St. Oliver Plunkett St. Shenute St. Junípero Serra

ஜுலை 1

புனித ஜுனிபெரோ செர்ரா

mary

புனித ஜுனிபெரோ செர்ரா (ஜூலை 01)

“என் வாழ்நாள் முழுக்க நான் ஒரு நற்செய்திப் பணியாளராகவே வாழ ஆசைப்பட்டேன். ஏனென்றால் கிறிஸ்துவைக் குறித்தும் அவர் அறிவித்த நற்செய்தியைக் குறித்தும் அறியாமல் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதை நான் பெற்ற பேறுபலனாகக் கருதுகிறேன்” – ஜூனிபெரோ செர்ரா

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜூனிபெரோ செர்ரா, 1713 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள மஜோர்கா என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து தன்னுடைய தொடக்க கல்வியை பால்மா என்னும் இடத்தில், பிரான்சிஸ்கன் சபை துறவிகள் நடத்தி வந்த பள்ளியில் கற்றார். அப்போதே இவருக்கு ஒரு குருவாக மாறி, ஆண்டவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டானது. எனவே இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவாகப் படிக்கத் தொடங்கினார். 1736 ஆம் ஆண்டு குருவாகவும் உயர்ந்து நின்றார்.

குருவாக மாறியபின்பு பல இடங்களுக்குச் சென்று, ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கலாம் என்று கனவுகண்டிருந்த இவருக்கு, குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றவேண்டும் என்று சொல்லப்பட்டதும் மனம் உடைந்து போனார். இருந்தாலும் இதனை அவர் இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்டு, குருமாணவர்களுக்கு நல்லவிதமாய் பாடம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகள் இவர் குருமாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பின்பு, முன்பு இவர் கண்ட கனவு நனவாகத் தொடங்கியது. ஆம், இவருக்கு நீயூ மெக்கிசிக்கோவிற்கு நற்செய்தியை அறிவிக்கக்கூடிய அழைப்பு வந்தது. உடனே இவர் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் அங்கு நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார்.

புதிய இடம், புதிய பணி, புதிய மனிதர்கள் இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் ஜூனிபெரோ செர்ரா ஆர்வத்தோடு நற்செய்திப் பணியை செய்யத் தொடங்கினார். இதனால் பலர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக வாழத் தொடங்கினார்கள். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் நீயூ மெக்கிசிக்கோவில் பணியாற்றிய ஜூனிபெரோ செர்ரா, அதன்பிறகு கலிபோனியாவிற்குச் சென்று நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். இங்கேயும் இவர் பலரை கிறிஸ்தவ மறைக்குள் கொண்டுவந்து சேர்த்தார்.

ஜூனிபெரோ செர்ரா, தன்னுடைய நற்செய்திப் பணிவாழ்வில் பல செவ்விந்தியர்களைச் சந்தித்தார். அவர்களுக்கும் இவர் ஆண்டவரின் நற்செய்தியை ஆர்வத்தோடு அறிவித்தார். ஒருசில இடங்களில் இவர் பிரச்சனைகளையும் சந்தித்தார். அந்தப் பிரச்சனைகளைக் கண்டு இவர் மனம் தளர்ந்து போய்விடாமல் துணிவோடு நற்செய்தியை அறிவித்து வந்தார்.

இவர் அடிக்கடி சொள்ளக்கூடிய வார்த்தைகள் ‘Always Forward, Never Backward’ என்பதாகும். அதாவது இவர் முன் வைத்த காலை, பின்வைக்கக் கூடாது என்பதை வேதவாக்காகக் கொண்டு வாழ்ந்து வந்தார். இத்தகையதொரு ஆர்வமிக்க நற்செய்திப் பணியாளரான ஜூனிபெரோ செர்ரா நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாகி, 1784 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1988 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

அருளாளராகிய ஜூனிபெரோ செர்ராவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம்

ஜூனிபெரோ செர்ராவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் நற்செய்தியை அறிவிப்பதில் கொண்டிருந்த ஆர்வம்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவர் நற்செய்தி அறிவிப்பை ஏதோ கடமைக்காகச் செய்யாமல், தான் பெற்ற மிகப்பெரிய பேறாகவே செய்துவந்தார். இவரிடத்தில் இருந்த நற்செய்தியை அறிவிக்கின்ற ஆர்வம் நமக்கு இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருக்கும் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கின்ற கடமை இருந்தாலும், அதனை செய்வதற்கு ஏனோ நாம் தயங்குகின்றோம். இன்னும் சொல்லப்போனால், அதில் நாம் ஈடுபாடு கொள்ளாமலே இருக்கின்றோம். இத்தகையதொரு ஈடுபாடற்ற நிலையை நாம் நம்மிடமிருந்து அப்புறப்படுத்தி விட்டு, ஆண்டவரின் நற்செய்தியை ஆர்வத்தோடு செய்யவேண்டும். அருளாளராகிய ஜூனிபெரோ செர்ரா ஆண்டவரின் நற்செய்தியை ஆர்வத்தோடு அறிவித்தார். அதற்காக அவர் சந்தித்த சவால்களும் பிரச்சனைகளும் ஏராளம். நாமும் ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றபோது சந்திக்கின்ற சவால்கள் ஏராளமாக இருந்தாலும் இறைவன் தரக்கூடிய ஆசிர்வாதம் மிகப்பெரியது.

ஆகவே, அருளாளரான ஜூனிபெரோ செர்ரா போன்று ஆண்டவரின் நற்செய்தியை ஆர்வத்தோடும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image