St. Aloysius Gonzaga

ஜுன் 21

தூய அலோசியஸ் கொன்சாகா

mary

தூய அலோசியஸ் கொன்சாகா (ஜூன் 21)

நிகழ்வு

ஒரு சமயம் அலோசியஸ் கொன்சாகா தன்னுடைய ஆன்ம குருவாகிய இராபர்ட் பெல்லார்மினிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அலோசியசிடம், “உம்முடைய ஆன்மா உத்தரிக்க வேதனையை அடையாமல் நேரடியாக விண்ணகப் பேரின்பத்தைப் பெறப்போகிறது” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அலோசியஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தான் உத்தரிக்க வேதனையை அடையாமல் நேரடியாக விண்ணகப் பேரின்பத்தை அடைய இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

கடவுள் தரக்கூடிய விண்ணகப் பேரின்பத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அவர் எத்தகைய தூய, மாசற்ற வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என நாம் உணர்துகொள்ளவேண்டும்.

வாழ்க்கை வரலாறு

அலோசியஸ் கொன்சாகா 1568 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் நாள் இத்தாலியில் பிறந்தார். இவருடைய தந்தை பிராண்டோ, தாய் மார்த்தா என்பவர் ஆவார். இவருடைய குடும்பம் அரசக் குடும்பம். குடும்பத்தில் அலோசியஸ்தான் தலைமகன் என்பதால் இவருக்கு சிறுவயதிலேயே போர்த்தொழில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அதன் வழியாக இவருடைய தந்தை இவரை நாட்டிற்கு அரசராக ஏற்படுத்த நினைத்தார். ஆனால் அலோசியசோ அதில் நாட்டம் கொள்ளமால், ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளத் தொடங்கினார். இவருக்கு ஒன்பது வயது நடந்துகொண்டிருந்தபோதே இவர் தனியாக கற்பு என்ற வார்த்தைப் பாட்டை எடுத்தார். இவருடைய நடவடிக்கைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இவருடைய் தந்தை, இவரை ஸ்பெயின் நாட்டில் இருந்த மன்னர் இரண்டாம் பிலிப் என்பவரிடம் அனுப்பி வைத்து இவருடைய மனதை மாற்றும்படி செய்யச் சொன்னார். ஆனால் இவரோ அங்கு சென்றபோதும்கூட தான் கொண்டிருந்த கொள்கையிலிருந்து மனம்மாறாமல் ஆன்மீகத்தில் மேலும் மேலும் வளரத் தொடங்கினார். தனியாக இருக்கும்போது புனிதர்கள் வரலாற்றை வாசித்து ஆன்மீகத்தில் மேலும் மேலும் வளரத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இவருக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இவருடைய தந்தை, இவரை குருவாகப் போகவிடக்கூடாது என்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஆனால் இவரோ தான் குருவாகத்தான் போவேன் என்று மிக உறுதியாக இருந்து, இறுதியில் அதனை சாதித்தும் காட்டினார். 1585 ஆம் ஆண்டு இவர் இயேசு சபையில் சேர்ந்து, குருவாக கல்வி கற்கத் தொடங்கினார். இவர் குருத்துவ படிப்பை மேற்கொள்ளும்போது இவர் செய்த ஒறுத்தல் முயற்சிகள் மிகவும் கடுமையாக இருந்தன. வாரத்தில் இரண்டு நாட்கள் இவர் உணவு உண்ணுவதே இல்லை, தன்னுடைய உடலை மிகவும் வருத்திக்கொண்டு தவ முயற்சிகளைச் செய்தார். இவர் மேற்கொண்ட தவ முயற்சிகளைப் பார்த்த சபைத் தலைவர், இவரிடம் ஒறுத்தல் முயற்சிகளைக் குறைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதன்பிறகே இவர் உடலை வருத்தும் அளவுக்கு மேற்கொண்ட ஒறுத்தல் முயற்சிகளைக் குறைத்துக்கொண்டார்.

இவருடைய ஆன்ம குரு இராபர்ட் பெல்லார்மின் என்பவர் ஆவார். இவர் அலோசியசின் புண்ணிய வாழ்க்கையைப் பார்த்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அந்தளவுக்கு அலோசியஸ் மிகவும் தூய வாழ்க்கை வாழ்ந்துவந்தார். 1587 ஆம் ஆண்டு உரோமை நகரில் கடுமையான கொள்ளைநோய் ஏற்பட்டது. இந்தக் கொள்ளை தாக்கி ஏராளமான மக்கள் இறந்துபோனார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலையைப் பார்த்த அலோசியஸ் கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் பணிசெய்ய முன்வந்தார். தனக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் இருந்தாலும் (சிறுநீரகத்தில் பிரச்சனை, தீராத தலைவலி இவருக்கு இருந்து வந்தது) அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் நோயினால் பாதிக்கப்பட மக்களுக்கு அவர் உதவிசெய்யத் துணிந்தார். இறுதியாக அந்த நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமடைந்தார்.

இவர் தன்னுடைய சாவு நெருங்கி வருவதை நன்றாக உணர்ந்தார். தான் இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு அடுத்து, இறப்பதாக உணர்ந்தார். அதன்படியே இவர் இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு அடுத்து 1591 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் நாள் இறந்தார். 1726 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த பதிமூன்றாம் பெனடிக்ட் இவரை இளைஞர்களுக்கு பாதுகாவலராக ஏற்படுத்தினார். தன்னுடைய 23 ஆம் வயதிலே புண்ணிய வாழ்க்கை வாழ்ந்து இறையடி சேர்ந்த அலோசியஸ் கொன்சாகா இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், நம் அனைவருக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அலோசியஸ் கொன்சாகாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்

நோயாளிகள்மீது அக்கறை

தூய அலோசியஸ் கொன்சாகா நோயாளிகள்மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்தார் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்கமுடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் உரோமை நகரில் நகரில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் அவர் ஆற்றிய பணி அளப்பெரியது. அலோசியஸ் கொன்சாகாவை போன்று நாமும் நோயாளிகளின் மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கிறோமா? என்பதை நம்முடைய கவனத்திற்கு உட்படுத்தவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “நான் நோயுற்று இருந்தேன். என்னை கவனித்துக் கொண்டாயா?, கவனித்துக்கொண்டாய்” என்பார் (மத் 25: 36). அப்படிச் சொல்லிவிட்டுத் தொடர்வார், “மிகச் சிறியோராகிய இவர்களுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்”. ஆம், நாம் நோயில் கிடக்கும் சாதாரண ஏழை எளிய மக்களுக்குச் செய்கின்ற உதவிகள் யாவும், இறைவனுக்குச் செய்கின்ற உதவிகள் ஆகும் என்பதை இதன்வழியாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். உண்மையில் நாம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழை எளிய மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முற்காலத்தில் ஒரு யூத ரபி இருந்தார். அவர் ஒவ்வொருநாளும், தான் வசித்த வந்த ஊரில் இருந்த தொழுகைக்கூடத்தில் கற்பித்து வந்தார். ஆனால் அவரிடம் ஒரு வித்தியாமான பழக்கம் இருந்தது. அது என்னவென்றால் ஒவ்வொரு ஓய்வுநாளின் மாலைவேளையிலும் அவர் காணாமல் போய்விடுவார். அடுத்தநாள்தான் அவர் திரும்பி வருவர். ரபியின் இத்தகைய செயல்பாடு தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எனவே அவர்கள் ஒரு உளவாளியை ஏற்படுத்தி, ரபி எங்கு போகிறார் என்று கவனிக்கக் சொன்னார்கள். அதன்படி ஓர் ஓய்வுநாளின் மாலைவேளையில் ரபி வெளியே கிளம்பும்போது உளவாளி அவர் பின்னாலேயே சென்று, அவர் என்ன செய்கிறார் என்று கவனிக்கத் தொடங்கினான். ரபி பக்கத்து ஊரில் இருந்த ஒரு குடிசைக்கு உள்ளே சென்றார். அந்தக் குடிசையின் உள்ளே ஒரு வயதான பெரியவர் படுத்த படுக்கையாய் இருந்தார். அவரை படுக்கையிலிருந்து வெளியே தூக்கி வந்த ரபி அவரைக் குளிப்பாட்டி, அவருக்கு உணவு தயாரித்துக் கொடுத்து, அவருடைய குடிசையை சுத்தம் செய்துவிட்டு திரும்பி வந்துவிட்டார்.

அடுத்தநாள் தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள் உளவாளியிடம், முந்தின நாள் ரபி எங்கே சென்றார் என்று கேட்டார்கள். அதற்கு அந்த உளவாளி, “அவர் மேலே சென்றார்” என்றார். அவர்கள், “மேலே என்றால் சொர்க்கத்திற்கா?” என்று கேட்க, அவர், “சொர்க்கத்தையும் தாண்டி அவர் சென்றார்” என்று பதிலளித்தார்.

நாம் நோயாளிகளுக்கு, வறியவர்களுக்கு உதவி செய்கின்றபோது விண்ணகத்தை நிச்சயமாக அடைவோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, தூய அலோசியஸ் கொன்சாகாவைப் போன்று நாமும் நோயாளிகள்மீது அதிக அக்கறை கொண்டு வாழ்வோம்.

இளைஞர்களுக்கு முன்மாதிரியானவர்

தூய அலோசியஸ் கொன்சாகா தூய, புண்ணிய வாழ்க்கை வாழ்ந்த ஓர் உன்னதமான மனிதர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவருடைய குடும்பம் அரச குடும்பம். அவரிடத்தில் பணம், பதவி எல்லாமே குவிந்துகிடந்தது. ஆனாலும் அவர் அவற்றில் நாட்டம் கொள்ளமால் ஆன்மீகக் காரியங்களில் நாட்டம் கொள்ளத் தொடங்கினார். அதனால்தான் அவர் இன்றைக்கு புனிதராக உயர்ந்துநின்றார். நாம் எதில் நாட்டம் கொண்டு வாழ்கிறோம் என சிந்தித்துப் பாரக்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும் (மத் 6: 33) என்பார். நாம் இறைவனை நாடி தேடிச் செல்லும்போது எல்லா நலமும் ஆசிரும் நமக்கு நிரப்பக் கிடைக்கும் என்பது உறுதி.

ஆனால் இன்றைக்கு இருக்கும் இளைய சமுதாயம் (ஏன் எல்லாரும்தான்) கடவுளை மறந்து, உலகு சார்ந்த வாழ்க்கை வாழ்வது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. தொலைதொடர்பு சாதனங்களுக்குள்ளும், சிற்றின்ப நாட்டங்களுக்கும் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பது மிகவும் கவலை அளிக்கின்றது. “உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே” என்கிறது சபை உரையாளர் புத்தகம் (சஉ 12:1).

ஆகவே தூய அலோசியஸ் கொன்சாகாவின் விழாவைக் கொண்டாடும் இந்த் நாளில் நாமும் அவரைப் போன்று நோயாளிகள் மீது அக்கறைகொண்டு வாழ்வோம், இறைவனுக்கு உகந்த தூய வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image