St. John And Paul St. Josemaria Escriva De Balaguer_Y_Albas
St. Zyymunt Corazdowski St. Vigilius

ஜுன் 26

தூய விஜிலியஸ்

mary

தூய விஜிலியஸ் (ஜூன் 26)

இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்” என்றார். (மாற் 16: 15-16)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் விஜிலியஸ் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமையில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.

இவர் தன்னுடைய உயர் கல்வியை ஏதன்ஸ் நகரில் கற்றார். இவர் அங்கு படித்துக் கொண்டிருக்கும்போது மிகவும் எளிமையாக வாழ்ந்துவந்தார். ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தும் மிகவும் எளிமையாக இவர் வாழ்ந்தது பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. இவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு பலரும் இவரைப் போன்று மிகவும் எளிமையாக வாழத் தொடங்கினார்கள்.

இவர் ஏதென்சில் கல்வியை முடித்துக்கொண்டு தன்னுடைய சொந்த ஊரான ட்ரென்ட்டிற்கு வந்தபோது இவரை ட்ரென்ட்டின் ஆயராக உயர்த்தினார்கள். ஆயர் பொறுப்பினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட இவர், பல ஆலயங்களைக் கட்டியெழுப்பினார். அது மட்டுமல்லாமல் அந்த ஆலயங்களில் மக்களை நிரப்ப, பலருக்கும் ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்து, அவர்களைக் கிறிஸ்தவ மறையில் சேர்த்தார்.

இப்படி அவர் பல்வேறு பல்வேறு இடங்களுக்குச் சென்று, ஆண்டவருடைய நற்செய்தியை மக்களுக்கு வல்லமையோடு எடுத்துரைத்துக் கொண்டிருந்த தருணத்தில் இவர்மீது மலையிலிருந்து கல்விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போனார். இவருடைய இறப்புச் செய்தியைக் கேட்ட பலரும் கதறி அழுதார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய விஜிலியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

எளிமை

தூய விஜிலியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவருடைய எளிமையான வாழ்க்கைதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய விஜிலியஸ் செல்வம் படைத்தவராக இருந்தபோதும் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். அந்த வாழ்க்கை பலருக்கும் முன்மாதிரியாக இருந்தது. தூய விஜிலியசைப் போன்று நாம் எளிமையான வாழ்க்கை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சூபி ஞானி உமர் உலகப் புகழ்பெற்ற ஞானி. எளிமையான வாழ்க்கையை எப்படி மனிதன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர். அவர் எப்போதும் படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் அமர்ந்திருப்பார். அவர் வீட்டுக்கு வரும் உறவினர்களை வரவேற்று மகிழ்விக்கும் கடமையையும் விடாமல் செய்வார்.

ஒருநாள் அவர் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தார். உமரின் தத்துவச் சிந்தனைகளில் பறிகொடுத்த அவர், ஞானியின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கவனித்துவந்தார். உமர் பெருமகனோ தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார். பொழுது வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. தன்னுடைய பணியில் சற்றும் கவனச் சிதறல் இல்லாமல் உமர் எழுதிக்கொண்டேயிருந்தார்.

இரவு வந்த பின்னரும், ஞானி உமர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். ஒற்றை விளக்கின் ஒளியில் எழுதிக்கொண்டே இருந்தார். விளக்கில் எண்ணெய் தீர்ந்துகொண்டிருந்தது. ஒளியும் குறைந்து கொண்டிருந்தது. உறவினருக்கு எண்ணெய் ஊற்றி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஞானியிடம் எண்ணெய் ஊற்றவாவென்று கேட்டார். “வேண்டாம், வீட்டுக்கு வந்த உறவினர்களை வேலைவாங்குவது அழகல்ல” என்றார் உமர். “அப்படியானால் தங்கள் வேலைக்காரனை அழைத்து ஊற்றச் சொல்லலாமே?” என்று சொன்ன அன்பரிடம், உமர், “வேண்டாம். அவன் நாளெல்லாம் உழைத்துவிட்டு இப்பொழுதுதான் உறங்கச் சென்றிருக்கிறான். களைத்துப் போயுள்ளான். உறங்குவான்”

இப்படிச் சொல்லிவிட்டு உமர் தானே எழுந்துசென்று விளக்கில் பொறுமையாக எண்ணெய் ஊற்றிவிட்டுத் திரியை ஏற்றிவிட்டுத் திரும்பிவந்து மீண்டும் அமைதியாக எழுதத் தொடங்கினார். இது வந்தவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. “அய்யா! தாங்கள் உலகம் தலைவணங்கும் பெரும் ஞானி இந்த விளக்கில் எண்ணெய் ,ஊற்றத் தாங்களே எழுந்து செல்ல வேண்டுமா? வேறு எவரிடம் சொன்னாலும் செய்து விடுவார்களே?” என்றார். “இல்லை. நான் உமராக எழுந்து சென்றேன். உமராக விளக்கில் எண்ணெய் ஊற்றினேன். உமராகத் திரும்பிவந்து உமராக எழுதுகிறேன்” என்றார் உமர்.

அவர் இப்படிச் சொன்னதைக் கேட்டு வந்தவர், உமர் எவ்வளவு எளிமையானவர் என்பதை அப்போது உணர்ந்துகொண்டார்.

ஆம், எளிமை குடிக்கொண்டிருக்கும் இடத்தில் எல்லா நல்ல பண்புகளும் குடிகொண்டிருக்கும். தூய விஜிலியசும் இப்படி எளிமையோடு இருந்ததால்தான் அவரிடம் எல்லா நல்ல பண்புகளும் குடிகொண்டிருந்தன.

ஆகவே, தூய விஜிலியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று எளிமைக்கு இலக்கணமாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image