St. Etheldreda St. Joseph Cafasso

ஜுன் 23

தூய ஜோசப் கபோசோ

mary

தூய ஜோசப் கபோசோ (ஜூன் 23)

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக் 4: 18-19)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜோசப் கபோசா 1811 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 15 ஆம் நாள், இத்தாலியில் உள்ள காஸ்தல்நோவா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். ஆனால், பக்தியில் சிறந்து விளங்கிய குடும்பம்.

ஜோசப் கபோசா பெற்றோரிடமிருந்து கற்ற பக்தி நெறியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தார். சிறுவயதிலே கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதே நேரத்தில் அன்னை மரியாவிடம் மிகுந்த பக்திகொண்டு வளர்ந்து வந்தார். தன் மகன் இப்படி பக்திநெறியில் மேலோங்கி வளர்வதைக் கண்ட ஜோசப் கபோசாவின் தாயார் அவரைக் குருமடத்திற்கு அனுப்பிவைத்தார். அவரும் குருமடத்திற்குச் சென்று நன்றாகப் படித்து, தன்னுடைய 22 வயதிலே குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

குருவாக மாறிய பின்பு தூரின் நகரில் இருந்த ஒரு துறவு மடத்தில் அறநெறி ஆசிரியராக குருமாணவர்களுக்கு பாடம் நடத்தத் தொடங்கினார். குருமாணவர்கள் இவருடைய பாடவேளைக்காக மிகவும் தவமிருந்து கிடந்தார்கள். அந்தளவுக்கு இவர் மாணவர்களுக்கு பாடங்களை மிக எளிதாகச் சொல்லிக் கொடுத்தார். இவர் பாடங்களைச் சொல்லிக்கொடுத்ததை விடவும் இவருடைய வாழ்வு எடுத்துக்காட்டாக இருந்தது. அதனால் பலர் இவரை ஆன்ம குருவாக எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தில் வளர்ந்து வந்தார்கள். அப்படி இவரைத் தன்னுடைய ஆன்மீக குருவாக வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்தவர் ‘இளைஞர்களின் பாதுகாவலராக’ அறியப்படுகின்ற தொன் போஸ்கோ ஆவார்.

ஜோசப் கபோசா ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்குவதில் வல்லவராக விளங்கினார். எந்தளவுக்கு என்றால், இவரிடத்தில் பாவ மன்னிப்புக் கேட்க ஆயர்கள், கர்தினால்கள், குருக்கள் என பலரும் வந்தனர். இவரும் அவர்களுக்கு நல்லமுறையில் ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கி, ஆன்மீக வாழ்வில் அவர்களைக் கரை சேர்த்தார். ‘ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்’ என்று சொன்ன இயேசுவின் வாக்குகளை தன்னுடைய வேதவாக்காக எடுத்துக்கொண்ட இவர் ஏழைகளுக்காக தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விற்றுக் கொடுத்தார். அவர்களுடைய வாழ்வு வளம் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார்.

இப்படி பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் மனந்திரும்பி வாழ்வதற்குப் பாடுபட்டார். இதற்கிடையில் இவர் தான் இருந்த துறவுமடத்தின் அதிபராகவும் உயர்ந்தார். இப்படி ஓர் ஆசிரியராகவும் பலருக்கு ஆன்ம குருவாகவும் சிறைக் கைதிகளுக்கு ஒரு நல்ல நண்பனாகவும் விளங்கிய ஜோசப் கபோசா, 1860 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1947 ஆம் ஆண்டு, திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜோசப் கபோசாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

விளிம்புநிலை மக்களிடத்தில் அக்கறை

தூய ஜோசப் கபோசாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் எந்தளவுக்கு சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்த ஏழைகள், அனாதைகள், சிறைக்கைதிகள்மீது அன்பும் அக்கறையும் உண்மையான மனித நேயமும் கொண்டிருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இவரது நினைவு நாளைக் கொண்டாடும் நாம், இவரைப் போன்று ஏழை எளியவரிடத்திலும் விளிம்பு நிலையில் உள்ள மக்களிடத்திலும் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் சிறையில் வாடும் சிறைக்கைதிகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற அவர்களுக்கு நம்முடைய அன்பும் ஆதரவும் தேவையானதாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்து, சிறையில் இருப்போர் விடுதலை பெறவேண்டும் என்று முழமிட்டார். அவருடைய அன்புக் கட்டளைக்கு இணங்க, இன்று பலரும் சிறைப்பணியை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்தகைய பணியில் நம்மையும் இணைப்பதே சிறப்பானது.

ஆகவே, தூய ஜோசப் கபோசாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வு முன்னேற நாமும் நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image