St. Maximinus Of Aix St. Medard St. William Of York

ஜுன் 8

J}a

mary

யோர்க் நகர தூய வில்லியம் (ஜூன் 08)

அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப் படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியம்பித்தார். அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார் (மாற் 3: 13-15)

வாழ்க்கை வரலாறு

வில்லியம், பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் உள்ள யோர்க் நகரில் இருந்த ஹெர்பர்ட் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இந்த ஹெர்பர்ட் ஒரு நிலபிரபு.

வசதியான குடும்பத்தில் பிறந்த வில்லியம் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாவிட்டாலும் எல்லாரிடத்திலும் அன்பாக இருந்தார். இவர் வளர்ந்து பெரியவனாகியபோது இவருடைய தந்தை தனக்கு இருந்த அதிகார பலத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி 1143 ஆம் ஆண்டு இவரை யோர்க் நகரத்தின் பேராயராக ஏற்படுத்தினார். இது குருக்களுக்கு மத்தியிலும் இறைமக்களுக்கு மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் வில்லியம் பேராயராக உயர்ந்ததை ஏற்றுக்கொள்ளாமல் செய்தியை அப்போது திருத்தந்தையாக இருந்த மூன்றாம் யூஜினுசிடமும் கொண்டு சென்றார்கள். அவர் வில்லியம் யோர்க் நகரின் பேராயராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று 1147 ஆம் ஆண்டு அறிவித்தார்.

இதனால் வில்லியம் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானார். அதன்பிறகு இவர் ஜெபத்திலும் தவத்திலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தி வாழ்ந்து வந்தார். இவருடைய ஜெப தவத்தினாலோ என்னவோ ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் கழித்து இவர் மீண்டுமாக யோர்க் நகரப் பேராயராக திருப்பொழிவு செய்யப்பட்டார். அப்போது இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இவர் பேராயராக பேறுபெற்ற பின்பு பல்வேறு பணிகளை மிகச் சிறப்பான முறையில் செய்தார். அது மட்டுமல்லாமல் முன்பு தன்னைப் பேராயர் பதவியிலிருந்து விலகுவதற்குக் காரணமாக இருந்தவர்களை மனதார மன்னித்தார்.

இப்படிப்பட்ட இரக்கமும் மன்னிக்கின்ற குணமும் எல்லாரையும் நேசிக்கக்கூடிய குணத்தையும் தன்னகத்தே கொண்ட வில்லியம் ஒருசில ஆண்டுகளிலே இறையடி சேர்ந்தார். இவருக்கு 1227 ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

பேராயர் தூய வில்லியமின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மன்னித்து வாழ்வோம்

தூய வில்லியமின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவருடைய மன்னிக்கின்ற உள்ளம்தான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகின்றது. அவர் தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை மன்னித்தார். அவரைப் போன்று நாமும் நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை மன்னிக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கணவன் மனைவி அவர்களுடைய ஒரே மகன் என்று இருந்த ஒரு குடும்பத்தில் குடும்பத்தில் மனைவி, “இப்படி கவனம் இல்லாமல் ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு மகனே. இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணவன்.

மனைவி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் மகனிடம் இப்படித்தான் நடந்துகொண்டாள்.

ஒருமுறை மகன் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவறி உடைத்தாலும் இப்படித்தான். முதலில் அவன் செய்தது தப்பு என்று கண்டித்துவிட்டு, பிறகு மன்னித்துவிடுவதாகச் சொன்னாள் மனைவி.

இப்படியே போய்க்கொண்டிருக்க ஒருநாள் கணவன் தன் மனைவியிடம் “என் அன்பு மனைவியே! மகன் செய்யுற தப்புகளை எப்படியும் மன்னிக்கத்தான் போறே. பிறகு எதுக்காக அவன்கிட்டே அது தப்புன்னு சொல்லித் தேவையில்லாம குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடுறே?” என்று மனைவியை தனியாக அழைத்து கேட்டான். அதற்கு மனைவி தன் கணவனிடம், “நம் மகன் இப்ப டீன்ஏஜ்ல இருக்கான். இனி மேற்படிப்பு, வேலைன்னு வாழ்க்கையில எத்தனையோ பேரைச் சந்திக்கப் போறான். எத்தனையோ சூழல்களை எதிர்கொள்ளணும். இப்ப அவன் செய்யுற தப்புகளை தப்புன்னு நாமதான் சுட்டிக் காட்டணும். அப்பதான் அதை இனி செய்யாம கவனமா இருப்பான். அதேநேரம் அவனை நாம மன்னிக்கிறோம்னு அவனுக்குத் தெரியணும். அப்பதான் மற்றவங்க அறியாம செய்யுற தப்புகளை அவன் மன்னிக்கவும் கத்துக்குவான். தப்பு செய்யாதவங்க மட்டுமில்லங்க, மற்றவங்களை மன்னிக்கவும் தெரிஞ்சவங்கதான் முழு மன ஆரோக்கியத்தோட வாழ முடியும். அதுக்காகத்தான் இந்தப் பயிற்சி! என்றாள் மனைவி.

அவள் இப்படிச் சொன்னதைக் கேட்டு அவளுடைய கணவன் அவளை அன்போடு கட்டி அணைத்துக்கொண்டான்.

மன்னிப்பது மகத்துவமானது. அதை நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டும் என்று சொல்லும் இந்த நிகழ்வு நமக்கு ஒரு பாடம். தூய வில்லியமும் தனக்கு எதிராகத் தவறு செய்தவர்களை மன்னித்தார். ஆகவே, தூய வில்லியமும் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று மன்னித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image