St. Maximinus Of Trier St. Cyril

மே 29

தூய சிரில் (மே 29)

mary

தூய சிரில் (மே 29)

“நீங்கள் மனந்திரும்பி சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்த சிறு பிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர்” (மத் 18: 4)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சிரில் ஒரு கிறிஸ்தவத் தாய்க்கும், பிற தெய்வத்தை வழிபடும் ஒரு தந்தைக்கும் பிறந்தார். சிரிலின் தாயார் கிறிஸ்தவ நெறியில் சிறந்து விளங்கியவர். அதனால் அவர் தன்னுடைய அன்பு மகனுக்கு கிறிஸ்தவ நெறியை தொடக்க முதலே புகட்டி வந்தார். சிரிலும் தன்னுடைய தாய் தனக்குக் கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் நல்ல முறையில் கற்றுக்கொண்டு கிறிஸ்துவின்மீது ஆழமான விசுவாசம் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சிரில், கிறிஸ்தவ நெறியின்மீது ஆழமான பற்றுகொண்டு வாழ்ந்து வந்தது அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் சிரிலை பலவாறாக சித்திரவதைப் படுத்தினார்; நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு உரோமைக் கடவுளை வழிபடு என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் சிரில் எதற்கும் பயப்படாமல் கிறிஸ்துவின் மீது மிக உறுதியாக நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். இதனால் கடுப்பான சிரிலின் தந்தை வீட்டை விட்டே துரத்திவிட்டார். அப்போது அவர் தன் தந்தையைப் பார்த்துச் சொன்னார், “இப்போது நான் இழப்பதோ மிகக் குறைவுதான். ஆனால் எதிர்காலத்தில் விண்ணகத்தில் நான் பெறக்கூடிய கைமாறோ மிகுதியாகும்”. இவ்வாறு சொல்லிவிட்டு அவர் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் சிரில், கிறிஸ்தவ விசுவாசகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றார் என்ற செய்தி செசாரியாவின் ஆளுநனுக்குத் தெரிய வந்தது. அவன் படைவீரர்களை அனுப்பி, சிரிலை பிடித்து வரச் சொன்னான். அவரைப் பிடிக்க வந்த படைவீரர்கள், சிரில் வயதில் மிகவும் சிறியவராக இருப்பதைப் பார்த்துவிட்டு அவரிடம், “நீ தயதுசெய்து கிறிஸ்தவை மறுதலித்துவிடு, இல்லையென்றால் நீ பலவாறாக சித்ரவதை செய்யப்படுவாய்” என்றார்கள். இதைக் கேட்டு சிரில் பயப்படாமல் மிகவும் மனவுறுதியோடு இருந்தார். பின்னர் அவர் ஆளுநன் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டார்.

ஆளுநன் அவரைப் பார்த்துவிட்டு, “உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன், நீ கிறிஸ்துவை மறுதலித்து விடு. அப்படிச் செய்தால் உன்னை நான் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். இல்லையென்று சொன்னால், நீ வாளுக்கோ அல்லது தீயிக்கோ இரையாவாய்” என்றார். ஆளுநன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு சிறிதும் பயப்படாமல், “நான் கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பேனோ தவிர, உரோமைக் கடவுளை ஒருபோதும் வணங்க மாட்டேன். அதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை” என்றார்.

இதைக் கேட்டு ஆளுநன் கடுப்பானான். பின்னர் படைவீரன் ஒருவனிடமிருந்து வாளை வாங்கி சிரிலை வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு சிரில் தன்னுடைய சிறி வயதில் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

. 1. ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்தல்

தூய சிரிலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம் மனதில் தோன்றக்கூடிய சிந்தனை, நாமும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும் என்பதுதான். சிரில் தன்னுடைய சிறுவதிலே ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து அவருக்காகத் தன் உயிரையும் தந்தார். வளர்ந்து பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டத்தில் ஜான் வார் (John Warr) என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவருடைய விருப்பமெல்லாம் முடிந்தமட்டும் ஆண்டவரின் நற்செய்தியை தனக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதுதான். ஜான் வாருக்குக் கீழ் சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். ஒரு சமயம் அவன் ஒரு திருட்டு வேலையில் ஈடுபட்டு, ஜான் வாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான். அதற்காக அவன் மன்னிப்பும் கேட்டான். அப்போது ஜான் வார் அவரிடம், “நீ மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும். ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வாயா?” என்று கேட்டார். அவனும் சரியென்று சொல்ல, அவனுக்கு அவர் ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார்.

இதனால் அவன் தொடப்பட்டு, இந்திய நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தான். இங்கே வந்து பலரும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிந்துகொள்ள தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்தான். அந்தச் சிறுவன்தான் வில்லியம் காரே (William Carey) என்பவராகும். இவர்தான் இந்தியாவில் நவீன காலத்தின் நற்செய்தி அறிவிப்பின் தந்தையாக இருக்கின்றார்.

ஜான் வாரின் சாட்சிய வாழ்வு வில்லியம் காரேயை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைத்தது. வில்லியம் காரியின் சாட்சிய வாழ்வோ பலரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைத்தது. நம்முடைய வாழ்வும் பலரை கிறிஸ்துவை ஏற்றுகொள்ள செய்வதுதான் உண்மையான சாட்சிய வாழ்வாக இருக்கும்.

ஆகவே, தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image