St. Irenaeus Of Lyons

ஜுன் 28

தூய இரேனியஸ்

mary

தூய இரேனியஸ் (ஜூன் 28)

பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானே?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காவே நான் பிறந்தேன்; இதற்காகவே நான் உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்கு செவி சாய்க்கின்றனர்” என்றார் (யோவா 18:37)

வாழ்க்கை வரலாறு

இரேனியஸ், ஆசிய மைனரில் உள்ள சிமிர்னாவில் பிறந்தார். இவர் எப்போது பிறந்தார் என்பது குறித்த தெளிவான சான்றுகள் இல்லை. ஆனால் இவர் முதலாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இவர் போலிகார்ப்பின் சீடர். இந்த போலிகார்ப் இயேசுவின் அன்புச் சீடரும் நற்செய்தியாளருமான யோவானுக்குச் சீடர். இரேனியஸ் வளர்ந்து பெரியவனாகியபோது பிரான்சில் உள்ள லயன்ஸ் என்ற இடத்தில் ஆயராக இருந்த போத்தினுஸ் என்பவரின் கீழ் குருவாகப் பணியாற்றி வந்தார். இந்த சமயத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேத கலாபனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆயர் போத்தினுசும் அதில் கொல்லப்பட்டார். இதனால் இரேனியஸ் லயன்ஸ் நகரின் ஆயராக ஏற்படுத்தப்பட்டார்.

இரேனியஸ் ஆயராக உயர்ந்தபிறகு பல பிரச்சனைகளைச் சந்தித்தார். அதில் முக்கியமான ஒரு பிரச்சனைதான் ‘நாஸ்டிசிசம்’ எனப்படும் தப்பறைக் கொள்கையாகும். இக்கொள்கை ‘இறைவன் தருகின்ற மீட்பு எல்லாருக்கும் கிடையாது, இயேசுவால் யாராருக்கெல்லாம் ஞானம் வெளிப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கே உரியது என்றும் எல்லாவற்றையும் துறந்து இயேசுவின் வழியில் நடப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானது எனவும் சொல்லிவந்ததது. இதனை இரேனியஸ் மிகக் கடுமையாக எதிர்த்தார். மேலும் புதிய ஏற்பாட்டில் இருந்த பல சான்றுகளைக் கொண்டு அந்த தப்பறைக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தப் பிரச்சனை ஓய்ந்த சில நாட்களிலேயே கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை மீண்டுமாக தலைதூக்கத் தொடங்கினார். இந்த சமயத்தில் ஆயர் இரேனியஸ் மக்களை இறைநம்பிக்கையில் மேலும் மேலும் வளர்த்தெடுத்தார். இவர் மக்களை விசுவாசத்தில் உறுதிபடுத்துகிறார் என்ற செய்தி உரோமை அரசன் செப்டிமுஸ் செவேரசுக்குத் தெரியவர, அவன் இவரை கொலை செய்தான்.

இவ்வாறு இரேனியஸ் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி, தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இரேனியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

சாட்சிய வாழ்வு வாழ்வோம்

தூய இரேனியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்ததும், அதன்பொருட்டு தம் உயிரையே கையளித்ததும்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய இரேனியசைப் போன்று நாம் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும் என்று சொல்கின்றபோது அதில் மூன்று முக்கியமான கூறுகள் அடங்கியிருக்கின்றன. அறிதல், அறிவித்தல், உயிரைத் தருதல் என்பவைதான் அந்த மூன்று கூறுகள் ஆகும்.

ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகரவேண்டும் என்றால், அவரைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும். திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போல் ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்க்கவேண்டும். இயேசுவைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவரைப் பற்றி சான்று பகர முடியாது என்பதுதான் உண்மை.

சான்று பகர்தலில், அறிதல் முதல்கட்டம் என்று சொன்னால், அறிவித்தல் அடுத்த கட்டமாக இருக்கின்றது. இன்று பலர் இயேசுவைக் குறித்து ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அறிந்ததை அறிவிக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. ‘நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்’ என்கிறார் இயேசு. அப்படியானால் நாம் ஒவ்வொருவரும் இயேசுவைக் குறித்து அறிந்தவற்றை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும்.

சான்று பகர்வதில் நிறைவாக வருவது உயிரைத் தருவதாகும். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அதனால் பலன் ஒன்றுமில்லை, மடிந்தால்தான் மிகுந்த பலன் கொடுக்கும். கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றபோது, அவரை அறிந்து, அறிவித்தல் மட்டும் போதாது. அவருக்காக நம்முடைய உயிரையும் தரவேண்டும். அப்போதுதான் சாட்சிய வாழ்வு முழுமை பெறும். இன்று நாம் நினைவுகூரும் தூய இரேனியசும் அப்படித்தான் இயேசுவை அறிந்து, அவரை மக்களுக்கு அறிவித்து, அதன்பொருட்டு தன்னுடைய உயிரைத் தந்தார்.

ஆகவே, தூய இரேனியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image