St. Boniface Of Querfurt St. Juliana Falconieri St. Protase St. Romuald

ஜுன் 19

தூய ரோமுவால்ட்

mary

தூய ரோமுவால்ட் (ஜூன் 19)

“அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக்கொண்டிருக்கின்றது. இப்பொழுது, உன் கைகள சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தை வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய் (தொநூ 4: 10, 11)

வாழ்க்கை வரலாறு

ரோமுவால்ட், இத்தாலியில் உள்ள ரவென்னாவில் 951 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய சிறு வயதில் எந்தவொரு கவலையும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவருடைய தந்தை, பக்கத்து வீட்டுக்காரரோடு இருந்த சொத்துத் தகராறில் அவரைக் கொன்றுபோட்டுவிட்டார். கொன்றுபோட்டதோடு மட்டுமல்லாமல், தனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று உயிருக்குப் பயந்து தலைமறைவானார். இதை நேரில் கண்ட ரேமுவால்ட் மனம் வருந்தினார். தன்னுடைய தந்தை செய்த தவற்றிற்கு பிராயச்சித்தம் செய்ய நினைத்தார். எனவே இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியாக வாழத் தொடங்கினார்.

சில காலம் அங்கிருந்து பயிற்சிகள் பெற்று துறவியாக வாழ்ந்து வந்த ரேமுவால்ட்டிற்கு மடத்தில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள் பிடிக்கவில்லை. அவை மிகவும் தளர்வாக இருக்கின்றன என்பதை உணர்ந்த இவர் மரினுஸ் என்பவரிடத்தில் சென்று பயிற்சி பெறத் தொடங்கினார்.

இதற்கிடையில் இவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்றெல்லாம் திட்டம் தீட்டினார். ஆனால் ஒவ்வொருமுறையும் இவர் ஒவ்வொரு நாட்டிற்கும் நற்செய்தி அறிவிக்கச் செல்லும்போது ஏதாவது ஒரு நோய் தாக்கி, அங்கு போகமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இவர் அயல்நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பது தனக்குச் சரிப்படாது என நினைத்து கமல்டோலி என்னும் இடத்தில் துறவற மடம் ஒன்றை நிறுவி அங்கே கடுந்தவம் செய்து, ஜெபத்தில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தத் தொடங்கினார்.

இப்படி ஜெப தவ வாழ்க்கையில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்ற சமயத்தில், முன்னர் சொத்துத் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரைக் கொன்றுபோட்டுவிட்டு ஓடிப்போன ரேமுவால்ட்டின் தந்தை மனம் வருந்தி அவருடைய சபையில் வந்து சேர்ந்து நல்லதொரு துறவியாக வாழத் தொடங்கினார்.

இப்படி எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் திடிரென ஒருநாள் ரேமுவால்ட் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி. 1027 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1595 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரேமுவால்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனின் திருவுளம் எதுவென உணர்ந்து வாழ்தல்

தூய ரேமுவால்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நினைவுக்கு வந்து போகிறது. ஏனென்றால் இவர் தன்னுடைய வாழ்வின் தொடக்க காலத்தில் பல நாடுகளுக்குச் சென்று, நற்செய்தி அறிவிக்கவேண்டும், அங்கு மறைசாட்சியாகக் கொல்லப்படவேண்டும் என்று இருந்தார். ஆனால், இறைவனுடைய திருவுளமோ அவர் சொந்த நாட்டிலே இருந்து அங்கு ஒரு துறவற அமைத்து, அதில் ஜெப தவ வாழ்க்கை வாழவேண்டும் என்று இருந்தது. இதனை அவர் அடிக்கடி நோய்வாய்ப்படும்போதுதான் தெரிந்தது.

பல நேரங்களில் நாமும்கூட நம்முடைய மனம் விரும்பியதை எல்லாம் செய்ய நினைக்கின்றோம். ஆனால் இறைவனோ நமக்கு வேறொரு திட்டத்தினை வைத்திருக்கின்றார். நாம் அந்தத் திட்டத்தின்படி நடக்கின்றபோது இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட நிலையை அடைகின்றோம்.

சவுல் பவுலாக மாறுவதற்கு முன்பாக கிறிஸ்தவர்களை கொன்றொழிப்பதை தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சவுலை ஆண்டவர் இயேசு தடுத்தாட்கொண்டு, புறவினத்தாருக்கு இறைவாக்கினராக, நற்செய்தி அறிவிப்பாளராக மாற்றுகின்றார். பவுலும் இறைவனின் திருவுளத்தை தன்னுடைய விருப்பமாக ஏற்றுக்கொண்டு புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கின்றார். அதற்காக தன்னுடைய உயிரையும் தருகின்றார். ஆகவே, நாம் நம்முடைய விருப்பத்தின் நடவாமல் இறைவனின் திருவுளப்படி நடக்கின்றபோது நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும். அது ஆண்டவரின் அருளை நமக்கு நிறைவாய் பெற்றுத்தரும்.

எனவே, தூய ரேமுவால்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று ஆண்டவரின் திருவுளத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image