St. Bede The Venerable St. Gregory 7
St. Madeleine Sophie Barat St. Zenobius Of Florence

மே 25

தூய பீத் (மே 25)

mary

தூய பீத் (மே 25)

இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக் 2:52)

வாழ்க்கை வரலாறு

பீத், இங்கிலாந்து நாட்டில் உள்ள மங்டன் என்னும் இடத்தில் 672 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஏழு வயது நடக்கும்போது தூய பேதுரு மற்றும் தூய பவுல் துறவுமடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இயல்பிலே திறமைசாலியாக விளங்கிய பீத் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார்.

686 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், இவர் இருந்த பகுதியில் பயங்கரக் கொள்ளை ஏற்பட்டது. அதில் ஏராளமான பேர் இறந்துபோனார்கள். இவர் மட்டும் எப்படியோ அதிஸ்டவசமாக பிழைத்துக்கொண்டார். இதனை இறைவனின் அருட்பெரும் செயல் என உணர்ந்த இவர், இறைவனுக்காக தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். அதனால் இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அதன்படி இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். பெனடிக்ட் பிஸ்காப் என்பவர் இவரை சிறந்த விதமாய் வழி நடத்தினார். இவ்வாறு பீத் தன்னுடைய 19 வது வயதில் திருத்தொண்டராகவும் அதற்கு அடுத்த ஆண்டில் குருவானவராகவும் உயர்ந்தார்.

பீத் தான் வாழ்ந்த காலத்திலேயே மக்களால் ‘வணக்கத்திற்கு உரியவர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். காரணம் இவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி நிறைந்த வாழ்க்கை. மட்டுமல்லாமல் இவர் விவிலியத்தில் ஆழமான புலமை பெற்றிருந்தார். அந்தப் புலமை இவரை பல நூல்களை எழுதச் செய்தது. குறிப்பாக இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் விவிலியம் தொடர்பானது என்பது குறிப்பிடத் தக்கது.

735 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் இவர் தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். எனவே இவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக” என்று சொல்லி தன்னுடைய ஆவியை இறைவனிடத்தில் ஒப்படைத்தார். இவருக்கு 1899 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கடவுள் கொடுத்த திறமைகளை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம்

தூய பீத்தின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே, அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்ததுதான். அவர் ஒருபோதும் தன்னுடைய விளங்கச் செய்யவில்லை. தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்த திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ஒரு கடுமையான உழைப்பாளி இருந்தார். அவர் எப்போதுமே ஏதாவது ஓர் ஆராய்ச்சியை செய்துகொண்டே இருப்பார். அதுவும் அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார். காரணம் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. எனவே அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள். அதில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இவர் ஏதாவது ஓர் ஆராய்ச்சியில் முழ்கி இருக்கும் அந்த சமயம் அந்த இரு பூனைகளும் வெளியே செல்ல நினைத்து கத்தி கூப்பாடு போடும். இதனால் அவர் பல ஆராய்ச்சிகளில் சிந்தனைகளை தவறவிடும் நிலை ஏற்பட்டது. எனவே அவர் தமது வேலையாளை மிக ஆணவத்தோடு அழைத்து, இந்த கதவில் இரு துளைகளை இடு, ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது. இந்த இரு ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த இரு பூனைகளும் வெளியில் சென்றுவிடும். அதன்பிறகு என்னுடைய ஆராய்ச்சிக்கு எவ்வித பங்கமும் வந்து சேராது என கூறினார்.

இதைக் கேட்ட அவரது வேலையாள், “ஐயா, ஒரு பெரிய துளை இட்டாலே இரண்டும் வரும், போகும். அப்படி இருக்க மற்றொரு துளை அவசியமா? என்றார். இப்படி ஒரு கேள்வியை அவரிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவில்லை. அன்றோடு அவரின் ஆணவம், மமதை அனைத்தும் பொடி பொடியாகின. பிறகு அவர் கூறியதை நினைத்து அவரே வருத்தப்பட்டார். அவர் தான் E=mc2 என்ற சமன்பாட்டை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன்.

எல்லாம் என்னால்தான், எல்லாரையும் விட நான் பெரியவன் என்ற ஆணவத்தில் சிலர், சமயங்களில் இப்படி மூக்கு அறுபடுவது உண்டு.

நாமும்கூட பல நேரங்கில், எல்லாமே கடவுள் கொடுத்தது என்பதை உணராமல், எல்லாமே என்னால்தான் நடக்கிறது என்ற மமதையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகையதொரு மனப்பான்மை நம்மிடத்தில் இருந்து மறைந்து கடவுளுடைய கையில் நான் ஒரு கருவி என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும்.

ஆகவே, தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாம் நாம், அவரைப் போன்று கடவுள் கொடுத்த திறமையை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

image