St. Alban St. Eberhard Of Salzburg St. John Fisher
St. Paulinus Of Nola St. Thomas More

ஜுன் 22

தூய தாமஸ் மூர்

mary

தூய தாமஸ் மூர் (ஜூன் 22)

நிகழ்வு

இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றியின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தாமஸ் மூர் கொல்லப்படுவதற்காக தூக்குமேடைக்கு கொண்டுவரப்பட்டார். அவ்வாறு அவர் கொண்டு வரப்பட்டபோது அவருடைய நீண்ட தாடி வருகின்ற வழியில் இருந்த மரக்கிளைக்குள் மாட்டிக்கொண்டு அவருக்கு பெருத்த வலியைத் தந்தது. அப்போது அவர் தன்னை இழுத்து வந்த அதிகாரியைப் பார்த்து, “நான் தண்டிக்கப்படுவது சரி, எதற்காக என் தாடியும் தண்டிக்கப்பட வேண்டும்?” என்றார். அவர் இவ்வாறு பேசியதைக் கேட்ட அந்த சிறை அதிகாரி சிரித்தே விட்டார். அதன்பிறகு அந்த சிறை அதிகாரிக்கு தாமஸ் மூர் மீது இரக்கம்வந்தது. இருந்தாலும் மன்னரின் கட்டளை என்பதால் அவருக்குத் தூக்குத் தண்டைனையை நிறைவேற்றினார். தாமஸ் மூர் தன்னுடைய சாவை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்.

வாழ்க்கை வரலாறு

தாமஸ் மூர் 1477 ஆம் ஆண்டு யோவான் மூர், ஆக்னஸ் என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு எலிசபெத் என்னும் சகோதரி ஒருவர் இருந்தார்.

தாமஸ் மோரின் தந்தை யோவான் மூர் லண்டனில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். எனவே அவர் தன்னுடைய மகனை ஒரு வழக்குரைஞராக உருவாக்கவேண்டும் என்று கனவு கண்டார்.. பின்னாட்களில் தாமஸ் மூர் நல்ல முறையில் கல்வி கற்று, வழக்குரைஞராக மாறி தந்தையின் கனவை நனவாக்கினர். தாமஸ் மூர் ஒரு வழக்குரைஞராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் தத்துவவியலாளர், எழுத்தாளர், ஆலோசகர் போன்ற பல்வேறு தனித்தன்மைகளைப் பெற்றிருந்தார். 1516 ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘உட்டோபியா’ என்னும் புத்தகம் ஒரு நாடு அல்லது ஒரு சமூக அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பேசியதால் அது பலருடைய பலருடைய கவனத்தைப் பெற்றது. இதற்கிடையில் தாமஸ் மூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இங்கிலாந்து நாட்டின் மன்னர் எட்டாம் ஹென்றியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக செயல்பட்டார். இவர் நிதியமைச்சராக செயல்பட்ட காலத்தில் ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். அதனால்தான் 2000 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் யோவான் பவுல் இவரை அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் முன்மாதிரி என்று குறிப்பிட்டார்.

இப்படி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் மன்னன் எட்டாம் ஹென்றி, தன்னுடைய மனைவி கேத்ரின் என்பவரை தனக்கு ஆண் வாரிசு கொடுக்காததினால், விலக்கிவிட்டு ஆன்பொலின் என்னும் பெண்ணை மணந்தான். இதனை தாமஸ் மூர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் மன்னனோ, “நான் இங்கிலாந்து நாட்டின் அரசன். எனவே நான்தான் இங்குள்ள திருச்சபைக்குத் தலைவன். என்னுடைய இந்த முடிவுக்கு நீ ஆதரவு தரவில்லை என்றால், உன்னைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்வேன்” என்றான். தாமஸ் மூர் அதற்கெல்லாம் பயப்படாமல் தன்னுடைய கொள்கையில் – விசுவாசத்தில் - மிக உறுதியாக நின்றார். இதனால் சினங்கொண்ட அரசன் அவரைப் பல மாதங்கள் சிறையில் வைத்து பட்டினி போட்டு, இறுதியில் கொடூரமாகக் கொலை செய்தான். தாமஸ் மூர் கொல்லப்பட்ட ஆண்டு 1535 ஆம் ஆண்டு ஆகும். இவருக்கு 1888 ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும் 1935 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய தாமஸ் மூரின் விழாவை கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

உண்மையை உரக்கச் சொல்வோம்

தூய தாமஸ் மூரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்வதுதான். அரசனே தவறு செய்தாலும் அதை தவறு என்று சுட்டிக்காட்டுகின்ற நெஞ்சுரம், துணிச்சல் அவரிடத்தில் இருந்தது. அவரிடத்தில் இருந்த நெஞ்சுரம் துணிச்சல் நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்முடைய கண்முன்னே அநீதி நடந்தாலும் கூட அதைக் கண்டும் காணாமலும் போகின்ற அவல நிலைதான் நம்மிடத்தில் இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தாமஸ் மூரிடம் இருந்த துணிச்சல், உண்மையை உரக்கச் சொல்கின்ற பாங்கு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

இங்கே விடர்போ நகரைச் சேர்ந்த ரோஸ் என்ற புனிதையின் வாழ்வினை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

ரோசிற்கு எட்டுவயது நடந்து கொண்டிருந்தபோது அன்னை மரியா அவருக்குக் கனவில் தோன்றி, “மகளே ரோஸ்! நீ வாழும் பகுதியில் முன்மாதிரியான பிள்ளையாக வாழவேண்டும்” என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். அன்றிலிருந்தே ரோஸ் அன்னை மரியா சொன்னதுப் போன்று முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ரோசிற்கு 12 வயது நடந்துகொண்டிருந்தபோது விடர்போ நகரை ஆட்சிசெய்து வந்த மன்னன் திருத்தந்தைக்கு எதிராக காரணமே இல்லாமல் கலகம் செய்தான். அங்கிருந்த மக்கள் எல்லாம் நமக்கெதற்கு வம்பு என்று அவன் செய்து வந்த இந்தத் தவற்றினை கண்டும் காணாமலும் இருந்தார்கள். ஆனால் ரோசோ மிகவும் துணிச்சலாக வீதியில் இறங்கி அரசனுடைய தவறை ஊருக்குத் தெரிகின்ற அளவில் புட்டுப்புட்டு வைத்தார். இதனால் சினங்கொண்ட அரசனுடைய ஆட்கள் அவரைப் பிடித்துக்கொண்டு போய் சிறையில் அடைக்கத் திட்டமிட்டார்கள். ஆனால் இறை ஏவுதலால் உணர்த்தப்பட்ட ரோஸ் தன்னுடைய குடும்பத்தாரோடு வேறொரு நகருக்குச் சென்றுவிட்டார். அரசன் இறக்கும்வரை அங்கே இருந்தார்.

அரசன் இறந்தபிறகு மீண்டுமாக அவர் விடர்போ நகருக்கு வந்து முன்புபோல் தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் முன்மாதிரியான பெண்ணாக வாழ்ந்து வந்தார். 12 வயதே ஆன ரோஸ் அரசன் செய்த தவற்றினை மிகவும் துணிச்சலாகச் சுட்டிக்காட்டியது என்பது நமக்கெல்லாம் வியப்பாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் உண்மையின் உரைகல்லாக, இயேசுவின் விழுமியங்களின் படி நடப்பவர்களாக வாழவேண்டும் என்பதுதான் தூய ரோஸ், தூய தாமஸ் மூர் இவர்களுடைய வாழ்க்கை வரலாறு நமக்கு எடுத்தியம்புகின்றது.

ஆகவே, தூய தாமஸ் மூரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று இயேசுவின் விழுமியங்களின் படி நடப்போம், உண்மையின் உரைகல்லாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image