St. Mary Rose Molas Vallve St. Barnabas

ஜுன் 11

புனித பர்னபா - திருத்தூதர்

mary

புனித பர்னபா - திருத்தூதர்

நிகழ்வு

லிஸ்திராவில் பர்னபாவும் பவுலும் போதித்துக்கொண்டிருக்கும்போது அங்கே பிறவிலேயே கால் ஊனமுற்ற ஒருவர் இருந்தார். அவரிடம் நலம்பெறுவதற்கான நம்பிக்கை இருந்ததால் பவுல் அவரிடம், "நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்" என்றார். உடனே அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். பவுல் செய்வதைப் பார்த்த மக்கள் கூட்டத்தினர் தங்களுடைய மொழியில், "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று குரலெழுப்பிக் கூறினார்கள். அதோடு மட்டுமல்லாமல் நகருக்கு வெளியே இருந்த சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டுவந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விருப்பினார். அப்போது பர்னபா அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, "மனிதர்களே!, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்த பயனற்ற பொருட்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றோம்" என்றார்.

அந்நேரத்தில் அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு பவுல் மற்றும் பர்னபாவின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் இறைவனின் கருணையால் உதிர் தப்பினார்கள். எல்லா புகழும் மாட்சியும் இறைவனுக்கே உரியது என்று செயல்பட்ட பர்னபா மற்றும் பவுலின் வாழ்வு நமது சிந்தினைக்குரியதாக இருக்கின்றது

வாழ்க்கை வரலாறு

பர்னபா சைப்ரசை சேர்ந்த ஒரு லேவியர். இவருக்கு யோசேப்பு என்ற இன்னொரு பெயரும் உண்டு, ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருத்தூதர்கள் அணியில் இவர் இடம்பெறாவிட்டாலும் தொடக்கத் திருச்சபையில் இவர் திருத்தூதருக்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட்டார். இவர் இயேசு அனுப்பிய எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவர் எனவும் சொல்லப்படுகின்றது. அதேபோல் இவர் நல்லவர், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர், நம்பிக்கை நிறைந்தவர் என்றும் விவிலியம் நமக்கு எடுத்துச் சொல்கிறது (திப 11:24).

விவிலியத்தில் இவர் அறிமுகமாகும் இடம் திருத்தூதர் பணிகள் நூல் 4 ஆம் அதிகாரம் ஆகும். அங்கே இவர் தன்னுடைய நிலபுலன்களை எல்லாம் விற்று அதிலிருந்து வந்த பணத்தை திருத்தூதர்களின் காலடியில் கொண்டுபோய் வைக்கிறார். அவர்கள் இறைமக்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பகிர்ந்துகொடுக்கிறார்கள் (திப 4: 36-37). அடுத்ததாக இவர் வரக்கூடிய இடம் திருத்தூதர் பணிகள் நூல் 9 வது அதிகாரம் ஆகும். அங்கே இவர் கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்திய பவுல் மனமாற்றம் பெற்று மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டபோது பர்னபாதான் பவுலைக் குறித்து நல்லவிதமாய் பேசி, இறைமக்கள் கூட்டத்தில் அவரை அறிமுகம் செய்துவைக்கிறார் (திப 9: 26-28)

பர்னபா திருத்தூதர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அதனால்தான் அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியபோது திருத்தூதர்கள் பர்னபாவை அவர்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்து, அவரை நற்செய்தி அறிவிக்கச் செய்தார்கள் (திப 11: 22-23). கிபி.45 ஆம் ஆண்டு எருசலேமில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது இவர்தான் அந்தியோக்கு நகருக்குச் சென்று, அங்கிருந்த மக்களிடமிருந்து நிதி திரட்டி வந்து, அதனை எருசலேமில் இருந்த இறைமக்களுக்குக் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார் (திப 14: 18-20). 51 ஆம் ஆண்டு எருசலேமில் நடைபெற்ற முதல் பொதுச் சங்கத்தில் இவர் பவுலடியார் சார்பாக இருந்து தன்னுடைய பங்களிப்பைச் செய்தார்.

பர்னபா பவுலோடு சேர்ந்து ஆற்றிய நற்செய்திப் பணிகள் ஏராளம். அதற்காக அவர் பயணம் செய்த தூரம் ஏராளம். பர்னபா பவுலின் முதல் திருத்தூது பயணத்தில் உடன்சென்றார். இரண்டாவது திருத்தூது பயணத்தின் போதுதான் பவுல் தன்னோடு ஜான் மாற்கை கூட்டிச்செல்ல மறுத்தபோது, பர்னபா அவரை தன்னோடு கூட்டிக்கொண்டு நற்செய்தி அறிவிக்கச் செல்கிறார். பதிலுக்கு பவுல் தன்னோடு சீலாவைக் கூட்டிக்கொண்டு நற்செய்தி அறிவிக்கச் செல்கிறார். பர்னபா பவுலை விட்டுப் பிரிந்துசென்றபிறகு அவர் மிலன் நகருக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகச் சொல்லப்படுகின்றது. இன்னும் ஒருசிலர் இவர் சைப்பிரசுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தபோது அங்கே இருந்தவர்கள் 61 ஆம் ஆண்டு இவரைக் கல்லால் எறிந்துகொன்றார்கள் என்றும் சொல்கிறார்கள். இவருடைய உடல் 477 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது, இவருடைய உடலோடு மத்தேயு நற்செய்தியின் பிரதி ஒன்றும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்தல்

தூய பர்னபா தன்னிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழும் தாராள உள்ளத்தினராய் வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகது. அதனால்தான் அவர் தன்னுடைய உடமைகளை விற்று, அந்தப் பணத்தை திருத்தூதர்களின் காலடியில் கொண்டுபோய் வைக்கிறார். பர்னபாவிடம் இருந்த தன்னிடம் இருப்பதை பிறருக்கு, கடவுளுக்குக் கொடுக்கும் நல்ல மனநிலை நம்மிடத்தில் இருக்கின்றதா என சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சிறப்பாகும். ஆனால் இன்றைக்கு, தான் சம்பாதித்ததை யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிக்கும் குறுகிய மனநிலை நம்மிடத்தில் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருமுறை கோடீஸ்வரன் ஒருவன் கப்பலில் பயணம் சென்றான். திடீரென புயலடிக்க ஆரம்பித்தது. கப்பல் மூழ்கிவிடும் நிலை ஏற்பட பயணிகள் எல்லோரும் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்கள். இந்தக் கோடீஸ்வரன் சிறிது நேரம் எதுவும் செய்யாது அமைதியாகத் தான் இருந்தான். ஆனால் புயலின் வேகம் அதிகரித்துக்கொண்டே சென்றதைப் பார்த்து இறந்துவிடுவோமோ என்ற பயம் அவனைத் தொற்றிக்கொண்டது. உடனே அவனும் "இறைவா! எங்களைக் காப்பாற்று. நீர் மட்டும் என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டால் என் விலை உயர்ந்த மாளிகையை விற்று அந்தப் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு தர்மம் செய்து விடுகிறேன்" என்று உரக்க சொன்னான். எல்லார் காதிலும் அது விழுந்தது.

சற்று நேரத்தில் புயல் ஓய்ந்தது. எல்லோருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. இவனுக்கு மட்டும் மிகவும் கவலையாகி விட்டது. "அடடா... அவசரப் பட்டுவிட்டோமே, கொஞ்சம் பொறுத்திருந்தால் எப்படியும் புயல் அமைதியாகி இருக்கும். வீணாக எல்லார் காதிலும் விழும்படியாக நேர்த்தி செய்துவிட்டோமே என்று கண் கலங்கினான். வேறு வழியின்றி அவன் தன் மாளிகையை விற்பது என்று முடிவுக்கு வந்தான். ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த மாளிகையை விற்க அவன் வித்தியாசமானதொரு விளம்பரம் செய்தான். அந்த மாளிகையில் ஒரு பூனையைக் கட்டிவைத்தான் அந்தப் பூனையின் விலை ஒரு கோடி ரூபாய். அந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய். ஆனால் இரண்டையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும் இது நிபந்தனை.

ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் என்று யாருக்கும் கேட்கவில்லை. ஒரு கோடியே ஒரு ரூபாய்க்கு ஒரு மாளிகையும் ஒரு பூனையும் கிடைக்கிறது என்று சொல்லி ஊரில் இருந்த ஒருவன் அவற்றை விலை கொடுத்து வாங்கிக்கொண்டான். அதன்பிறகு அந்தக் கோடீஸ்வரன் பூனையின் விலையான ஒரு கோடி ரூபாயை தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு மாளிகையின் விலையான ஒரு ரூபாயை வேண்டுதலின் படி ஏழைகளுக்கு தர்மம் செய்தான்.

இத கோடிஸ்வரனைப் போன்றுதான் நிறையப் பேர் தங்களிடம் இருப்பதை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய மனநிலை நம்மிடத்திலிருந்து மாறவேண்டும். இருப்பதை பிறருக்குக் கொடுக்கும் நல்ல மனப்பான்மை நம்மிடத்தில் உருவாகவேண்டும்.

2. பிறர் வளர்ச்சியில் மகிழ்தல்

அந்தியோக்கு நகரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியபோது திருத்தூதர் தங்களுடைய பிரதிநிதியாக பர்னபாபைத் தான் அனுப்பி வைக்கிறார்கள். அவர் அங்கு சென்று பார்த்தபோது அவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தார் என்று படிக்கின்றோம் (திப 11: 22-23). பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படாமல், அவர்களைக் குறித்து தவறாகப் பேசாமல் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதே இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நம்மோடு வாழக்கூடிய ஒருவர் பணத்திலும் பதவியிலும் உயர்கிறபோது நாம் தூய பர்ணபாவைப் போன்று அவரைக் கண்டு மகிழ்கிறோமா? அல்லது பொறாமைப்படுகின்றோமா? என்பது சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம்.

3. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்

தூய பர்னபா ஆர்வமிக்க நற்செய்திப் பணியாளராக இருந்து செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தூய பவுலோடு இருந்தபோதும் சரி, தனியாக இருந்தபோதும் சரி நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்பதில் ஆர்வம்கொண்டிருந்தார். அதற்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு அத்தகைய ஆர்வமும் பற்றும் இருக்கிறதா என சிந்தித்துப் பார்ப்போம். நற்செய்தியில் இயேசு கூறுவார், "உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" (மாற் 16:15) என்று. இயேசு சொன்ன கட்டளையை தூய பர்னபா வாழ்வாக்கினார், நாமும் அவரைப் போன்று நற்செய்திப் பணியாளர்களாய் வாழ்வோம்.

ஆகவே, தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம், பிறரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி காண்போம், ஆர்வமுள்ள நற்செய்திப் பணியாளர்களாய் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

image