St. Antony Gianelli St. Norbert St. Philip The Deacon

ஜுன் 6

தூய நார்பர்ட்

mary

தூய நார்பர்ட் (ஜூன் 06) St. Norbert


நிகழ்வு

தூய நார்பர்ட், மாக்டபர்க் நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு முதன்முறையாக பேராலயத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த காவலாளி அவரைப் பிச்சைக்காரர் என நினைத்து பேராலயத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினார். இதைப்பார்த்து பதறிப்போய், நார்பட்டோடு வந்தவர் அந்தக் காவலாளியிடம், “நீ நினைப்பதுபோல் இவர் பிச்சைக்காரர் கிடையாது. இவர்தான் நம்முடைய ஆயர்” என்றார். உடனே அந்தக் காவலாளி, “ஆயர் பெருந்தகையே தெரியாமல் தவறு நடந்துவிட்டது, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அப்போது ஆயர் அவர்கள் அந்தக் காவலாளியைப் பார்த்துச் சொன்னார், “நீங்கள் சொன்னதுதான் சரி, உண்மையில் இறைவனுக்கு முன்பாக நான் ஒரு பிச்சைக்காரன்தான்”.

எல்லாரிலும் கடையவராய், மிகவும் எளிய வாழக்கை வாழ்ந்த தூய நார்பர்ட் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.

வாழ்க்கை வரலாறு

நார்பர்ட் 1080 ஆம் ஆண்டு ரின்லாந்துக்கு (Rhine Land) அருகில் உள்ள சேன்டேன் (Xanten) என்னும் ஊரில் பிறந்தார். நார்பர்டின் குடும்பம் மிக வசதியான குடும்பம். அதனால் அவர் தன்னுடைய வாழ்க்கையை மிக உல்லாசமாக வாழத் தொடங்கினார். வளர்ந்து பெரியவரான பிறகு மன்னர் ஐந்தாம் ஹென்றியின் அரசபையில் ஆலோசராக பணியாற்றிவந்தார்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆடம்பரமாக வாழ்ந்துவந்த நார்பர்ட் ஒருநாள் தன்னுடைய குதிரையில் பக்கத்து ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது வானத்திலிருந்து விழுந்த மின்னல் ஒன்று அவரைத் தாக்க அவர் அப்படியே தரையில் விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்தார். அப்போது அவர் மேலே அண்ணார்ந்து பார்ந்து, “ஆண்டவரே! நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்க, “நீ உன் பாவ வழிகளை விட்டு, புதிய வாழ்க்கை வாழ்” என்று குரல் ஒலித்தது. உடனே அவர் எழுந்து சென்று தன்னுடைய சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு குருத்துவ வாழ்விற்குத் தன்னையே தயாரிக்கத் தொடங்கினார்.

குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பிறகு திருத்தந்தை இரண்டாம் ஜெலஸ்டசை சந்தித்த நார்பர்ட் அவரிடம், “நான் எங்கே சென்று பணியாற்றுவது?” என்று கேட்டார். திருத்தந்தையோ அவரை வடக்கு பிரான்சுக்குச் சென்று பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார். திருத்தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் வடக்கு பிரான்சுக்குச் சென்று அங்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார். இயல்பிலே போதிக்கும் திறமையைக் கைவரப் பெற்றிருந்த நாபார்ட் இறைவனின் வார்த்தையை வல்லமையோடு போதித்து நிறைய மக்களை ஆண்டவருக்கும் கொண்டு வந்து சேர்த்தார். மட்டுமல்லாமல அவரால் ஈர்க்கப்பட்ட நிறைய இளைஞர்கள் அவரோடு சேர்ந்தார். அதனால் ‘நார்பட்டையன்’ என்னும் புதிய சபை உதயமானது. சில ஆண்டுகளிலே அது பல்வேறு இடங்களுக்குப் பரவியது.

இறைவனின் வாக்கை துணிச்சலோடு எடுத்துரைத்த நார்பர்ட் நற்கருணை பக்தியில் மிகவும் சிறந்து விளங்கினார். இவர் நற்கருண மீது கொண்ட பக்திதான் இவருக்கு எல்லாப் பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்ய உதவி புரிந்தது. இதற்கிடையில் இவரை மாக்டபர்க் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார்கள். ஆயராக உயர்ந்த இவர் மக்களை ஆண்டவருக்கு உகந்த பாதையில் வழிநடத்திச் சென்றார். இப்படி பலவேறு ஆன்மீகப் பணிகளைச் செய்து வந்த ஆயர் நார்பர்ட் 1134 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ஆண்டவரின் வார்த்தையை வல்லமையோடு மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி, பல்வேறு நன்மைகளைச் செய்த தூய நார்பட்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

எளிமை

தூய நார்பட்டிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே. அவரிடம் விளங்கிய எளிமைதான். எளிமை என்பது எதுவும் இல்லாமல் இருப்பது அல்ல, மாறாக எல்லாம் இருந்தும் ஒருமில்லாதவனை போன்று, உள்ளத்தில் தாழ்ச்சியோடு வாழ்வது. அதுதான் எளிமையாக இருக்க முடியும்.

இன்று நாம் விழா கொண்டாடும் தூய நார்பர்ட் தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். ஆயராக இருந்தபோதும் தான் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கின்றோம் என்ற தலைக்கனம் கிங்கீற்றும் இல்லாமல் உள்ளத்தில் தாழ்ச்சியோடு மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் எளிமையாகவும் தாழ்ச்சியோடும் வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்கில் நாம் உள்ளத்தில் தாழ்ச்சி இல்லாமல், வாழ்வில் எளிமை இல்லாமல், தாறுமாறாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய ஒரு நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று, நம்முடைய புனிதரைப் போன்று தாழ்சியோடும் எளிமையாகவும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

உலகப் புகழ்பெற்ற ஞானி அவர். எளிமையான வாழ்க்கையை எப்படி மனிதன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். அவர் எப்போதும் படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் அமர்ந்திருப்பார். அவர் வீட்டுக்கு வரும் உறவினர்களை வரவேற்று மகிழ்விக்கும் கடமையையும் விடாமல் செய்வார்.

ஒருநாள் அவர் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தார். ஞானியின் தத்துவச் சிந்தனைகளில் பறிகொடுத்த அவர், ஞானியின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கவனித்துவந்தார். உமர் பெருமகனோ தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார். பொழுது வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. தன்னுடைய பணியில் சற்றும் கவனச் சிதறல் இல்லாமல் உமர் எழுதிக்கொண்டேயிருந்தார். இரவு வந்த பின்னரும், ஞானி உமர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். ஒற்றை விளக்கின் ஒளியில் எழுதிக்கொண்டே இருந்தார். விளக்கில் எண்ணெய் தீர்ந்துகொண்டிருந்தது. ஒளியும் குறைந்து கொண்டிருந்தது. உறவினருக்கு எண்ணெய் ஊற்றி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஞானியிடம் எண்ணெய் ஊற்ற வாவென்று கேட்டார். “வேண்டாம்.. வீட்டுக்கு வந்த உறவினர்களை வேலைவாங்குவது அழகல்ல” என்றார். “அப்படியானால் தங்கள் வேலைக்காரனை அழைத்து ஊற்றச் சொல்லலாமே?. “வேண்டாம். அவன் நாளெல்லாம் உழைத்துவிட்டு இப்பொழுதுதான் உறங்கச் சென்றிருக்கிறான். களைத்துப் போயுள்ளான். உறங்குவான்.”என்று.

சிறிது நேரம் கழித்து உமர் அவர்கள் தானே எழுந்துசென்று விளக்கில் பொறுமையாக எண்ணெய் ஊற்றிவிட்டுத் திரியை ஏற்றிவிட்டுத் திரும்பிவந்து மீண்டும் அமைதியாக எழுதத் தொடங்கினார். “அய்யா தாங்கள் உலகம் தலைவணங்கும் பெரும் ஞானி… இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றத் தாங்களே எழுந்து செல்ல வேண்டுமா?, வேறு எவரிடம் சொன்னாலும் செய்து விடுவார்களே?” என்றார். “இல்லை. நான் உமராக எழுந்து சென்றேன். உமராக விளக்கில் எண்ணெய் ஊற்றினேன். உமராகத் திரும்பிவந்து உமராக எழுதுகிறேன்.” உமர் என்ற ஞானி எல்லாராலும் உயர்வாக மதிக்கப்படுகின்றவராக இருந்தாலும் எளிமையாகவும் உள்ளத்தில் தாழ்சியோடும் வாழ்ந்து வந்தார். அதுதான் அவரை மேலும் மேலும் உயர்த்தியது.

நாமும் அவ்வாறு வாழ்கின்றபோது இறைவனின் ஆசிரைப் பெற்றுக் கொள்வது என்பது உறுதி. ஆகவே, தூய நார்பட்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரில் ஆழமான பக்தியும் உள்ளத்தில் தாழ்ச்சியையும் எளிமையையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image