St. Vincent Of Lerins Our Lady of Perpetual Help

மே 24

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (மே 24)

mary

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (மே 24)

“சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவளித்து வந்தார் (யோவா 19: 25-27)

வரலாறு

திருச்சபை ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு விதமான நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்தது என்பது யாவரும் அறிந்த ஒரு விஷயம். திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக இருந்த சமயத்தில் திருச்சபை புதுவிதமான பிரச்சனை ஒன்றைச் சந்தித்தது. அது என்னவெனில் மாவீரன் (?) நெப்போலியன் திருத்தந்தை ஏழாம் பத்திநாதரைப் பிடித்து சவானா என்ற இடத்தில் சிறை வைத்தான். 1808 ஆம் ஆண்டிலிருந்து 1814 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 6 ஆம் ஆண்டுகள் சிறையில் இருந்த திருத்தந்தை பலவிதமான சித்ரவதைகளை அனுபவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1814 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 17 ஆம் நாள் திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் விடுதலையாகி உரோமை நகருக்கு வந்தார். அவர் உரோமை நகருக்கு வரும் வழியில் இருந்த அனைத்து அன்னையின் ஆலயங்களுக்கும் சென்று தான் விடுதலையானதற்கு அன்னைக்கு நன்றி செலுத்தினார். மட்டுமல்லாமல் இதன் பொருட்டு செப்டம்பர் 18 ஆம் வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடப் பணித்தார். இதற்கிடையில் திருத்தந்தை அவர்களை சிறைப்பிடித்து வைத்து பலவிதங்களில் அவரைச் சித்ரவதை செய்த நெப்போலியன் வாட்டர்லூப் என்ற இடத்தில் வீழ்ச்சி அடைத்தான்.

இதைத் தொடர்ந்து 1815 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாளில் ‘கிறிஸ்தவர்களின் சகாய அன்னை’ என்று இந்த விழாவை திருத்தந்தை அவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தையைத் தொடர்ந்து தூய தொன் போஸ்கோ கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி பல இடங்களிலும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார். அது மட்டுமல்லாமல், அந்த அன்னையின் பேரில் அருட்சகோதரிகளுக்கு என்று ஒரு துறவற சபையையும் ஏற்படுத்தினார். இவ்வாறு கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி எங்கும் பரவியது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை நினைவு நாளைக் கொண்டாடும் நாம், இந்நாள் நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அபயம் தர அன்னையை வேண்டுவோம்!

இந்த நாள் நமக்குச் சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, நாம் நம்முடைய இன்னல் இக்கட்டுகளில் நமக்கு சகாயம் தரும் (சகாய) அன்னையின் உதவியை நாட வேண்டும் என்பதாகும்.

அபயம் வேண்டி அன்னையை நாடியவருக்கு அன்னை பலமுறை அபயம் தந்திருக்கின்றாள். அதில் மிகச் சிறப்பான ஒரு நிகழ்வு இது.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய படையானது மேல்திசை நாடுகள்மீது அதாவது கிறிஸ்தவ நாடுகளின்மீது படையெடுத்து வந்தது. இதனால் கிறிஸ்தவ நாடுகள் அனைத்தும் நடுங்கி ஒடுங்கிக் கொண்டிருந்தன. மக்கள் அழிவின் வாசலிலே தாங்கள் நிற்பதாக எண்ணி கொலை நடுக்கம் கொண்டனர். கிறிஸ்தவ நகரங்கள் ஆட்டங்கண்டன. துருக்கியரின் படையெடுப்பாலும் அவர்களது போர் திறமையாலும் வெற்றிமேல் வெற்றிச்சூடி நாடுகளையெல்லாம் சூறையாடி தன் ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி முன்னேறிக் கொண்டு வந்ததால் அவைகளை கண்டவர்கள் நிலைகுலைந்து விட்டனர். கடலிலே கப்பலோடு கப்பல் மோதின. கடும் போர் ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் லெப்பாந்தோ கடலில் தொன் ஜூவான் தளபதியின் படைகளுக்கும் துருக்கியப் படைகளுக்கும் இடையே பெரும் போர் மூளவே யாருக்கு வெற்றி என்ற தவிப்பும், எதிரியின் எண்ணற்ற வீரர்களையும் அவர்களின் பலத்தையும் கண்ட கிறிஸ்துவ உலகத்தினர் சொல்லொண்ணா துன்பம் அடைய கண்ணீர் கண்களிலே மல்க கன்னிமரியின் அபயம் தேடி கைவிரித்து வேண்டினர். அந்த அவல நேரத்தில் கன்னிமரி அபயம் அளித்தாள். ஆம், எதிரிகளுக்கு சாதகமாக வீசிய காற்று திடீரென அற்புதவிதமாக கிறிஸ்தவ போர் வீரர்களுக்குத் துணையாக திசைமாறி வீச கப்பல்கள் மோதி சிதறின. தீப்பற்றியெரிந்தன. இதனால் கிறிஸ்துவ படை துருக்கியரை துரத்தி முறியடித்து வெற்றி வாகை சூடியது.

அன்னையானவள் தன்னை அபயம் எனத் தேடும் தன் மக்களுக்கு எந்நாளும் அபயம் தருவாள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, கிறிஸ்தவர்களின் சகாயமாக இருக்கும் அன்னையிடம் அடைக்கலம் புகுவோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

image