St. Methodius Of Constantinople

ஜுன் 14

தூய முதலாம் மெதோடியஸ்

mary

தூய முதலாம் மெதோடியஸ் (ஜூன் 14)

நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப்போலச் சிறையிலிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால், கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. (2 திமொ 2:9)

வாழ்க்கை வரலாறு

மெதோடியஸ், சிசிலியில் 788 ஆம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். கஷ்டம் என்றால் என்னவென்று அறியாமல் வளர்ந்த இவர், உயர்கல்வியைக் கற்று கான்ஸ்டான்டிநோபிளில் இருந்த மன்னரிடம் பணிபுரிவதற்காகச் சென்றார். இடையில் அவரை வழிமறித்த துறவி ஒருவர், இவ்வுலக வாழ்வின் நிலையாத் தன்மையையும் மறுஉலக வாழ்வின் பேறுபலன்களையும் எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட மெதோடியஸ் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக வாழத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் கான்ஸ்டான்டிநோபிளை ஆட்சிசெய்து வந்த ஐந்தாம் லியோ என்ற மன்னன், கிறிஸ்தவர்கள் சுரூப வழிபாடு செய்வதாக, அவர்களுக்கு எதிராக கலகத்தில் இறங்கினான்; பலரைக் கொல்லவும் திட்டமிட்டான். இதை எதிர்த்து அங்கு ஆயராக இருந்த நிக்கபோரஸ் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்தார். இதனால் சினம் கொண்ட மன்னன் ஆயர் நிக்கபோரசை சித்ரவதை செய்யத் தொடங்கி அவரை ஆயர் பொறுப்பிலிருந்து நீக்கினான்.

இதைக் கேள்விப்பட்ட மெதோடியஸ், ஆயர் நிக்கபோரஸ் சார்பாக உரோமைக்குச் சென்று, திருத்தந்தையிடம் நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னார். அதற்கு திருத்தந்தை அவரிடம், “கொடுங்கோலன் இறக்கும்வரை இங்கேயே இரு. அதன்பிறகு அங்கு போய்க்கொள்ளலாம்” என்று சொல்ல, மெதோடியஸ் மன்னன் இறக்கும்வரை அங்கே இருந்தார். 829 ஆம் ஆண்டு கொடுங்கோலன் ஐந்தாம் லியோ இறந்தான். எனவே மெதோடியஸ் தன்னுடைய சொந்த இடத்திற்குத் திரும்பினார்.

ஐந்தாம் லியோவைத் தொடர்ந்து மைக்கேல் அரியணையில் ஏறினான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்களிடம் நல்லதொரு உறவில்தான் இருந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவனும் கிறிஸ்தவர்கள் சிரூப வழிபாடு செய்வதாக அவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அது மட்டுமல்லாமல், மெதோடியசை அக்ரிதா என்ற தீவுக்கு நாடுகடத்தவும் தொடங்கினான்.

மைக்கேல் இறந்தபிறகு, தியோபிலிஸ் என்பவன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தான். அவன் தொடக்கத்தில் மெதோடியசிடம் நன்றாக இருந்தான், அவரைச் சிறையிலிருந்துகூட விடுவித்தான். ஆனால் அரேபியர்களுடன் நடந்த போரில் அவன் தோற்றுப் போனவுடன், “சிரூப வழிபாடு செய்பவர்களோடு கூட்டுச் சேர்ந்ததனால்தான் என்னுடைய இறைவன் எனக்கு போரில் தோல்வியைத் தந்துவிட்டார்” என்று அவன் மெதோடியசிடம் தரக்குறைவாகப் பேச, மெதோடியஸ், “நீ ஆண்டவரின் திருச் சிரூபங்களை அவமதித்துவிட்டாய், அதனால்தான் உனக்கு இந்த அழிவு நேர்ந்தது” என்றார். இதனால் கடும்சினமுற்ற தியோபிலிஸ் மெதோடியசை காரி உமிழ்ந்து, முகத்தில் குத்தினான். இன்னும் பல்வேறு விதமான இன்னல்களை அவருக்குக் கொடுத்தான். இதனால் மெதோடியசிறகு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.

தியோபிலிசின் இறப்புக்குப் பிறகு மூன்றாம் மைக்கேல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவன் வயதில் சிறியவனாக இருந்ததால் அவனுடைய தாய் தியோடரா நாட்டை நிர்வாகம் செய்தார். அவள் கிறிஸ்தவர்கள்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அதனால் கிறிஸ்தவர்கள் தங்களுடைய விருப்பம்போல் சிரூபங்களை வழிபடுவதற்கு அனுமதியளித்தாள். இதற்கிடையில் ஆயர் மன்றம் கூட்டப்பட்டது. அதில் மெதோடியஸ் ஏக மனதாக கான்ஸ்டான்டிநோபிளின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மட்டுமல்லாமல் அந்த மன்றம் சிரூப வழிபாட்டை ஆதரித்தது. மெதோடியஸ் சில காலம் ஆயராகப் பணியாற்றிய பின் 847 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மெதோடியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தளராமனம்

தூய மெதோடியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவரிடத்தில் இருந்த தளரா மனம்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் இன்னல்களையும் இக்கட்டுகளையும் அவர் சந்தித்தபோதும் தான் கொண்ட கொள்கையிலிருந்து அவர் மனம் தளர்ந்து போகவில்லை. கிறிஸ்தவ நெறியை விட்டு விலகவும் இல்லை.

தூய மெதோடியசின் நினைவுநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து நிற்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம், வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் மனம்தளர்ந்து போய், விசுவாசத்தில் ஆட்டம் கண்டுபோய் நிற்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் தூய மெதோடியசை நம்முடைய முன்மாதிரியாகக் கொண்டு, மனந்தளராமல் இருப்பது சிறப்பானது.

ஆகவே, தூய மெதோடியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மனந்தளராது இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image