St. Pancras

மே 12

தூய பங்கிராஸ் (மே 12)

mary

தூய பங்கிராஸ் (மே 12)

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 12: 24)

பங்கிராஸ், பிரிஜியா நாட்டில் (தற்போதைய துருக்கி) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில மாதங்களிலே இவருடைய பெற்றோர் இறந்து போனார்கள். இதனால் இவர் தனது மாமாவின் வளர்ப்பிலே வளர்ந்து வந்தார்.

ஒரு சமயம் வேலை விசயமாக பங்கிராசின் மாமாவிற்கு உரோமைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை பெறப்பட்டது. எனவே அவர் பங்கிராசை தனியாக விட்டுவிட விரும்பாமல், அவரை தன்னோடு கூட்டிக்கொண்டு உரோமை நகருக்குச் சென்றார். அங்கு சென்ற சில நாட்களிலேயே இருவரும் இயேசுவின் வார்த்தையால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள்.

இதற்கிடையில் உரோமையை ஆண்டுவந்த டையோகிளசியன் என்ற மன்னன் கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராகச் செயல்படுகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்களை கொலை செய்ய ஆணையிட்டான். அதன்பேரில் வெறும் 14 வயதே ஆன பங்கிராசும் அவருடைய மாமாவும் மறைசாட்சியாக உயிர் துறந்தார்கள்.

பங்கிராசின் இறப்புக்குப் பிறகு அவருடைய புகழ் எங்கும் பரவியது. தூய அகுஸ்தினார் தான் கட்டி எழுப்பிய முதல் ஆலயத்திற்கு பங்கிராசின் பெயரையே சூட்டினார். பங்கிராசை சிறப்பிக்கும் வண்ணமாக இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கக்கூடிய ஓர் இரயில் நிலையத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. மேலும் 508 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை பங்கிராசின் கல்லறையில் ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். அது இன்றளவும் புகழ்பெற்ற ஒரு திருத்தலமாக விளங்கி வருகின்றது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய பங்கிராசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம்

தூய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றுகின்ற எண்ணமெல்லாம், பங்கிராஸ் வெறும் 14 வயதிலே மறைசாட்சியாக உயிர்துறந்திருக்கின்றாரே, அவரைப் போன்று நம்மால் உயிர்துறந்து ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர முடியுமா? என்பதுதான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்வார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கின்ற எவரும் வாழ்வடைவார் (மத் 16: 24,25). ஆம், இயேசுவுக்காக உயிர் துறக்கின்ற யாரும் அதைக் காத்துக்கொள்வார் என்பதுதான் உண்மை. தூய பங்கிராஸ் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் தந்தார், அதனால் நம்முடைய மனங்களில் நிறைந்திருக்கின்றார். நாமும் இயேசுவுக்காக நம்முடைய உயிரை இழக்கத் துணிந்தோம் என்றால் என்றும் வாழ்வடைவோம் என்பது உறுதி.

இந்த இடத்தில் பிரேசில் நாட்டில் மறைப்பணி செய்து, கிறிஸ்துவுக்காக உயிர் துறந்த ஆர்தர் டிலீ (Arthur Tylee) என்பவருடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துக் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

அவர் பிரேசிலுக்கு மறைப்பணி செய்யப் புறப்பட்டபோது அவருடைய உறவினர் ஒருவர் அவரிடம், “நீங்கள் தயவு செய்து பிரேசில் நாட்டிற்கு மறைப்பணி செய்யப் போகவேண்டாம், அப்படிச் சென்றால் அங்கு உங்களுடைய உயிருக்கு உத்திரவாதம் இல்லை” என்று சொன்னார். அதற்கு ஆர்தர் டிலி அவரிடம், “கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பதை நான் பெருமையாகக் கருதுகின்றேன். ஒருவேளை நான் அங்கு சென்று பணியாற்றுகின்றபோது அங்கிருப்பவர்கள் என்னுடைய உயிரை எடுத்தால், அதை நான் இறைத் திருவுளமாக எடுத்துக்கொள்வேன். அப்படி இல்லையென்றால் நான் என் வாழ்நாள் முழுக்க இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வேன்” என்றார்.

அவர் இவ்வாறு சொல்லிவிட்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று மறைப்பணி ஆற்றி வந்தார். ஒருசில ஆண்டுகள் கழித்து அங்கிருந்த கயவர்களால் அவர் கொலை செய்யப்பட்டார்; இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

இயேசுவுக்கு தன்னுடைய உயிரைத் தருவது மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம் என்று சொல்லி, அதன்படியே உயிர் துறந்த ஆர்தர் டிலி நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். தூய பங்கிராசும் அப்படித்தான் கிறிஸ்துவுக்காக உயிர்துறப்பதை பெருமையாக கருதினார்.

ஆகவே, தூய பங்கிராசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image