St. Antony Mary Zaccaria

ஜுலை 5

தூய அந்தோனி மரிய சக்கரியா

mary

தூய அந்தோனி மரிய சக்கரியா (ஜூலை 05)

“இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்து கொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு” (2 திமொ 4: 2)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் அந்தோனி மரிய சக்கரியா 1502 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள ரெமோனா என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த சில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்துபோனார். எனவே, இவர் தாயின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார்.

இவர் தன்னுடைய தொடக்கக்கல்வியை தனது சொந்த ஊரிலே கற்றுமுடித்தபின்பு, மேற்படிப்புப் படிக்க, அதாவது மருத்துவப் படிப்புப் படிக்க பதுவா நகருக்குச் சென்றார். அங்கு இவர் மருத்துவப் படிப்பைப் படித்து முடித்த பின்பு, அங்கிருந்த ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்துவந்தார். இந்த சமயத்தில்தான் இவர் இறைவனுடைய அழைப்பை உணர்ந்தார். எனவே இவர் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு குருமடத்தில் சேர்ந்து, குருத்துவப் படிப்புப் படித்து, தனது 26 வயதில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

குருவாக மாறியபின்பு, முன்பு செய்துவந்த சேவையைத் தொடர்ந்து செய்து வந்தார். அதோடுகூட ஆன்மீகப் பணியையும் செய்து வந்தார். ஒருசில ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு மிலன் நகருக்குச் சென்று, பணியாற்றத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில்தான் மார்டின் லூதர் கிங் திருச்சபையில் பிரிவினையையும் குளறுபடிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற அந்தோனி தன்னுடைய வல்லமை மிக்க போதனையால் இறைமக்களை நம்பிக்கையில் வலுப்படுத்தினார். மேலும் துறவற சபையை ஏற்படுத்துவதன் தேவையை உணர்ந்தார். அதன்பேரில் தனக்கு நன்கு அறிமுகமான ஐந்து அருட்தந்தையர்களின் உதவியுடன் இருபாலருக்கும் தனித்தனி துறவற சபையை ஏற்படுத்தினார். இதன்மூலம் மக்களுடைய விசுவாசத்தைக் கட்டி எழுப்பினார்.

இவர் மக்கள் தங்களுடைய தீச்செயல்களிலிருந்தும் தீய வாழக்கையிலிருந்தும் மனமாற்றம் பெறவேண்டும் என்று அதிகமாக விரும்பினார். அதனால் இவர் தன்னுடைய கையில் சிலுவையை ஏந்திக்கொண்டு, மக்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் நின்றுகொண்டு, “ஆண்டவர் இயேசு நமக்காகப் பாடுபட்டு இறந்தார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி நடக்கவேண்டும்” என்று போதித்தார். அவருடைய போதனையைக் கேட்ட நிறையப் பேர் மனமாற்றம் அடைந்தார்கள்.

இவர் நற்கருணை ஆண்டவரிடத்திலும் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். 40 மணிநேர தொடர் நற்கருணை ஆராதனையை இவர் அறிமுகப்படுத்தினார். மேலும் ஆண்டவர் இயேசு பாடுபட்டு இறந்ததை நினைவு கூருகின்ற வகையில் பிற்பகல் மூன்று மணிக்கு ஆலய மணியை அடிக்கின்ற வழகத்தினை கொண்டு வந்தார்.

இப்படி ஏழைகளின் பங்காளியாய், தீருச்சபையினுடைய காவலனாய் பணியாற்றிய அந்தோனி மரிய சக்கரியா திடிரென்று நோய்வாய்ப்பட்டு, தன்னுடைய 37 வயதில் அதாவது 1539 ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1897 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அந்தோனி மரிய சக்கரியாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லல்

தூய அந்தோனி மரிய சக்கரியாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் பல்வேறு பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தாலும், அவர் மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றதுதான் உடனே நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. அவர் மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றார் என்றால், ஓர் இறைவாக்கினரைப் போன்று மிக சிறப்பாக முறையில் பணிகளைச் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் திருமுழுக்கு யோவான் பாவத்தில் விழுந்து கிடந்த மானுட சமூகத்தினை தன்னுடைய வல்லமைமிக்க போதனையால் மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றார். அவருடைய போதனையால் தொடப்பட்டு பலரும் மனமாற்றம் அடைத்தார்கள். ஏறக்குறைய திருமுழுக்கு யோவானைப் போன்று இன்று நாம் நினைவுகூரும் தூய அந்தோனி மரிய சக்கரியாவும் மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றார். அந்த வகையில் பார்க்கின்றபோது இவரும் ஓர் இறைவாக்கினர்தான்.

தூய அந்தோனி மரிய சக்கரியாவைப் போன்று நாமும் மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனெனில் பாவி ஒருவர் திருந்துவது விண்ணகத்தில் மிகப்பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தும். நாம் அத்தகைய பணிகளைச் செய்யும்போது அது ஆண்டவருக்கு உகந்ததாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

ஆகவே, தூய தூய அந்தோனி மரிய சக்கரியாவைப் போன்று மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image