St. Boniface

ஜுன் 5

தூய போனிபேஸ்

mary

தூய போனிபேஸ்

“உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” (மத் 5:44)

வாழ்க்கை வரலாறு :

போனிபேஸ் 680 ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் உள்ள தேவோன்ஷிர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சிறுவனாக இருந்த சமயத்தில் ஒருநாள் துறவிகள் இவருடைய இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அவர்களுடைய நடவடிக்கைகள், பழக்கவழக்கம் எல்லாவற்றையும் பிற்காலத்தில் தானும் துறவியாகவேண்டும் என்னும் ஆசைகொண்டார். அந்த ஆசை பின்னாளில் நனவாகவும் மாறியது என்பது வரலாறு.

போனிபேசுக்கு ஏழு வயது நடக்கும்போது ஆசிர்வாதப்பர் சபைத் துறவிகள் நடத்தி வந்த பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அங்கு இவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார். பின்னாளில் அங்கேயே துறவியாகவும் மாறினார். துறவியாக மாறிய பின்பு திருத்தந்தை இரண்டாம் கிரகோரியாரின் வேண்டுகோளின் பேரில் மேற்கு ஜெர்மனிக்குச் சென்று ஆண்டவருடைய நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைக்கத் தொடங்கினார். இவருடைய மறைபோதனையால் பலரும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.

சில காலம் அங்கு பணியாற்றிய போனிபேஸ் 722 ஆம் ஆண்டு உரோமைக்குத் திரும்பினார். அங்கே அவரை ஆயராகத் திருப்பொழிவு செய்தார்கள். இத்தனைக்கும் அவர் தனக்கு ஆயர் பதவி வேண்டாம் என்று சொல்லியும் கூட அவர் ஆயராக நியமிக்கப்பட்டார்.

ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு போனிபேஸ் மீண்டுமாக முன்பு பணியாற்றிய இடத்திற்குச் சென்றார். இந்தமுறை அவர் அங்கு சென்றபோது புதுவிதமான பிரச்சனை ஒன்றைச் சந்தித்தார். அது என்னவென்றால் கிறிஸ்துவா? பிற தெய்வங்களா? யார் பெரியவர் என்ற விவாதம் மக்கள் மதத்திலே நிலவிக் கொண்டிருந்தது. இந்த சமயம் பார்த்து போனிபேஸ், மக்கள் தெய்வம் என வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டி வீழ்த்தினார். இதைப் பார்த்துவிட்டு மக்களெல்லாம், ‘தெய்வம் தங்கியிருக்கும் இந்த மரத்தை இவர் இப்படி வெட்டிவிட்டாரே, இவருக்கு என்ன ஆகப்போகுதோ’ என்று பேசத் தொடங்கினார்கள். ஆனால், இவருக்கு எந்தவொரு ஆபத்தும் நேரவில்லை. அப்போது மக்கள் உணர்ந்துகொண்டார்கள் கிறிஸ்துதான் எல்லாரிலும் பெரியவர் என்று.

இந்த நிகழ்விற்குப் பிறகு பலர் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். போனிபேசும் மக்களிடமிருந்த மூட நம்பிக்கையோடு வல்லமையோடு விரட்டி அடித்தார். இவர் மூட நம்பிக்கைக்கு எதிராக எவ்வளவுதான் போராடினாலும் மக்களிடமிருந்து மூடநம்பிக்கைகளை அறவே அகற்ற முடியவில்லை. இதனால் இவர் புதிய புதிய திருச்சபைகளை உருவாகுவதிலும், நிறைய ஆலயங்களைக் கட்டி, மக்களுடைய விசுவாசத்தைக் கட்டி எழுப்புவதிலும் மிகுந்த அக்கறை காட்டினார். இப்படி இவர் ஆற்றிய பணிகளைப் பார்த்துவிட்டு 752 ஆம் ஆண்டு இவரை பேராயராக உயர்த்தினார்கள்.

பேராயராக உயர்ந்த பின்பும்கூட இவர் வல்லமையோடு ஆண்டவருடைய வாக்கை மக்களுக்கு அறிவித்து வந்தார். 755 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்த மக்களுக்கு இவர் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் இவர்மீது பாய்ந்து இவரைக் கொன்று போட்டார்கள். இவர் தன்னைக் கொன்றவர்களை மனதார மன்னித்துவிட்டு, ஆண்டவருடைய கைகளில் தன்னுடைய ஆன்மாவை ஒப்படைத்துவிட்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1874 ஆம் ஆண்டு, ஒன்பதாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய போனிபேசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கீழ்ப்படிந்து வாழ்வோம்

தூய போனிபேசின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் கீழ்படிதல் ஆகும். இவர் திருத்தந்தைக்கு எப்போதும் கீழ்படிந்து வாழ்ந்தார். ஜெர்மனிக்குச் சென்று நற்செய்தி அறிவி என்று சொன்னபோதும் ஆயராக உயர்த்தப்பட்டபோதும் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டார்.

தூய போனிபேஸ் அடிக்கடிச் சொல்லக்கூடிய வார்த்தைகள், குருக்கள் ஆயர்களுக்கும் ஆயர்கள் திருத்தந்தைக்கும் திருத்தந்தை ஆண்டவர் இயேசுவுக்கும் கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று. இது உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். என்றைக்கு திருச்சபையில் கீழ்ப்படிதல் இருக்கின்றதோ, அன்றைக்கே திருச்சபை வளர்ந்து எழில்மிகு மாளிகையாகக் காட்சியளிக்கும் என்பது உண்மை.

ஆகவே, தூய போனிபேசின் நினைவுநாளைக் கொண்டாடும், அவரைப் போன்று ஆண்டவரின் நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைப்போம். கீழ்ப்படிந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image