St. Albert Adam Chmielowski St. Botulf St. Orso Of Aosta
St. Rainerius Of Pisa St. Emily De Vialar

ஜுன் 17

தூய எமிலி தே வியலர்

mary

தூய எமிலி தே வியலர் (ஜூன் 17)

“ஒவ்வொரு நாளும் நான் ஆயிரமாயிரம் பிரச்சனைகளைச் சந்திக்கின்றேன். அப்படியிருந்தாலும் இறைவனுடைய அருட்கரம் என்னோடு இருப்பதால், நான் எதற்கும் அசையாமல் இருக்கின்றேன்” – எமிலி தே வியலர்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் எமிலி தே வியலர் 1779 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாள், தெற்கு பிரான்சில் உள்ள கெயிலாக் என்ற இடத்தில் பிறந்தார்.

எமிலியின் தாயார் பக்தியுள்ள பெண்மணி. எனவே இவர் தன்னுடைய ஒரே மகளான எமிலிக்கு பக்தி நெறியை ஊட்டி வளர்த்து வந்தார். தாயாரின் வளர்ப்பில் எமிலி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தார். இப்படி வாழ்க்கையில் எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், எமிலியின் தாயார் திடிரென இறந்துபோனார். அப்போது எமிலிக்கு வயது வெறும் 15 தான். தாயின் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் எமிலியின் தந்தை, அவருக்கு மணமுடித்துக் கொடுத்தால், தாயின் இழப்பை மறந்துவிட்டு அவர் சந்தோசமாக இருப்பார் என்று நினைத்துக்கொண்டு ஆடவன் ஒருவனை எமிலிக்கு மணமுடித்துக் கொடுக்க திட்டம் தீட்டினார். இதைக் கேள்விப்பட்ட எமிலி அதிர்ந்து போனார். ஏனென்றால் அவர் ஏற்கனவே தன்னை இறைவனுக்காக அர்ப்பணித்திருந்தார். தந்தை இவ்வாறு திட்டம் தீட்டுவதை அறிந்த எமிலி அவரிடத்தில் சென்று, “நான் ஏற்கனவே என்னை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன். அதனால் நான் யாரையும் மணமுடிக்கப் போவதில்லை” என்று மிக உறுதியாகச் சொன்னார். இதனால் எமிலியின் தந்தை மிகுந்த ஏமாற்றத்திற்கும் வருத்தத்திற்கும் உள்ளானார். தன் மகள் இப்படியோர் முடிவை எடுத்துவிட்டாளே என்று ஏமாற்றத்திற்கு உள்ளன எமிலியின் தந்தை அதனாலேயே நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானார்.

எமிலியின் கனவு, இலட்சியம் எல்லாம் பிரஞ்சுப் புரட்சியால் நிர்மூலமாகிப் போன கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கு உயிர்கொடுப்பதும் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதுதான். அதற்காகத்தான் அவர் எந்தவொரு ஆணையும் மணந்துகொள்ளாமல், நோய்வாய்ப்பட்டு கிடந்த தன் தந்தையைக் கவனித்துக்கொண்டு கன்னியாகவே இருந்தார். தந்தை நோய்முற்றி இறந்ததும் இறைப்பணிக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

முதலில் தாய்வழி தாத்தாவின் சொத்துவழியாக ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்குக் கிடைத்தது. அதைக்கொண்டு அவர் நகரில் ஒரு பெரிய கட்டடத்தைக் கட்டி, கல்விப்பணியையும், சமூகப் பணியையும் ஆன்மீகப் பணியையும் செய்யத் தொடங்கினார். இவர் ஆற்றிவந்த பணிகளைப் பார்த்துவிட்டு, முதலில் மூன்று பெண்களும், அவர்களைத் தொடர்ந்து எட்டுப் பெண்களும் அவரோடு சேர்ந்துகொண்டு பணி செய்யத் தொடங்கினார்கள்.

எமிலி செய்துவந்த சேவைகள் அனைத்தும் மக்களுடைய கவனத்தை ஈர்த்தன. அதனால் மக்கள் மத்தியில் அவருக்கும் அவர் ஏற்படுத்திய ‘The Sisters of St. Joseph of the Apparition’ நல்ல மதிப்பு உண்டானது. கார்டினல் மெர்சியர் என்பவர் எமிலிக்கு ஓர் ஆன்மீக குருவாக இருந்து, எல்லாவிதத்திலும் உறுதுணை புரிந்துவந்தார்.

இப்படி பல்வேறு பணிகளைச் செய்துவந்த எமிலி திடிரென நோய்வாய்ப்பட்டு 1856 ஆம் ஆண்டு, ஆகஸ்டு திங்கள் 24 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1951 ஆம் ஆண்டு புனிதர் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எமிலியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கசடறுக்க கற்றுக்கொடுப்போம்

தூய எமிலியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு மேலே சொல்லப்பட்ட தலைப்பு நினைவுக்கு வருகின்றது. அவர் ஏழை எளியவருக்கு நல்லதொரு கல்வியை வழங்கினார். அதன்மூலம் அவர் சமூகத்தில் மலிந்துகிடந்த பல்வேறு பிரச்சனை அறவே ஒழிப்பதற்கு தூண்டுகோலாக இருந்தார். தூய எமிலியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், நல்ல கல்வியைப் பெற்று, மற்றவர்களுக்கும் அதனைக் கற்றுக்கொடுத்து, இந்த சமூகத்தில் இருந்த சாதி, அநீதி, சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பிறவும் களையப்பட நாம் பாடுபடுகின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் கல்வி ஒன்றுதான் இந்த சமூகத்திற்கு விடுதலையைத் தருகின்ற ஒரு கருவியாகும். அத்தகைய கல்வியை நாம் பெற்று, அதனை மற்றவருக்குக் கற்றுக்கொடுத்து, இந்த சமூகத்தின் தீமைகளைக் களைவது நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது.

ஆகவே, தூய எமிலியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவர் நல்ல கல்விபெற பாடுபடுவோம். எப்போதும் இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்

image