St. Augustine Of Canterbury

மே 27

கண்டற்பெரி நகர தூய அகஸ்டின் (மே 27)

mary

கண்டற்பெரி நகர தூய அகஸ்டின் (மே 27)

இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார். (மாற் 16:15 - 18)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூறும் தூய அகஸ்டின் பிறந்து வளர்ந்தது எல்லாம் உரோமையில்தான். இவர் எப்போது பிறந்தார், இவருடைய குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இவர் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார் என மிக உறுதியாகச் சொல்லலாம்.

இவர் உரோமையில் உள்ள தூய ஆன்ட்ரு துறவுமடத்தில் தலைவராக இருந்து பணிகளைச் செய்துகொண்டிருந்த தருணத்தில், திருத்தந்தை முதலாம் கிரகோரியார் இவரை அழைத்து, “நீங்கள் இங்கிலாந்து சென்று நற்செய்திப் பணியாற்ற வேண்டும்” என்று கேட்டார். தொடக்கத்தில் திருத்தந்தை சொன்னதற்கு மறுப்புச் சொன்ன, அகஸ்டின் அதன்பின் அதனை இறைத் திருவுளமாக நினைத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட அருட்பணியாளர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

அவர் சென்ற நேரம் கெண்டில் எதல்பர்ட் அரசராக இருந்தார். அவரிடத்தில் சென்ற அகஸ்டின் தான் வந்ததன் நோக்கத்தை எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் தயங்கிய அரசர், அரசியின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க அகஸ்டினையும் அவரோடு வந்த அருட்பணியாளர்களையும் நற்செய்தி அறிவிக்க முழுமையான சம்மதத்தைத் தெரிவித்தார். இதனால் அகஸ்டின் தன்னோடு வந்த அருட்பணியாளர்களின் உதவியோடு இங்கிலாந்து நாடு முழுக்க நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அவர் அறிவித்த நற்செய்தியினால் அரசர் உட்பட ஏராளமான பேர் மனமாற்றம் அடைந்தார்கள். அரசரும் தாமாகவே முன்வந்து ஓர் ஆலயத்தை திருச்சபைக்காகத் தந்தார்.

அகஸ்டின் இங்கிலாந்து நாட்டில் நற்செய்தி அறிவித்த சமயங்களில் நிறைய பிறமதக் கோவில்களை அர்ச்சித்து கிறிஸ்தவக் கோவில்களாக மாற்றினார். பலரை கிறிஸ்தவ மதத்தில் இணைக்க அரும்பாடு பட்டார். அவருடைய அயராத உழைப்பு வீண்போகவில்லை. ஏராளமான பேர் கிறிஸ்தவத்தை தழுவினார்கள். இதற்கிடையில் அவர் கண்டர்பெறி ஆயராகவும் உயர்த்தப்பட்டார். இப்படி இங்கிலாந்து மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தன் உடல் பொருள் ஆவி அத்தனையயும் கொடுத்த அகஸ்டின் 604 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் ‘இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர்’ எனவும் அழைக்கப்படுகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அகஸ்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம்

தூய அகஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், நாம் அனைவரும் நற்செய்தி அறிவிப்பில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில் கூறுவார், “நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்று. ஆம், நற்செய்தி அறிவிப்பது நம் ஒவ்வொரின் கடமை, அந்தக் கடமையை நாம் நிறைவேற்றவில்லையென்றால் அது நமக்குக் கேடுதான்.

இன்றைக்குப் பலர் தங்களுடைய வாழ்க்கையை ஏனோதானோ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கிறிஸ்துவின் போதனையின் மீதும், அவர் நமக்கு விடுத்த அழைப்பான, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கவேண்டும்’ என்பதின் மீதும் ஆர்வமில்லாமல் இருக்கின்றார்கள். அன்றைக்கு எத்தனையோ புனிதர்கள், மறைசாட்சிகள் கடல்கடந்து வந்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை நம் முன்னோர்களுகுக் அறிவித்தார்கள். அதனாலேயே நாம் கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கையில் பல படி உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு நன்றிக் கடனாக நாம் கிறிஸ்தவை அறியாத மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நமது கிறிஸ்தவ வாழ்வானது முழுமை பெறும். இல்லையென்றால் நாம் நன்றி மறந்தவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள் ஆவோம்.

ஆகவே, தூய அகஸ்டினின் நினைவு நாளில் அவரைப் போன்று மிக ஆர்வத்தோடு அதே நேரத்தில் மனவுறுதியோடு ஆண்டவரின் நற்செய்தி அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image