St. Bernard Of Aosta St. Vitus St. Germaine Cousin

ஜுன் 15

தூய ஜெர்மைன் காசின்

mary

தூய ஜெர்மைன் காசின் (1579 – 1601)

ஜெர்மைன் காசின் இறந்து 43 ஆண்டுகள் கழித்து (1644 ஆம் ஆண்டு) அவருடைய கல்லறை தோண்டப்பட்டது. அப்போது அவரது உடல் அழியாமல் இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எனவே ஜெர்மைன் காசினின் அழியா உடல் மக்கள் வணக்கம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு வணக்கம் செலுத்த வந்த ஒரு செல்வச் சீமாட்டி, “ஜெர்மைன் காசினே, நீர் மட்டும் என்னுடைய மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்திவிட்டால், நான் உம்முடைய அழியா உடலுக்கு பொன்னாலான ஆடை செய்து வைப்பேன்” என்று வேண்டினார். அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது, அதனால் அவர் வேண்டிக்கொண்டது போன்றே ஜெர்மைன் காசினுக்கு பொன்னாலான ஆடை செய்து போர்த்தினார்.

ஜெர்மைன் காசின் இறைவனின் கையில் வல்லமையுள்ள கருவி, அவர் வழியாக நாம் இறைவனிடத்தில் ஜெபித்தோம் என்றால், நம்முடைய வேண்டுதல் கேட்கப்படும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

வாழ்க்கை வரலாறு

ஜெர்மைன் காசின், 1579 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள தூலூஸ் நகருக்கு அருகில் இருக்கும் பிப்ராக் என்னும் இடத்தில் இருந்த ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறக்கும்போதே ஒரு கை சிதைந்த நிலையில் பிறந்தார். அது மட்டுமல்லாமல் இவர் பிறந்த ஒருசில மாதங்களிலே இவருடைய தாயார் இறந்துபோனார். இதனால் இவரது தந்தை வேறொரு பெண்ணை மணந்துகொண்டார். அந்தப் பெண்மணி அதாவது ஜெர்மைன் காசினுடைய சிற்றன்னை இவரைப் பலவாறாகக் கொடுமைப்படுத்தினார். ஏற்கனவே கை சிதைந்த நிலையிலும் நோயினாலும் பீடிக்கப்பட்ட ஜெர்மைன் காசினை வீட்டுக்குள் சேர்த்தால், அவளிடமிருக்கின்ற நோய் எல்லாருக்கும் பரவும் என்று அஞ்சி, இவளது சிற்றன்னை இவளை வீட்டுக்குள் விடாமல், ஆட்டுப்பட்டியிலே தூங்கும்படி செய்தாள். இதனால் ஜெர்மைன் காசின் உடலளவிலும் உள்ளத்தளவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்.

ஜெர்மைன் காசினின் சிற்றன்னை அவரை படிக்க அனுப்பாமல் ஆடு மேய்க்க அனுப்பி வைத்தாள். தொடக்கத்தில் இதை நினைத்துப் பெரிதும் வருந்திய ஜெர்மைன் காசின் நாட்கள் செல்லச் செல்ல ஆடு மேய்க்கச் செல்வதைக் கூட சந்தோசமான ஒரு காரியமாக எடுத்துக்கொண்டு அதனைச் செய்துவந்தார். இவர் ஆடுமேய்க்கும் தருணங்களில் செபமாலையைக் கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டே இருந்தார். அதோடுகூட பக்கத்தில் இருந்த ஆலயத்தில் மூவேளை ஜெபம் சொல்லப்படுகின்ற தருணங்களில் அப்படியே முழந்தாள் படியிட்டு இறைவனைத் தொழுது வந்தாள். இதனால் அவர் தான் தனியாய் இருக்கின்றோம் என்று நினைக்காமல், இறைவன் தன்னோடு இருக்கின்றார் என்ற உணர்வோடு வாழ்ந்து வந்தார்.

சில நாட்களில் பக்கத்தில் இருக்கும் ஆலயத்தில் பகல் வேளையில் திருப்பலி நடைபெறும். அப்படிப்பட்ட தருங்களில் ஜெர்மைன் காசின் ஆடுகளை இறைவனின் பராமரிப்பில் விட்டுவிட்டு திருப்பலி காணச் செல்வார். அவர் திருப்பலிக்குப் போய்விட்டு திரும்பிவந்து பார்க்கும்போது எந்தவொரு ஆட்டிற்கும் காட்டில் வசிக்கும் ஒநாயினால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் இறைவனால் காப்பாற்றப்பட்டிருக்கும். அதற்காக அவர் இறைவனுக்கு நன்றி செலுத்துவார். ஜெர்மைன் காசினுக்கு ரொட்டி மட்டுமே உணவாகக் கிடைத்தபோதும் அதனை தன்னிலும் வறியவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்து உண்டு வந்தார். இதனால் எல்லாருடைய அன்பும் இவருக்குக் கிடைத்தது.

நாட்கள் செல்லச் செல்ல ஜெர்மைன் காசினின் தந்தை, அவரை முழுமையாகப் புரிந்துகொண்டு, வீட்டிற்குள் வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஜெர்மைன் காசினோ தனக்கு ஆட்டுப்பட்டியே போதும்” என்று சொல்லி கடைசி வரைக்கும் ஆட்டுப்பட்டியிலே இருந்து, மிகவும் எளிய மற்றும் தாழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார். ஜெர்மைன் காசினிடமிருந்த நோய் நாட்கள் ஆக, முற்றி 1601 ஆம் ஆண்டு இறந்து போனார். இவர் இறந்த பிறகு இவருடைய கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடைபெற்றன. இவற்றை அடிப்படியாகக் கொண்டு 1867 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பத்திநாதர் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெர்மைன் காசினின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தறிந்த நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பகிர்ந்து வாழ்தல்

தூய ஜெர்மைன் காசினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள பல நல்ல பண்புகள் இருந்தாலும், வறிய நிலையிலும் தன்னிடம் இருந்த ரொட்டித் துண்டுகளைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்த பகிர்வு மனப்பான்மை உயர்ந்ததாக இருக்கின்றது. “பகுந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்பார் அய்யன் திருவள்ளுவர். ஆமாம், பகிர்ந்து வாழ்வதையே கற்றறிந்தோர் உயர்வாகக் கருதுவர். ஆகவே, நாம் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு நல்லொழுக்க வகுப்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். "ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?'' என்பதே ஆசிரியர் அந்த மாணவர்களிடம் கேட்ட கேள்வி. அதற்கு ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு பதிலைச் சொன்னான். "வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன். "ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன். "பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' "தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' "பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.என்று பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, "ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான். அந்த மாணவன் சொன்ன பதிலைக் கேட்டு ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார். மாணவர்களும் கரவொலி எலுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநோரம் பிடித்தது. ஆமாம், நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து சாப்பிடும்போதே அது சுவையாக இருக்கின்றது. தூய ஜெர்மைன் காசினும் அப்படித்தான் தன்னிடம் இருந்ததைப் பகிர்ந்து சாப்பிட்டார்.

ஆகவே, தூய ஜெர்மைன் காசினின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தறிந்த நாம், அவரைப் போன்று நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்போம். அதன்வழியாக இயேசுவின் அன்புக்கு உகந்தவர்கள் ஆவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்

 

image