St. John Grande St. Kevin St. Laurentinus
St. Morand St. Charles Lwanga & Companians

ஜுன் 3

தூய சார்லஸ் வாங்கா மற்றும் அவருடைய தோழர்கள் (ஜூன் 03)

mary

தூய சார்லஸ் வாங்கா மற்றும் அவருடைய தோழர்கள் (ஜூன் 03)

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாறு

1889 ஆம் ஆண்டு ‘வெள்ளை குருக்கள்’ என அழைக்கப்படும் மறைபோதகர்கள் ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டாவில் மறைபரப்புப் பணியைச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் செய்த மறைப்பணிக்கு ஓராண்டிலேயே தக்க பலன் கிடைத்தது. ஆம், 1890 ஆம் ஆண்டு வந்த உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்பாக உள்ள சனிக்கிழமை அன்று ஏராளமான பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். அவர்களைத் தொடர்ந்து நிறையப் பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள.

இதைக் குறித்து அராபியர்கள் சிலர் உகாண்டாவை ஆண்டுவந்த இரண்டாம் வாங்காவிடம் பற்றிவைக்க, அவன் கிறிஸ்தவர்களைக் கொல்லத் திட்டமிட்டான். அதன்படி அவன் ஒரே ஆண்டிலேயே ஜோசப் ருகாரமா, மார்க் ககும்பா, நோவா சர்வாங்கா என்ற மூன்று பேரைக் கொன்றுபோட்டான். இன்னும் பலரைக் கொன்று போடுவதற்கும் அவன் திட்டமிட்டான். இவற்றையெல்லாம் அறிந்த சார்லஸ் வாங்கா தன்னுடைய தோழர்களிடம், “அரசன் செய்துகொண்டிருப்பது மிகவும் தவறான காரியம். அவன் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றான். கிறிஸ்தவர்களை கூண்டோடு அழித்துக்கொண்டிருக்கின்றான். ஆனாலும் நாம் எத்தகைய சூழ்நிலையிலும் மனம்தளர்ந்து கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிடக்கூடாது என்று” எடுத்துச் சொன்னார். சார்லஸ் வாங்காவின் தோழர்களும் அதற்குச் சரி என்று சொல்லி, இறுதிவரை கிறிஸ்துவின் மீது தளரா விசுவாசத்தோடு இருந்தார்கள்.

1885 ஆம் ஆண்டிலிருந்து 1886 ஆம் ஆண்டு வரை கணக்கற்ற கிறிஸ்தவர்கள் சார்லஸ் வாங்கா உட்பட கொல்லப்பட்டார்கள். 1887 ஆம் ஆண்டிலும்கூட ஒருசில கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இப்படி கிறிஸ்தவ மறையில் உறுதியாக இருந்ததற்காக கொல்லப்பட்டவர்களுக்கு 1920 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதினைந்தாம் ஆசிவாதப்பரால் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாள், அவர்களுக்கு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

உகாண்டாவில் மறைசாட்சியாக மரித்த தூய சார்லஸ் வாங்கா மற்றும் அவர்களுடைய தோழர்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்

தளரா நம்பிக்கையோடு வாழ்வோம்

மறைசாட்சிகளான தூய சார்லஸ் வாங்கா மற்றும் அவருடைய தோழர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம் முன்னே தோன்றக்கூடிய சிந்தனை ‘தளரா நம்பிக்கையோடு வாழவேண்டும்’ என்பதுதான். இவர்கள் அனைவரும் கொடிய அரசனால் பலவிதமான சித்ரவதைகளுக்கும் உள்ளானார்கள். அப்படியிருந்தாலும் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையிலிருந்து பிறழவில்லை. எப்போதும் உறுதியாக இருந்தார்கள். அதனாலேயே அவர்கள் மறைசாட்சிகளாக மகுடம் தரித்திருக்கிறார்கள். இவர்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

யோவான் நற்செய்தி 16:20 ல் வாசிக்கின்றோம், “நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்று. ஆம், கிறிஸ்துவின் பொருட்டு இப்போது நாம் துன்புறலாம். ஆனால், இந்தத் துன்பங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக, சந்தோசமாக மாறும் என்பதுதான் ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்லக்கூடிய ஆறுதலின் வார்த்தையாக இருக்கின்றது.

எத்தனையோ புனிதர்கள் மறைசாட்சிகள், இறையடியார்கள், இயேசுவின் வார்த்தையைப் போதித்த மறைப்பணியாளர்கள் இவர்கள் யாவரும் இயேசுவின் பொருட்டு பல்வேறுவிதமான இன்னல்களையும் இக்கட்டுகளையும் ஏன், அவமானங்களையும் சந்தித்தார்கள். அந்தத் துன்பங்களினால் அவர்கள் சோர்ந்து போகாமல் இறுதிவரைக்கும் மன உறுதியோடு இருந்தார்கள். அதனாலேயே இன்றைக்கும் அவர்கள் மறைசாட்சிகளாக உயர்ந்து நிற்கிறார்கள். நாமும் கிறிஸ்துவின் பொருட்டு வரும் துன்பங்களை, அவமானங்களை தளரா நம்பிக்கையோடு தாங்கிக் கொண்டோம் என்றால், நம்முடைய வாழ்வில் ஏராளமான அதிசயங்களைக் காண்பது உறுதி.

ஆகவே, மறைசாட்சிகளான தூய சார்லஸ் வாங்கா மற்றும் அவருடைய தோழர்களின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருப்போம். எதிர்வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொள்வோம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image