St. Anthony of Padua

ஜுன் 13

பதுவைப் புனிதர் தூய அந்தோனியார்

mary

பதுவைப் புனிதர் தூய அந்தோனியார் (ஜூன் 13)

நிகழ்வு

ஒருமுறை இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரை நோக்கி இருப்பத்தைந்தைக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். ஆட்டமும் பாட்டமும் என்று அவர்களுடைய பயணம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. அப்போது திடிரென்று கடலில் பெரும் புயலொன்று வீசத் தொடங்கியது. கடல் தண்ணீரெல்லாம் கப்பலுக்குள் வரத்தொடங்கியது. இதைச் சற்றும் எதிர்பாராத இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள்.

அந்தக் கப்பலில் குருவானவர் ஒருவர் இருந்தார். அவரை அணுகிச் சென்ற இளைஞர்கள், தாங்கள் செய்த பாவத்தினால்தான் கடலில் இப்படி புயல்வீசுகிறது என்று சொல்லி அவரிடத்தில் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள். அப்போது குருவானவர் அவர்களிடம், “இந்தப் புயலிலிருந்து நாம் மீட்கப்படவேண்டும் என்றால் தூய அந்தோனியாரை நோக்கி மன்றாடுவதுதான் சரியானது. அவரே நம்மைக் காப்பாற்ற வல்லவர்” என்று அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னார். இளைஞர்களும் மனமுருகி தூய அந்தோனியாரிடத்தில் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று ஜெபித்தார்கள். சிறுது நேரத்தில் பெரும் புயல் நின்றது. கடலில் பேரமைதி உண்டானது. எல்லாரும் பெரும் ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய தூய அந்தோனியாரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அந்தோனியார் ‘கோடி அற்புதராய்’ இருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலித்தார்.

வாழ்க்கை வரலாறு

அந்தோனியார் (பெர்னாடின் என்பதுதான் அந்தோனியாரின் திருமுழுக்குப் பெயர். அந்தோனியார் என்பது தூய வனத்து அந்தோனியார் மீது அவர் கொண்ட பற்றினால் வைத்துக்கொண்டது) 1195 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்டின் இவருடைய தாய் தெரசா பயஸ் தவேரா ஆவார். இவருடைய குடும்பம் லிஸ்பனில் அரசராக இருந்த இரண்டாம் அல்போன்சாவுக்கு மிக நெருக்கமான குடும்பம். அந்தோனியார் தன்னுடைய பள்ளிக்கல்வியை லிஸ்பனில் உள்ள கதீட்ரல் பள்ளியில் படித்தார். தன்னுடைய பதினைந்தாவது வயதில் தூய அகுஸ்தினார் சபையில் சேர்ந்து கொயிம்ரா என்ற இடத்தில் குருவாக படிக்கத் தொடங்கினார். 1219 ஆம் ஆண்டு இவர் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

ஒருசமயம் மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற தூய பிரான்சிஸ்கன் சபைத் துறவிகள் சிலர் கொல்லப்பட்டு, அவர்களுடைய உடலானது அந்தோனியார் இருந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதைப் பார்த்த அந்தோனியார் தானும் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து மொரோக்கோ நாட்டிற்குச் சென்று, அங்கே மறைசாட்சியாக உயிர்துறக்கத் துணிந்தார். அதன்படி இவர் கப்பலில் மொரோக்கோ நாட்டிற்குப் பயணமானார். ஆனால் போகும் வழியில் நோய்வாய்ப்பட்டு, நலிவுற்ற நிலைக்குத் தள்ளப்படவே, தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்த போது கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக கப்பல் சிசிலியில் தஞ்சம் அடைந்தது. எனவே, அவர் சிசிலியில் தரை இறங்கினார். சிசிலியில்தான் அந்தோனியார் தூய பிரான்சிஸ் அசிசியாரைச் சந்தித்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர் அருகே இருந்த ஒரு பங்கில் மறைபோதகப் பணியை ஆற்றி வந்தார்.

இந்த நேரத்தில் போர்லி என்ற இடத்தில் குருப்பட்டம் நடைபெற்றது. குருப்பட்டத்திற்கு அந்தோனியாரும் சென்றிருந்தார். அந்த குருப்பட்டத்தில் மறையுரை ஆற்றவேண்டிய குருவானவர் வராமல் போகவே, சபைத் தலைவர் அந்தோனியாரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் மறையுரை ஆற்றத் தொடங்கினார். அவர் மறையுரை ஆற்றுவதைப் பார்த்த மக்கள் கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது, இறைவார்த்தையை அவர் விளக்கிய விதம், மடைதிரண்ட வெள்ளம் போல அவரிடமிருந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள் மெய்மறந்து நின்றார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தோனியாருடைய புகழ் எங்கும் பரவியது. அவர் லாம்பர்டி என்ற பகுதி முழுவதும் நற்செய்தி அறிவிக்கப் பணிக்கப்பட்டார்.

அந்தோனியார் இறைவார்த்தையை விளக்கிய விதத்தைக் கண்டு மக்கள் பல இடங்களிலிருந்தும் அவருடைய போதனையைக் கேட்க வந்தார்கள். அப்போது அவர் ஆற்றிய புதுமைகள் ஏராளம். ஓரிடத்தில் அந்தோனியாரின் போதனையைக் கேட்பதற்காக பெண்ணொருத்தி தன்னுடைய குழந்தையைத் தொட்டிலில் தூங்கவைத்துவிட்டு வந்துவிட்டார். அவர் அந்தோனியாரின் போதனையைக் கேட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றபோது குழந்தை அருகே கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் விழுந்து இறந்துபோனது. அப்போது அந்தப் பெண்மணி அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. எனவே அவர் அந்தோனியாரை அணுகி வந்து, தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி கெஞ்சிக் கேட்டார். அந்தோணியாரும் அவர்மீது இரக்கம்கொண்டு அந்தக் குழந்தையை உயிர்பித்துத் தந்தார்.

அந்தோனியார் வாழ்ந்த காலத்தில் நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் இல்லை என்று ஒருவன் மறுத்து வந்தான். அந்தோனியார் அவரிடத்தில், “நீ உன்னிடத்தில் இருக்கும் கழுதையை மூன்று நாட்கள் பட்டினி போடு. மூன்று நாட்களுக்குப் பிறகு அதை இங்கே அழைத்துக்கொண்டு வா. அப்போது அதன்முன்பாக உணவையும் நற்கருணை ஆண்டவரையும் வைப்போம். ஒருவேளை அது நற்கருணை ஆண்டவருக்கு அடிபணிந்தால் அப்போது நீ நற்கருணையில் ஆண்டவர் இருப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று அவரிடத்தில் சொன்னார். அந்த மனிதரும் அதற்குச் சரியென்று சொன்னார். அந்த மனிதர் மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னுடைய கழுதைக்கு உணவேதும் தராமல் அந்தோனியாரிடத்தில் கொண்டுவந்தார். அந்த கழுதைக்கு முன்பாக உணவும், இன்னொரு பக்கம் அந்தோனியார் நற்கருணை ஆண்டவரைக் கையில் ஏந்தியும் இருந்தார். மூன்று நாட்கள் கழுதை ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததால் உணவையே உட்கொள்ளும் என்று அந்த மனிதர் நினைத்தார். ஆனால் அக்கழுதையை நற்கருணை ஆண்டவர் முன்பாக முழந்தாள்படியிட்டு வணங்கியது. இதைக் கண்ட அந்த மனிதர் அந்தோனியாருடைய காலில் விழுந்து, தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டார்.

ஒருசமயம் ரூமினி நாட்டில் இருந்த யூதர்கள் சிலர் அந்தோனியார் மீது பொறாமை கொண்டு, அவருடைய உணவில் விஷம் கலந்து கொடுத்து, கொல்லப் பார்த்தார்கள். ஆனால் அந்தோனியாரோ விஷம் கலந்த அந்த உணவின்மேல் சிலுவை அடையாளம் வரைந்து உண்டு, அவர்களுடைய சூழ்ச்சியை வெற்றிகொண்டார். அந்தோனியார் இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று மறைபோதகப் பணியைச் செய்ததால் அவருடைய உடல் தளர்வுற்றது. அவர் தான் விரைவிலே இறக்க இருக்கிறோம் என்பதை உணர்ந்தவராய் தன்னுடைய உடலை பதுவா நகருக்கு எடுத்துகொண்டு போகும்படியாக தன்னுடைய சகோதரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் அர்செல்லா நகரை அடைந்தபோதே அவருடைய ஆவி இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தது. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 36. பின்னர் சகோதரர்கள் அவரை பதுவா நகரில் அடக்கம் செய்தார்கள். அந்தோனியார் இறந்த அடுத்த ஆண்டிலேயே அவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

அவர் இறந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1263 ஆண்டு, அவருடைய உடலை இடமாற்றம் செய்யும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடைய கல்லறையைத் திறந்துபார்த்தபோது அவருடைய நாவு மட்டும் அழியாமல் இருந்தது. இதைப் பார்த்த பொனவெந்தூர், “ஓ பரிசுத்த நாவே, நீ எப்போதும் இறைவனைப் போற்றி புகழ்ந்ததால், அழியாமல் காக்கப்பட்டாய்” என்றார். அந்தோனியார் இறந்து எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருடைய நாவு இன்றைக்கும் அழியாமல் இருப்பதைப் பார்க்கும்போது அந்தோனியார் தன்னுடைய நாவினால் இறைவனுக்கு எந்தளவுவுக்கு மகிமை சேர்த்திருப்பார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 1946 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் பத்திநாதர் அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுனராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

பதுவைப் புனிதர், கோடி அற்புதர், புதுமை வள்ளல் என்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராகிய தூய அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இறைவனிடத்தில் அன்பு

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னிடத்தில், திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்ட திருச்சட்ட அறிஞரைப் பார்த்துச் சொல்வார், “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த கட்டளை. உன் மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை” என்பார் (மத் 22:35-40). இயேசுவின் இக்கட்டளைகளை தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தவர் தூய அந்தோனியார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அந்தோனியார் ஆண்டவரிடத்தில் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்பை வெளிப்படுத்தத்தான் அவர் மொரோக்கோ நாட்டிற்குச் சென்று தன்னுடைய உயிரை இழக்கத் துணிந்தார். ஆனால் இறைவனின் திருவுளம் வேறு மாதிரியாக இருந்தது. அந்தோனியார் ஆண்டவர் மீது எந்தளவுக்கு அன்புகொண்டிருந்தாரோ அதே அளவுக்கு ஆண்டவரும் அந்தோனியார் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். அதனால்தான் அவர் குழந்தையாக அந்தோனியாரின் கைகளில் தவழ்ந்தார்.

தூய அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் நம்மிடத்தில் அவரைப் போன்று ஆண்டவர் மீது ஆழமான அன்பு இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் இதயம் இருக்கும் என்று ஆண்டவர் சொன்ன வார்த்தையை அந்தோனியார் அடிக்கடி சுட்டிக்காட்டினார். நாம் ஒப்பற்ற செல்வமாகிய இறைவனிடத்தில் நம்முடைய இதயத்தைப் பதித்து வாழ்வோம்.

அயலாரிடத்தில் அன்பு

அந்தோனியார் ஆண்டவரிடத்தில் எந்தளவுக்கு அன்பு கொண்டு வாழ்ந்தாரோ அதே அளவவுக்கு அவர் அயலாரிடத்தில், ஏழைகளிடத்தில் அன்புகொண்டு வாழ்ந்தார். அந்தோனியார் வாழ்ந்த காலத்தில் பதுவா நகரில் பணக்காரர்கள் தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுத்து, வட்டிப்பணத்தைத் தராத ஏழைகளை கொடுமைப்படுத்தி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட அந்தோனியார் ஏழைகளை இப்படித் துன்புறுத்தும் பணக்காரர்களை கடுமையாகச் சாடினார். மேலும் அந்தோனியார் இறந்த அதே ஆண்டில் பதுவா நகரில் வாழ்ந்த ஏழைகளது கடன்கள் அத்தனையும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை இங்கே நாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. அந்தோனியார் தான் இருந்த துறவுமடத்திற்கு வரக்கூடிய ஏழை எளியவருக்கு உணவு கொடுத்து வந்தார். அதனால்தான் இன்றைக்கும் அவருடைய ஆலயங்களில் ஏழைகளுக்கு (எல்லோருக்கும்தான்) உணவு கொடுக்கப்படுகின்றது. அவர் சொல்வார், “நம்முடைய கைகளும் கால்களும் துன்பத்தில் இருப்பவருக்குத் தேடிச் சென்று உதவுவதற்காக கொடுக்கப்பட்டது”

அந்தோனியாரை நம்முடைய பாதுகாவலராகக் கொண்டிருக்கும் நாம், அவரிடத்தில் இருத்த ஏழைகள்மீதான அன்பும் கரிசனையும் நம்மிடத்தில் இருக்கின்றதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு, “மிகச் சிறியோராகிய இவர்களுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்பார் (மத் 25: 40). நாம் தூய அந்தோனியாரைப் போன்று ஏழைகளுக்கு உதவி செய்வோம். அதன்வழியாக இறைவனுக்கு உதவி செய்வோம்.

உயிர்களிடத்தில் அன்பு

தூய அந்தோனியார் உயிர்களிடத்தில் அன்பு கொண்டு வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் ஒருசமயம் அந்தோனியார் போதிக்கச் சென்ற இடத்தில் மக்கள் அவருடைய போதனையைக் கேட்க விருப்பமில்லாதவர்களாய் இருந்தார்கள். எனவே அவர் மக்கள் கேட்காவிட்டால் என்ன, உயிரினங்கள் கேட்கட்டும் என்று கடலில் இருந்த மீனினங்களுக்கு நற்செய்தி அறிவித்தார். உண்மையிலே அவர் உயிரினங்களிடத்தில் அன்பு கொண்டிருந்ததனால்தான் அவரால் இப்படி செய்ய முடிந்தது.

அந்தோனியார் மீனங்களுக்கு என்ன போதித்திருப்பார் என்பது பற்றிய விவாதங்கள் எழுகின்றன. அவர் என்ன போதித்தார் என்பதை தூய பிரான்சிஸ் அசிசியார் தன்னுடைய புத்தகத்தில் அழகுபட எழுதி வைத்திருக்கிறார். “மீனினங்களே நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனென்றால் நோவாவின் காலத்தில் கடவுள் உலகை அழிக்க நினைத்தபோது நீங்கள் அந்த அழிவிலிருந்து காப்பாற்றப் பட்டீர்கள். யோனாவை நீங்கள் மூன்றுநாட்கள் உங்களுடைய வயிற்றினில் பாதுகாப்பாக வைத்தீர்கள். ஆண்டவர் இயேசு அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து புதுமை செய்தபோது, நீங்கள் அதற்கு உறுதுணையாக இருந்தீர்கள். இயேசுவுக்கு வரிசெலுத்தும் சூழ்நிலை ஏற்பட்டபோது நீங்கள் ஒரு நாணயத்தைத் தந்து அவருக்கு உதவினீர்கள். ஆகையில் இப்படியெல்லாம் உதவி செய்த நீங்கள் கடவுள் பார்வையில் பேறுபெற்றவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு விதங்களில் அந்தோனியார் உயிர்களிடத்தில் / இயற்கையிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் உயிர்களிடத்தில், இயற்கையிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயற்கையை நாம் நேசித்தால், இயற்கை நம்மை நேசிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

ஆகவே, தூய அந்தோனியாரைப் போன்று இறைவனிடத்தில், நம்மோடு வாழும் சக மனிதரிடத்தில், இயற்கையிடத்தில் அன்புகொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image