St. Fortuntus The Philosopher St. Mark & Marcellian

ஜுன் 18

தூயவர்களான மாற்கு மற்றும் மார்செலியன்

mary

தூயவர்களான மாற்கு மற்றும் மார்செலியன் (ஜூன் 18)

“இக்காலத்தில் நாம் படுகின்ற துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றை என நான் எண்ணுகிறேன்” (உரோ 8:18)

வாழ்க்கை வரலாறு

மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையில் வாழ்ந்து வந்த தம்பதியர் ட்ராங்குளினஸ் மற்றும் மார்சியா. இவர்களுக்கு மாற்கு மற்றும் மார்செலியன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்கள்.

இவர்கள் இப்படி கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருக்கின்ற செய்தி எப்படியோ அப்போது உரோமையின் அரசனாக இருந்த டையோகிளசியனுக்குத் தெரியவந்தது. உடனே அவன் இவர்கள் இருவரையும் பிடித்து சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யத் தொடங்கினான். தங்களுடைய இரு பிள்ளைகளுக்கும் இவ்வாறு நேர்ந்துவிட்டதை அறிந்த ட்ராங்குளினஸ் மற்றும் மார்சியா சிறையில் இருந்த தங்களுடைய இரு மகன்களிடம் சென்று, “எதற்காக நீங்கள் இருவரும் இப்படி கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். பேசாமல் உரோமைக் கடவுளை வழிபட்டுவிட்டு உங்களுடைய உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.

அதற்கு மாற்கும் மார்செலியனும், “எங்களுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, நாங்கள் ஒருபோதும் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திலிருந்து விலகமாட்டோம்” என்று மிக உறுதியாகச் சொன்னார்கள். இதனால் அவர்களுடைய பெற்றோர் ஏமாற்றத்தோடும் அதே நேரத்தில் மிகுந்த வருத்தத்தோடும் சென்றார்கள்.

இதன்பிறகு இச்செய்தி உரோமை அரசாங்கத்தில் படைத்தளபதியாக செபஸ்தியாருடைய காதுகளைச் சென்றடைந்தது. அவர் கொடுங்கோலன் டயோக்ளசியனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பின்வாங்கிய பலரை விசுவாசத்தில் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். மாற்கும் மார்செயலியனும் இப்படி கிறிஸ்தவ விசுவாசத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை அறிந்து, அவர்களிடத்தில் சென்று அவர்களை நம்பிக்கையில் இன்னும் உறுதிபடுத்தினார். அதனால் அவர்கள் நம்பிக்கையில் இன்னும் வலுப்பெற்றார்கள்.

இது நடந்து முப்பது நாட்களுக்கு பின் மாற்கு மற்றும் மார்செலியன் இருவரும் கொடுங்கோலனுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “நீங்கள் இருவரும் உரோமைக் கடவுளை வழிபட்டுவிட்டு, கிறிஸ்துவை மறுதலித்தீர்கள் என்று சொன்னால், நீங்கள் வாழ்வது உறுதி. அப்படியில்லாமல் கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தில் உறுதியாக இருந்தால், நீங்கள் சாவது உறுதி” என்றான். அவர்கள் கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்ததால், அவன் அவர்களைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். மாற்கு மற்றும் மார்செலியன் கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்து மறைசாட்சிகள் ஆனார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மாற்கு மற்றும் மார்செலியன் இவர்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், இவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறுதிவரை மனவுறுதியோடு இருத்தல்

தூய மாற்கு மற்றும் மார்செயலியன் இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர்களுடைய மன உறுதிதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் விசுவாசத்திலிருந்து விலகவில்லை, மாறாக மனவுறுதியோடு இருந்தார்கள். இவர்களைப் போன்று நாம் மனவுறுதியோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இங்கே மன உறுதிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இன்னொருவரைச் சொல்லலாம். அவர்தான் எட்மன்ட் ஹிலாரி.

நியூசிலாந்திலுள்ள ஆக்லாண்டில் பிறந்தவர் ஹிலாரி. ‘மலையேற்றம்’ பலருக்குப் பொழுதுபோக்கு; ஹிலாரிக்கோ அதுதான் வாழ்க்கை. அப்படிப்பட்டவர் 1952 ஆம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏற முயற்சி செய்தார். அவரோடு டென்சிங்கும் இருந்தார். அந்த முயற்சி தோற்றுப்போனது. தட்பவெப்ப நிலை மிக மோசமாக இருந்தது. ஹிலாரி, எவரெஸ்ட்டில் ஏற முடியக்வில்லையே என்கிற ஏக்கத்துடன் திரும்பினார். முற்றிலும் குலைந்து போயிருந்தார். கிட்டத்தட்ட எவரெஸ்ட்டின் முக்கால்வாசி தூரம் போய்விட்டு, உச்சியைத் தொடாமல் திரும்பியிருந்தது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்திருந்தது.

சில வாரங்கள் கழித்து ஹிலாரிக்கு இங்கிலாந்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாரோ ஓர் அமைப்பினர் `எங்கள் உறுப்பினர்களிடம் வந்து நீங்கள் பேச வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். முதலில் அவருக்கு இங்கிலாந்துக்குப் போகவே மனமில்லை. ஆனால், எங்கேயாவது போய்வந்தால், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும், மன அமைதி கிடைக்கும் என்றும் தோன்றியது. கிளம்பிவிட்டார்.

குறிப்பிட்ட அந்த நாளில் விழா மேடையில் ஏறினார் ஹிலாரி. அவ்வளவுதான்... இடிமுழக்கம்போல் எழுந்தது கரவொலி. அதுவரை தன்னை ஒரு தோல்வியாளர் என நினைத்திருந்த ஹிலாரிக்கு அது ஆச்சர்யத்தைத் தந்தது. அரங்கிலிருந்தவர்களின் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது. அந்தப் பாராட்டு மழை அவர் இதயத்தையே நனைத்துவிட்டது. அவரால் முதலில் பேசக்கூட முடியவில்லை. பார்வையாளர்கள் அவருடைய சாகசத்தை, அதன் அருமையைத் தெரிந்துகொண்டதற்கான அங்கீகாரத்தை அவர் உணர்ந்துகொண்டார். ‘நீங்கள் தோல்வியாளர் இல்லை மிஸ்டர் ஹிலாரி!’ என்று அந்தக் கைதட்டல் சொல்வதுபோல அவருக்கு இருந்தது. அந்த நிமிடத்தில் அவர் மனதில் ஓர் உறுதி பிறந்தது.

ஹிலாரி மைக்கின் முன்னாலிருந்து மெல்ல நகர்ந்து வந்தார். மேடையில் நடந்தார். மேடையின் பின்புறத்தில் ஒரு மலையின் படம் வரையப்பட்டிருந்தது. ஹிலாரி, அதன் உயரத்தைத் தொட்டுக்காட்டி, தன் முஷ்டியை உயர்த்தி உரத்த குரலில் இப்படிச் சொன்னார், ``எவரெஸ்ட் சிகரமே! முதல்முறை உன்னைத் தொட்டுவிட வந்தபோது நீ என்னைத் தோற்கடித்துவிட்டாய். அடுத்த முறை நான் உன்னைத் தோற்கடித்துவிடுவேன். ஏனென்றால், எப்படி நீ வளர்ந்திருக்கிறாயோ அதேபோல நானும் வளர்ந்துகொண்டிருக்கிறேன்’’

அவர் மன உறுதி அதைச் சாதித்தும் காட்டியது. 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி அவரும் டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள். ‘எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இருவர்’ என்ற பெருமையையும் பெற்றார்கள்.

மனவுறுதியோடு இருந்தால் எதுவும் சாத்தியமே என்பது இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகவே, தூய மாற்கு மற்றும் மார்செலியன் ஆகியோருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று இறுதிவரை மனவுறுதியோடு இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image