St. Caraunus St. Germanus Of Paris

மே 28

J}a

mary

தூய ஜெர்மானுஸ் (மே 28)
St. Germanus of Auxerre, Bishop

“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத் 5: 7)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய ஜெர்மானுஸ் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆட்டன் என்னும் இடத்தில் 496 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளரும்போதே ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கி வந்தார்.

இவர் வளர்ந்து இளைஞனாகியபோது குருவாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் துறவுமடத்தில் சேர்ந்து தன்னுடைய முப்பத்தி நான்காம் வயதில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். குருவாக மாறிய பின் இவர் சிம்போரியன்ஸ் என்ற துறவுமடத்தில் தங்கி தூய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இயல்பிலே இரக்க குணம் கொண்ட ஜெர்மானுஸ் ஏழை எளியோருக்கு வாரி வாரி வழங்கினார். தன்னிடம் கேட்பவருக்கு முகம் கோணாமல் உதவி செய்து வந்தார். சில சமயங்களில் இவருடைய சபையில் இருந்த துறவிகள், எங்கே ஜெர்மானுஸ் துறவுமடத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவாரோ என்றுகூட பயந்தார்கள். அந்தளவுக்கு இவர் தாரள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் பாரிசில் இருந்த ஆயர் யூசேரியுஸ் இறந்துவிட, இவர் ஆயராக பதவி உயரும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆயராக உயர்ந்த ஜெர்மானுஸ் மிகச் சிறப்பான முறையில் ஆன்மீகப் பணிகளையும் மக்கள் பணியையும் ஆற்றிவந்தார்.

ஒரு சமயம் பிரான்ஸ் நாட்டு அரசர் கில்டபர்ட் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும், அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி, கைநழுவிவிட்டு போய்விட்டனர். விஷயம் அறிந்த ஜெர்மானுஸ் அரசர் முன்பாகச் சென்று, முழந்தாள்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இவ்வாறு ஜெபிக்கத் தொடங்கிய சில மணிநேரத்திலே அவர் உடல்நலம் தேறி பிழைத்துக்கொண்டார். இதனால் மகிழ்ந்து போன ஜெர்மானுசை தன்னுடைய ஆலோசகராக வைத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் அரசர் ஜெர்மானுசுக்கு வேண்டிய மட்டும் உதவி செய்து வந்தார்.

ஜெர்மானுஸ் பிரான்சில் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் பொது சங்கங்களில் கலந்துகொண்டு, திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு மிகவே உழைத்தார். அதோடு திருவழிபாட்டில் இருந்த தேவையற்ற சடங்குமுறைகளை எல்லாம் அகற்றி ஒரு வழிக்குக் கொண்டு வந்தார். இப்படி ஏழைகளின் ஏந்தலாய், திருச்சபையின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு வாழ்ந்து வந்த ஜெர்மானுஸ் 576 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நன்மை செய்யும் வாழ்க்கை வாழ்தல்

தூய ஜெர்மானுசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகிறது. அவர் எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக ஏழை எளியவருக்கு நன்மை செய்வதில் மிகவும் கருத்தாய் இருந்தார். இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம் நன்மை செய்வதில் கருத்தாய் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருத்தூதர் பணிகள் நூல் 10:38 ல் வாசிக்கின்றோம், “கடவுள் நாசரேத்து இயேசுவோடு இருந்ததால் அவர் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்தது எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்” என்று. ஆம், இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். அவர் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்துகொண்டே செல்வதுதான் சிறப்பாக ஒரு காரியமாகம்.

ஒரு சமயம் பிரான்சில் ஆயராக இருந்த மாசிலோன் (Massilon) என்பவர் இறைமக்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டார்: “என்னுடைய மறையுரையைக் கேட்டுவிட்டு, என்ன ஒரு அருமையான மறையுரை, இவர் எவ்வளவு சிறப்பாக போதிக்கின்றார் என்று சொல்வதை விடவும் மறையுரையைக் கேட்ட பின்பு ஏதாவது நல்லது செய்வேன் என்று சொல்வதே சிறப்பானது, அதுவே நான் விரும்புவது”.

ஆம், மறையுரை நன்றாக இருக்கின்றது, குருவானவர் நன்றாக மறையுரை ஆற்றுகிறார் என்று சொல்வதை விடவும் மறையுரையில் சொல்லப்பட்ட கருத்துகளின் வாழ்வேன் என்று சொல்வதே சிறப்பானது.

ஆகவே, தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம், நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

image