St. Columba Of Jona St. Ephraem

ஜுன் 9

தூய எஃப்ரேம்

mary

தூய எஃப்ரேம் (ஜூன் 09)

“ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: தூயவராகிய அவரைப் பற்றிய உணர்வே மெய்யுணர்வு (நீமொ 9: 10)

வாழ்க்கை வரலாறு

எஃப்ரேம், 306 ஆம் ஆண்டு, மெசபடோமியாவில் உள்ள நிசிபிஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பிற சமயத்தைச் சார்ந்தவர். ஆனால், எஃப்ரேமோ கிறிஸ்தவ விசுவாசத்தில் அதிகமான ஈடுபாடு வாழ்ந்து வந்தார். இதனால் அவருடைய தந்தை அவரை வீட்டை விட்டே துரத்திவிட்டார். எஃப்ரேம் வீட்டைவிட்டு வெளியே வந்து நிசிபிசில் ஆயராக இருந்த ஜேம்ஸ் என்பவரிடத்தில் தஞ்சம் புகுந்து கல்வி கற்றார். ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் அவரோடு இருந்து எல்லாவிதமான பயிற்சிகளையும் பெற்ற இவர், அதன்பிறகு பாலைவனத்திற்குச் சென்று தனிமையில் சில காலத்தைச் செலவழித்தார்.

363 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் குளறுபடிகளின் காரணமாக இவர் எடேசாவிற்கு செல்ல நேர்ந்தது. அங்கே இவர் தியாக்கோனாக இருந்து பல்வேறு விதமான பணிகளைச் செய்தார். ஏற்கனவே அறிவிலும் ஞானத்திலும் சிறந்துவிளங்கிய இவர் அப்போது திருச்சபைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த பலவிதமான தப்பறைக் கொள்கைகளை மிகத் துணிவோடு எதிர்த்து வெற்றிகொண்டார். மேலும் இறைவன் இவருக்கு நல்ல எழுத்துத் திறனைக் கொடுத்திருந்தார். அதைக் கொண்டு இவர் பல மறையுரைகளை எழுதினார். இது மட்டுமல்லாமல், திருச்சபையின் வரலாற்றில் முதல்முறை திருவழிபாட்டுப் பாடல்கள் மூலம் இறைமக்களுக்கு பல உண்மைகளை எடுத்துச் சொன்னார்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க எடேசாவில் மிகப்பெரிய பஞ்சம் உண்டானது. அந்நாட்களில் மக்கள் உணவிற்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் இவர் மக்களுக்கு மத்தியில் இறங்கி பணிசெய்யத் தொடங்கினார். குறிப்பாக இவர் வசதிபடைத்தவர்களிடமிருந்து தேவைக்கு மிகுதியாக இருந்த உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை தேவையில் இருந்த மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். இவ்வாறு அங்கு ஏற்பட்ட பஞ்சத்தை ஓரளவு சமாளித்தார்.

இப்படி பல்வேறு பணிகளைச் செய்து, திருச்சபையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி, தன் வாழ்நாள் முழுக்க ஒரு திருத்தொண்டராகவே இருந்த எஃப்ரேம் 373 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1920 ஆண்டு மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எஃப்ரேமின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கச் செய்தல்

தூய எஃப்ரேமின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு மேலே சொல்லப்பட்ட சிந்தனைதான் நினைவுக்கு வந்து போகின்றது. அவர் எடேசாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியபோது, ஏழை எளியவருக்கு உணவு கிடைக்க பெரிதும் பாடுபட்டார். வசதி படைத்தோரிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை வசதி இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவி, அதன்மூலம் பஞ்சத்தின் கோர விளைவுகளை ஓரளவு தணித்தார்.

தூய எஃப்ரேமின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், எல்லா மக்களும் எல்லா வசதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு நாம் பாடுபடுகின்றோமா? அல்லது நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும், யாரும் எப்படியும் இருக்கட்டும் என்ற மனநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கிராமப்புறத்தில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார், “ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?'' என்று. “வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன். “ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன். “பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'', “தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'', "பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்று பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, "ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான். இதைக் கேட்டு ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.

ஆம், பகிர்ந்து உட்கொள்கின்றபோது அது தரும் சுகம் அலாதியானது. பகிர்தல் உணவில் மட்டுமல்லாது எல்லாவற்றிலும் இருக்கின்றபோது இந்த உலகில் இல்லாமை என்பது இல்லாமல் போய்விடும்.

ஆகவே, தூய எஃப்ரேமின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று பகிர்ந்து வாழக்கூடிய மனப்பான்மையை விதைப்போம். நாமும் பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image