St. Francis Caracciolo

ஜுன் 4

தூய பிரான்சிஸ் கராச்சியோலா

mary

தூய பிரான்சிஸ் கராச்சியோலா (ஜூன் 04)

“இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே” என்றார். பின் அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய பிரான்சிஸ் கராச்சியோலோ இத்தாலியில் 1563 ஆம் ஆண்டு, அக்டோபர் 13 ஆம் நாள் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.

பிரான்ஸிசின் குழந்தைப் பருவ வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்தது. இப்படி எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் அவருக்கு தொழுநோய் வர அவர் மனமுடைந்து போனார். அவருடைய நண்பர்கள், உறவுக்காரர்கள் அனைவரும் அவரை ஏளனமாகப் பேசினார்கள். அப்போது அவர் இயேசுவிடம், “இயேசுவே! நீர் மட்டும் எனக்கு வந்திருக்கின்ற இந்த தொழுநோயை என்னிடமிருந்து நீக்கிவிட்டால், நான் என்னுடைய வாழ்வை உமக்காகவே அர்ப்பணிப்பேன்” என்று உருக்கமாக மன்றாடினார்.

அவருடைய இந்த உருக்கமான மன்றாட்டு கேட்கப்பட்டது. ஆம், அவருடைய உடலிலிருந்த தொழுநோய் முற்றிலுமாக மறைந்தது. உடனே அவர் இயேசுவுக்கு வாக்குக் கொடுத்தது போன்று அவருக்காக, அவருடைய பணி செய்ய தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்; நேப்பல்ஸ் நகருக்குச் சென்று அங்கே இறையியில் கற்று 1587 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவும் செய்யப்பட்டார்.

1589 ஆம் ஆண்டு தூய ஜான் அகஸ்டின் அடோர்னோவுடன் சேர்ந்து, ‘Minor Clerks Regular’ என்ற சபையைத் தோற்றுவித்தார். இந்த சபையினுடைய பிரதான நோக்கம் ஜெபிப்பது மற்றும் செயலில் இறங்குவது ஆகும். பிரான்சிசும் அடோர்னோவும் சேர்ந்து பற்பல பணிகளைச் செய்தார்கள். குறிப்பாக சிறைச்சாலையில் இருந்த கைதிகளைச் சந்தித்து, அவர்களிடம் கிறிஸ்துவைக் குறித்து போதித்து மனமாற்றம் பெறவும் நல்மரணம் அடையவும் செய்தார்கள். மட்டுமல்லாமல் நோயாளிகளை மிகுந்த சிரத்தையோடு கவனித்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் அடோர்னோ இறந்துவிட சபையின் தலைவராக பிரான்சிஸ் உயர்ந்தார். இதன்பிறகு நற்கருணை ஆராதனைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். ஜெப வாழ்க்கையோடு செயலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். நிறைய நேரங்களில் கிடைத்த உணவை உண்டார், கால்நடையாகவே எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார். இதனால் அவருடைய உடல்நலம் குன்றியது. எனவே இவர் 1608 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1807 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஏழாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய பிரான்சிஸ் கராச்சியோலாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பெற்ற நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக மாறி, அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்

தூய பிரான்சிசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. அவர் தொழுநோயிலிருந்து குணம் பெற்றதும், இயேசுவிடம் வேண்டிக்கொண்டதற்கு ஏற்ப, பெற்ற நன்மைக்கு நன்றியாக தன்னுடைய வாழ்வை ஆண்டவர் இயேசுவுக்காக அர்ப்பணிக்கின்றார், அது மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள வாழ்கின்றார். தூய பிரான்சிசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நன்றியுள்ளவர்களாகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கின்றவர்களாகவும் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு சமயம் இளைஞன் ஒருவன் வாழ்க்கையை வாழப் பிடிக்காமல், கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தான். அவன் கடலில் விழுந்த சமயம் பார்த்து பெரியவர் ஒருவர் அவனைப் பிடித்துக்கொண்டு வந்து கரையில் சேர்ந்தார். “ஏன் இப்படி தற்கொலை செய்துகொண்டு உன்னுடைய வாழ்க்கை அழித்துக்கொள்ள முயற்சிக்கிறாய்?” என்று கேட்டார். அவன் பேசாதிருந்தான். பின்னர் அவர் அவரிடம், “நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், கடவுள் இன்னொரு வாய்ப்பை உனக்குக் கொடுத்திருக்கின்றார். இந்த வாழ்க்கையாவது அர்த்தமுள்ளவகையில் வாழ்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, புதிய தைரியத்தோடு வீறுநடை போட்டு நடக்கத் தொடங்கினான்.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வைக் கொடையாகக் கொடுத்திருக்கின்றார். இதனை அர்த்தமுள்ளவகையில் வாழ்வதே சிறப்பானது.

ஆகவே, தூய பிரான்சிஸ் கராச்சியோலோவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள விதத்தில் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image