St. Febronia St. William of Montevergine

ஜுன் 25

மொன்டே விர்ஜினே நகர தூய வில்லியம்

mary

மொன்டே விர்ஜினே நகர தூய வில்லியம் (ஜூன் 25)

“தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்” (மாற் 3: 14-15).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் வில்லியம், இத்தாலியில் உள்ள வெர்செல்லியில் 1085 ஆம் ஆண்டு, ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். தொடக்கத்தில் இவருடைய வாழ்க்கையில் எல்லாருமே நன்றாகப் போய்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட தருணத்தில் இவருடைய பெற்றோர் இருவரும் இவரைவிட்டுப் பிரிந்துவிட, இவர் தன்னுடைய உறவினரின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார்.

வில்லியம் சிறுவயது முதலிலே பக்தி நெறியில் சிறந்துவிளங்கி வந்தார். ஒருசமயம் இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள தூய சந்தியாகப்பர் ஆலயத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் சென்றுவிட்டுத் திரும்பும்போது துறவியாக வாழவேண்டும் என்னும் ஆசைகொண்டார். அதனடிப்படையில் இவர் மொன்டே சொலிகோலி என்னும் இடத்தில் துறவற மடம் அமைத்து ஜெப தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இவர் அங்கிருக்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டு, நிறைய இளைஞர்கள் அவரைப் பார்ப்பதற்கும் அவரிடமிருந்து ஆலோசனை பெறுவதற்கும் வந்தார்கள். அவரும் அவர்களுக்கு நல்லவிதமாய் ஆலோசனைகளை வழங்கிவந்தார். ஒருசில நாட்கள் கழித்து, வில்லியம் அங்கு வந்த இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் மொன்டே விர்ஜினேயில் துறவற மடம் அமைத்து, அங்கு ஜெப தவ வாழ்க்கையில் முழுமையாய் ஈடுபட்டு வந்தார். இவரிடத்தில் பயிற்சி பெற நிறைய இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இவர் நல்லதொரு வழிகாட்டியாய் செயல்பட்டு வந்தார். ஒருசில இளைஞர்கள் துறவுமடத்தில் ஒழுங்குமுறைகள் கடுமையாக இருக்கின்றன என்று சொல்லி, மடத்திலிருந்து வெளியேறினார்கள். அத்தகைய சூழ்நிலையிலும் இவர் மடத்தின் விதிமுறைகளைத் தளர்த்தாமல், முன்பு பின்பற்றப்பட்டு வந்த, விதிமுறைகளையே பின்பற்றிவந்தார்.

ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு துறவற மடத்தின் தலைவராக ஜான் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த சமயத்தில் நிறைய துறவு மடங்கள் நிறுவப்பட்டன. இப்படி துறவு மடங்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் வில்லியம் 1142 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் நாள், இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மொன்டே விர்ஜினே நகர தூய வில்லியமின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நேரிய மனதோடு தவம் செய்வோம்

தூய வில்லியமின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நாம் நேரிய உள்ளத்தோடு வழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் அதிலும் குறிப்பாக தவத்தை – நோன்பினை - மேற்கொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். “பக்தா, உன் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!” என்றார். பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு முன்பாக நன்றாக விழுந்து வணங்கிவிட்டு “நிறைய செல்வம் வேண்டும்!” என்றார். “அப்படியே ஆகட்டும்”’ என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள்.

மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை! பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எதேச்சையாகத் தெருவைப் பார்த்தால் அங்கே ஒரு பெட்டி கிடந்தது. அக்கம் பக்கத்தில் யாரையும் காணோம்! ஆச்சர்யத்தோடு அந்தப் பெட்டியை நெருங்கினார் பக்தர். திறந்துபார்த்தார், உள்ளே முழுவதும் தங்கம், வெள்ளி, வைர நகைகள்! அவர் படாரென்று பெட்டியை மூடினார். அதை வீட்டுக்குள் கொண்டுவந்தார்.

‘ஒருவேளை, இதுதான் கடவுள் சொன்ன செல்வமாக இருக்குமோ?’ ம்ஹூம், இது அநேகமாக யாரோ திருடிய சொத்து. நான் இதை விற்றுப் பணமாக்க முயற்சி செய்தால் போலிஸ் என்னைப் பிடித்து உள்ளே போட்டுவிடும்!’ என்று அவருடைய உள்மனது சொன்னது. இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவெடுக்க முடியாமல் திணறினார். அடுத்த ஒன்றிரண்டு நாள்கள் அவர் கவலையோடு சுற்றிக்கொண்டிருந்தார். கடைசியில் பிரச்னையே வேண்டாம் என்று அந்தப் பெட்டியைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார்.

அன்று மாலை, அவர் தியானத்தில் அமர்ந்தபோது, கடவுள் அவர்முன்னே தோன்றினார். “பெட்டி நிறைய செல்வம் அனுப்பினேனே, பெற்றுக்கொண்டாயா?” என்று கேட்டார். “அச்சச்சோ! அது நீ அனுப்பினதா? சொல்லவே இல்ல! அதை என்னமோ ஏதோ என்று நான் போலிஸ்ல கொடுத்துட்டேனே!” என்றார் பக்தர். அதற்குக் கடவுள் பக்தரிடம், “நீதான் அந்தப் பெட்டி கைக்கு வந்தபிறகு தியானமும் செய்யவில்லை, தவமும் செய்யவில்லை, ஒரு நிமிஷம் கண்மூடி நிற்கக்கூட இல்லை! ஒருவேளை நீ செல்வம் உன் கைக்குக் கிடைத்த பின்னர் முன்புபோல் தவம் செய்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்காதே” என்றார். இதைக் கேட்ட பக்தர் மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

அவர் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் கண்களை மேலே உயர்த்திப் பார்த்தப்போது கடவுள் அங்கு இல்லை.

உலக செல்வங்களை அடைவதற்குத் தவமிருந்தால் அதனால் நாம் அடைவது ஒன்றுமில்லை. மாறாக ஒப்பற்ற செல்வத்திற்காக, இயேசுவை அடைய, தவமிருந்தோம் என்றால் நாம் ஏராளமான செல்வத்தை அடைவோம் என்னும் உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நம்முடைய சிந்தனைக்குரியது.

ஆகவே, தூய வில்லியமின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நேரிய உள்ளத்தோடு இறைவனை வழிபடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image