St. Maria Goretti St. Palladius

ஜுலை 6

தூய மரியா கொரெட்டி

mary —

தூய மரியா கொரெட்டி

பிறப்பிடம் : கொரினால்டோ, இத்தாலி
நினைவு நாள் : ஜூலை 6

அமைதியைத் தேடி
மாதாவின் குழந்தைகள், இளையோர், கற்பழிக்கப்பட்டோர், ஏனையோரின் காதுகாவலி.

இத்தாலியில் வயல்வெளி தொழிலாளரான ஒருவரின் ஐந்து குழந்தைகளில் ஒருவராக மரியா கொரட்டி 1890 ஆம் ஆண்டு பிறந்தார். வீட்டிலேயே வேலைக்குத் தேவைப்பட்டதால், மரியா பள்ளிக்குச் செல்லஇயலவில்லை. இதனால் எழுதப் படிக்கத் தெரியவில்லை. மன உறுதி மற்றும் ஈடுபாடு மிகுந்த குழந்தையான இவருக்கு புதுநன்மை வாங்குவதற்கு முன்பாக மறைக்கல்வி கற்பதற்கு பெரும்பாடாக இருந்தது.

ஒருநாள் பிற்பகல் வேளையில், அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் வயலில் வேலைக்குச் சென்றிருந்தபோது, தனது குழந்தைத் தங்கையைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே தங்கியிருந்தார். சகோதரன் போன்று மதிக்கத்தக்க 19 வயதுள்ள பக்கத்து வீட்டு இளஞன் அலெக்ஸாண்டர் இவரது வீட்டிற்கு வந்து காம இச்சையோடு மரியாவை நெருங்கினார். மரிய இணங்க மறுத்தபோது, அவளை மேற்கொண்டு கழுத்தைப் பிடித்து நெறித்தார். மூச்சு திணறியபோது, அவன் செய்ய நினைப்பது தவறு என்றும், தனது கற்பை இழப்பதற்குப் பதிலாக அவள் தனது உயிரை இழக்கத் தயாராக இருப்பதாகவும் மரியா அவனிடம் கூறினார். வெறிகொண்டு, அலெக்ஸாண்டர் மரியாவை பலமுறை கத்தியால் குத்தினார். சாவின் விளிம்பில் அவளைத் தரையில் தள்ளிவிட்டு ஓடிவிட்டார். மரியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மரியா தன்னைத் தாக்கியவரை மன்னித்து விட்டதாகக் கூறி கடைசியாக நற்கருணை வாங்கினார். அவரது தாயார் உடனிருக்க மரியா அமைதியாக மரித்தார்.

மன்னிப்பின் வல்லமை :
அலெக்ஸாண்டர் சிறையில் அடைக்கப்பட்டாலும், மனம் வருந்த மறுத்தார். பெண் ஒருவர் அவருக்கு காட்சி ஒன்றில் தோன்றி லீலி மலர்களை அவருக்கு வழங்கினார். ஒவ்வொரு லீலி மலரையும் அவர் வாங்கியவுடன், அது ஒரு ஒளிச்சுடராக மாறியது. மரியா தன்னை மன்னித்து விட்டதாக இந்தக் காட்சி மூலம் தெரிவிக்கிறார் என்பதாகக் கருதி, அலெக்ஸாண்டர் ஒரு திருந்திய கைதியாக மாறினார். தனது தண்டனைக் காலமான 30 ஆண்டு சிறைக்காவல் 27 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு விடுதலையானார். விடுதலையான பின்னர் மரியாவின் தாயாரிடம் மன்னிப்பு கோரினார். 1950 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பயஸ் மரியாவை புனிதராக திருநிலைப்படுத்தியபோது அவர் உரோமையில் இருந்தார்.

செபம் :
தூய மரிய கொரெட்டி, பதினோராம் வயதிலேயே, தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய உயிரையே இழக்கத் துணிந்தார். முடிவில்லா நிலைவாழ்வைத் தரும் பாதையை விட்டு விலகி பயணிக்கும் மகிழ்வில்லா மனித குலம் மீது இரக்கத்தோடு கண்ணோக்கும். இயேசுவைப் புண்படுத்தும் எதையும் செய்யாமலிருக்க எங்கள் எல்லோருக்கும் குறிப்பாக இளையோருக்கும் மனத்திடனையும் ஒழுக்கத்தையும் கற்பித்தருளும். பாவத்தின் கனாகனம் புரிந்து கொள்ளவும், அதனால் இவ்வுலகில் ஒரு தூய வாழ்வு வாழவும், விண்ணுலகில் நிலையான மகிழ்ச்சி பெறவும் செய்தருளும். ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
மரிய கொரெட்டி தனது கற்பைக் காப்பாற்றிக்கொள்ள போராடியதும், தன்னைத் தாக்கியவனை மன்னித்ததும், தனது புது நன்மைக்காக தயாரிக்கும்போது கற்றுக்கொண்ட ஞான ஒழுக்கம் பற்றிய அவரது புரிதலைத் தெளிவாக்குகிறது. தன்னைத் தாக்கியவரை மன்னித்ததால், அவர் அமைதியாக இறக்க முடிந்தது. அவளது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால், அவளது எதிரி தனது வாழ்வை திருத்திக் கொள்ள முடிந்தது.

1981 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், தன்னை துப்பாக்கியால் சுட்ட இளைஞனை சிறைச்சாலையில் சென்று சந்தித்தது, இன்றைய சூழலில் இயேசு போதித்த மன்னிப்புக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நம்முடைய உறவினர், நண்பர்கள், உடன் உழைப்பாளர் இவர்களிடையே நாம் இத்தகைய மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோமாக. இந்த அறிவுரைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்வோம்.

யாரையாவது நீங்கள் புண்படுத்தியதாக உணர்ந்தால் உடனே அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். கடவுளுடைய உதவியால் நீங்கள் ஒரு வருந்தும் சூழலை குணமளிக்கும் சூழலாக மாற்ற முடியும்.

குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஒருவரைத் தீர்ப்பிடாமல், அவரது நற்குணங்களை காண முயற்சிக்க வேண்டும்.
உண்மையாகவும், தாராளமாகவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

லி.ஜெ. ஜோசப்

 

image