St. Edbert of Lindisfarne St. Dominic Savio

மே 6

தூய தொமினிக் சாவியோ (மே 06)

mary

தூய தொமினிக் சாவியோ (மே 06)

நிகழ்வு

1854 ஆம் ஆண்டு தொமினிக் சாவியோவிற்கு 12 வயது நடந்துகொண்டிருந்த சமயம். அப்போது திடிரென்று ஒருநாள் அவர் கடவுளின் மேலான அழைப்பை உணர்ந்தார். எனவே அவர் தன்னுடைய தந்தை சார்லஸ் சாவியோவை அழைத்துக்கொண்டு பங்குத்தந்தையாகிய தூய ஜான் போஸ்கோவிடம் சென்றார். அவரிடம், தான் ஒரு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். பின்னர் தொமினிக் சாவியோ ஜான் போஸ்கோவிடம், “நான் ஒரு தைக்கப்படாத துணியாக இருக்கிறேன், நீங்கள்தான் என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத் தைக்கவேண்டும்” என்று சொல்லி அவரிடத்தில் தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்தார். ஜான் போஸ்கோவும் அவரை இறைவனுக்கு உகந்த நல்ல மனிதராக வளர்த்தெடுத்தார்.

வாழ்க்கை வரலாறு

தொமினிக் சாவியோ வட இத்தாலியில் உள்ள முரியால்டோ என்ற ஊரில் 1842 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை சார்லஸ் சாவியோ, தாய் ப்ரிஜித் என்பவர் ஆவர். இவர் சிறுவயது முதலே ஆண்டவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். இவரது குடும்பமும் குடும்பச் சூழ்நிலையும் இவரை புனிதத்தில் வளர்த்தெடுத்தன; இவரது பெற்றோர் இவரை கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வளர்த்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் இவர் நான்கு வயதிலேயே தனியாக இருந்து இறைவனிடம் ஜெபிக்கும் திறமையைப் பெற்றுக்கொண்டார்.

தொமினிக் சாவியோ முதன்முறையாக நற்கருணை ஆண்டவரை உண்ட அந்த புனிதமான நாளைக் குறித்துக் குறிப்பிடும்போது, “வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானதும் அற்புதமானதுமான நாள் அது" என்பார். அந்தளவுக்கு அவர் முதன்முறையாக நற்கருணை ஆண்டவரை உண்ட அந்த நாள் அவருடைய உள்ளத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்திருந்தது. இவர் ஆலயத்தின் பீடச் சிறுவர்கள் குழுவில் இணைந்து திருப்பலியில் குருக்களுக்கு உதவி செய்தார்; அதிகாலை 5 மணிக்கே ஆலயம் சென்றுவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மழையிலும், குளிரிலும் இவர் ஆலயத்திற்கு தவறாமல் சென்றார்.

தன்னோடு பழகிய, தனக்கு அறிமுகமான சிறுவர் சிறுமியர் கெட்ட வார்த்தைகளைப் பேசியபோது தொமினிக் சாவியோ அவர்களைக் கண்டித்துத் திருத்தினார்; சண்டையிட்டுக் கொண்ட சிறுவர் சிறுமியரை சமாதானப்படுத்தி, அவர்களை அமைதி வழியில் நடக்கச் சொன்னார். பிறரை நல்வழிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தானும் தீய வழிகளிலிருந்து முற்றிளுமாக விலகி, களங்கமற்ற தூய்மையான புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்தார். தன்னுடைய செயல்கள் அனைத்தையும் இறைவனின் புகழ்ச்சிக்காக, மகிமைக்காக செய்துவந்தார்.

தொமினிக் சாவியோ பனிரெண்டு வயதை அடைந்தபோது குருமடத்தில் சேர்ந்தார். அங்கே இருந்த தூய ஜான் போஸ்கோவின் வழிகாட்டுதலின் பேரில் இறைவனுக்கு உகந்த புனிதமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தொமினிக் சாவியோ அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை ‘பாவம் செய்வதை விட சாவதே மேல்’ என்பதாகும். தொமினிக் சாவியோ 14 வயதை அடைந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமடைந்தார். 1857 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி தொமினிக் சாவியோ சாகும் தருவாயில் இருந்த தருணம் விண்ணகக் காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியினால் பரவசம் அடைந்து, “ஆகா, எவ்வளவு இன்பம் நிறைந்த அற்புத காட்சி!” என்று கூறியவாறே உயிர் துறந்தார்.

தொமினிக் சாவியோ இறந்ததும் தூய ஜான் போஸ்கோ இவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதத் தொடங்கினர். அது இவரது புனிதர் பட்டமளிப்பு நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக விளங்கியது. தொமினிக் சாவியோவின் புனிதர் பட்டமளிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்த அப்போதைய திருத்தந்தை 10 ஆம் பத்திநாதர், “தொமினிக் சாவியோ என்னும் இளைஞர் தான் திருமுழுக்கில் பெற்ற புனிதத்தைப் பழுதின்றி காப்பாற்றிக்கொண்டார்” என்று இவரைப் பற்றி புகழ்ந்து பேசினார். 1933 ஆம் ஆண்டு இவருக்கு வணக்கத்திற்குரியவர் பட்டம் வழங்கிய திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர், “தூய்மை, பக்தி, ஆன்மீகத் தாகம் ஆகியவற்றின் ஆற்றலால் சாவியோவின் கிறிஸ்தவ வாழ்வு நமக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று கூறினார்.

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தொமினிக் சாவியோவுக்கு 1950 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி அருளாளர் பட்டமும், 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி புனிதர் பட்டமும் வழங்கினார். அவர் தொமினிக் சாவியோவிற்கு புனிதர் பட்டம் அளித்தபோது வழங்கிய உரையில், “இளைஞர்கள் சாவியோவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து, தூய்மையில் நிலைத்து நின்ற சாவியோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இளைஞர்களின் பாதுகாவலராக விளங்கும் தூய தொமினிக் சாவியோவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தீமையை நாடாமல், நன்மையை நாடுவோம்

தூய தொமினிக் சாவியோ ‘பாவம் செய்வதை விட சாவதே மேல்’ என அடிக்கடி கூறுவதாக அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம். அவர் பழி பாவத்திற்கு அஞ்சி வாழ்ந்தார். நாம் பழி பாவத்திற்கு அஞ்சி வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார். “இன்றைய உலகில் வாழும் மக்கள், தாங்கள் செய்வது பாவம் என்றே தெரியாமல் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள்”. இது எவ்வளவு வேதனையான விடயம். பாவம் என்று தெரியாமலே பாவம் செய்கிறார்கள் என்றால் மக்களின் உள்ளம் மழுங்கிப் போய்விட்டது என்றே நாம் எண்ணத் தோன்றுகிறது.. ஆகையால் நாம் பாவத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றால், முதலில் நாம் நமது பாவத்தைக் குறித்த தெளிவு, தன்னுணர்வு பெறவேண்டும். அப்போதுதான் நாம் அதிலிருந்து விடுதலை பெற முடியும்.

நாம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவது மட்டும் போதுமா? என்றால் நிச்சயமாக இல்லை. உண்மையான கிறிஸ்துவன்/ கிறிஸ்தவள் நன்மை செய்யக்கூடியவ(ளா)னாக இருக்கவேண்டும். அதைத்தான் இறைவார்த்தை நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது. இறைவாக்கினர் ஆமோஸ் நூலில் வாசிக்கின்றோம், “நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது படைகளின் ஆண்டவர் உங்களோடு இருப்பார். (ஆமோ 5:14). ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் தீமையை, பாவத்தை விளக்கி நன்மை செய்யக்கூடிய நல்வழியில் நடக்கும் மக்களாகவேண்டும். நல்வழியில் நடப்பது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. அதற்காக நாம் நல்ல சிந்தனைகளை, நல்ல எண்ணங்களை நம்முள் வளர்த்தெடுத்து, அதன்படி வாழ்வதற்கு முயற்சி எடுக்கவேண்டும். அப்போதுதான் நாம் இறைவனுக்கு உகந்த மக்களாக மாறமுடியும்.

ஒரு தாத்தாவும் பேரனும் பேசிக்கொண்டார்கள். அப்போது தாத்தா பேரனிடம், “உன் மனதில் இரு ஓநாய்களுக்கிடையே ஓயாது சண்டை நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு ஓநாய் தீயது- கோபம், பொறாமை, கர்வம், பேராசை, பொய் ஆகியவற்றைக் கொண்டது. மற்றொன்று நல்லது-அன்பு, அமைதி, நம்பிக்கை, பணிவு, இன்பம், உண்மை நிறைந்தது”. ஆர்வத்தை அடக்க முடியாத பேரன் தாத்தாவைக் குறுக்கிட்டுக் கேட்டான் “தாத்தா, சண்டையில் எது வெல்லும்?”. தாத்தா புன்முறுவலுடன் அமைதியாகத் தொடர்ந்தாரார், “எதற்கு நீ தீனி போடுகிறாயோ, அது”. நாம் தீமையை, பாவத்தை முறியடித்து நன்மையை மட்டும் செய்கிறபோது நம்முடைய உள்ளம் இறைவன் வாழும் இல்லம் என்பது உறுதி.

ஆகவே, தூய தொமினிக் சாவியோவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், அவரைப் போன்று தீமை செய்வதற்கு அஞ்சி வாழ்வோம், நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

image