St. Bertrand Of Le Mans Bl. Basil Velychkovsky
Bl. Januarius Sarnelli Frist Martyrs of Rome

ஜுன் 30

உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள்

mary

உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் (ஜூன் 30)

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்னைமா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்? (உரோ 8: 35)

வாழ்க்கை வரலாறு

உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் என்று இன்று நாம் நினைவுகூருகிறவர்களின் பட்டியலில் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர் யாவரும் அடங்குவர்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, கிறிஸ்தவம் வேகமாக வளரத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக உரோமையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்தது. இது உரோமையை ஆண்டுவந்த அரசர்களுக்குப் பிடிக்கவே இல்லை.

இதற்கு மத்தியில் கி.பி.64 ஆம் ஆண்டு உரோமை நகரமே தீயில் பற்றி எரிந்தது. இதைப் பார்த்த மக்கள் யாவரும் நீரோ மன்னன்தான் தன்னுடைய அரண்மனையை விரிவுபடுத்த இப்படி உரோமை நகரைத் தீக்கிரையாக்கிவிட்டு கபட நாடகம் ஆடுகிறான் என்று பேசத் தொடங்கினார்கள். செய்தி நீரோ மன்னனின் காதுகளை எட்டியது. அவன் தனக்கு ஏற்பட்ட இந்த அவப்பெயரை எப்படியாவது சரிக் கட்டவேண்டும் என்று, கிறிஸ்தவர்கள்தான் இந்த தீ விபத்துக்குக் காரணம் என்று அவர்கள்மீது பழியைத் தூக்கிப் போட்டான்.

இதனால் கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. பல குருக்களும் ஆயர்களும் ஏன் திருத்தந்தையர்கள் கூட கொல்லப்பட்டார்கள், பலர் கொடிய விலங்குகளுக்கு முன்பாக தூக்கி வீசப்பட்டு அவற்றிற்கு இரையாக்கப்பட்டார்கள். எனவே எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் கேட்கத் தொடங்கின.

உரோமையில் இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீரோ மன்னனுக்குத் தெரியாமல் செனட்டானது கூட்டப்பட்டது. அதில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசயம் அறிந்த மன்னன் நீரோ 68 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டான். இவ்வாறு வாளை எடுத்தவன் வாளாலே மடிவான் என்ற இயேசுவின் கூற்று மன்னன் நீரோவின் வாழ்வில் அரங்கேறியது. மறுபக்கமோ கிறிஸ்தவர்களோ தங்களுடைய விலை மதிக்கப்பெறாத இரத்தத்தைச் சிந்தி ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வந்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகளுடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

உயிர் கொடுத்து, உயிர்த்த ஆண்டவருக்கு சாட்சிகளாகத் திகழ்வோம்.

உரோமைத் திருச்சபையினுடைய முதல் மறைசாட்சிகளின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர்கள் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி, அவருக்குச் சான்று பகர்ந்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதை விடவும் மேலான அன்பு யாரிடமும் இல்லை” என்று. ஆம், இயேசு என்னும் நண்பருக்காக தங்களுடைய இன்னுயிரையே தியாகம் செய்த இந்த மறைசாட்சிகள் நம்முடைய கவனத்திற்கு உரியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களைப் போன்று நாம் இயேசுவுக்காக அவருடைய கொள்கைகளுக்காக – விழுமியங்களுக்காக – உயிர் துறக்கத் துணிகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, ஒசியானாத் தீவில் மறைசாட்சியாக உயிர்நீத்த தூய பீட்டருடைய வாழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருளுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. இவர் பிரான்ஸ் நாட்டில் கெயே நகரில் 1803ம் ஆண்டு இவர் பிறந்தார். புதுநன்மை வாங்கிய நாளன்றே மறைபரப்புப் பணியில் ஈடுபட மாளாத ஆவல் கொண்டார். அதனால் 18 ஆம் வயதில் குருமடத்தில் சேர்ந்து குருப்பட்டம் பெற்று தம் சபைத் தோழர் ஒருவருடன் ஒசியானியாத் தீவுக்கு மறைரப்புப் பணிக்காக புறப்பட்டார்.

அங்கு சென்ற பீட்டர் மறைபரப்புப் பணியை மிகச் சிறப்பாகச் செய்தார், இதனால் அந்தத் தீவில் இருந்த பலர், தீவின் தலைவனுடைய மகன் உட்பட திருமுழுக்குப் பெற்றனர். இதனால் சினம்கொண்ட எனவே தீவின் தலைவன் அடியாட்களை அனுப்பி தடிகளால் பீட்டரை கடுமையாக தாக்கி அடித்துக் கொன்றான். போதகரைக் கொல்லும்போது கிறிஸ்தவ வேதமும் கொல்லப்படும் எனக் கருதினான். ஆனால், இவர் இறந்த 2 ஆண்டுகளுக்குப் பின் ஒசியானாத் தீவு முழுவதும் கிறிஸ்தவ மறையைத் தழுவியது. இன்றைக்கு பீட்டரை இப்பகுதியினர் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்துகின்றனர்.

கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதித்து கிறிஸ்துவுக்காக தன் உயிரைத் தந்த தூய பீட்டர் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இவரைப் போன்று நம் உயிரைத் தந்து, இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வதுதான் நம்முன்னே இருக்கின்ற சவாலாக இருக்கின்றது.

ஆகவே, உரோமையின் முதல் மறைசாட்சிகளுடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image