக் கொன்றுபோட்டான். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக, தன்னைக் கொல்லவந்தவனை மனதார மன்னித்துவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெரேங்கினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தீமை செய்தவருக்கு நன்மை

தூய ஆஞ்சலோவின் வாழ்வின் வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் தன்னைக் கொல்லவந்தவனையும் மன்னித்து, அவனுக்காக ஜெபித்தார் என்று அறிந்துகொள்கின்றோம். இவ்வாறு அவர் தீமை செய்வதவருக்கும் நன்மை செய்பவராக, பகைவரை மன்னிப்பவராக விளங்கினார். தூய ஆஞ்சலோவைப் போன்று நம்மால் தீமை செய்வதவர்களை மன்னிக்க முடிகின்றதா? அவர்களுக்கு தீமைக்குப் பதிலாக நன்மை செய்ய முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஹிட்லரின் வதைமுகாமில் சிலகாலம் சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, வெளியே வந்தவர் மார்டின் நிமொல்லர் என்பவர். பின்னாளில் அவர் பெரிய பிரபலமானார். அவர் வதை முகாமிலிருந்து வெளியே வந்தவுடன் சொன்ன செய்தி, “கடவுள் தன்னை பகைப்போருக்கும் ஏன் நம்மைப் பகைப்போருக்கும்கூட நன்மை அன்றி, தீமை செய்வது இல்லை” என்பதாகும். இவ்வார்த்தைகள் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. கடவுள் தனக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மை செய்வாரே அன்றி, தீமை செய்வதில்லை” எனவே நாம் அவரைப் போன்று தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே, தூய ஆஞ்சலோவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தீமை செய்வோருக்கும் நன்மை செய்வோம், ஆண்டவரின் நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

image