St. Nicholas Pieck St. Pauline

ஜுலை 9

தூய பவுலின் (ஜூலை 09)

mary

தூய பவுலின் (ஜூலை 09)

“பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து, “என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன். நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுகொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன் என்னைத் தேடி வந்தீர்கள்” என்பார். (மத் 25: 34-36)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பவுலின், 1865 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள, வட்டரோவில் பிறந்தார். இப்பகுதியில் அமைதியில்லாத சூழல் நிலவியதால், இவருடைய குடும்பம் பிரேசிலுக்கு இடம் பெயர்ந்தது. அப்போது இவருக்கு வயது பத்து.

பவுலின் சிறுவயது முதலே பக்தியில் சிறந்து விளங்கி வந்தாள். இது மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்து வீட்டிலிருந்த குழந்தைகளுக்கு மறைக்கல்வி சொல்லிக் கொடுத்து வந்தாள்.

இப்படியே இவருடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்க, ஒருநாள் இவர் ஒரு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதரைச் சந்தித்தார். அவரைச் சந்தித்த பின்பு, இவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறத் தொடங்கியது. ஆம், சமூகத்தில் இருக்கின்ற இதுபோன்ற நோயாளிகள், கைவிடப்பட்டவர்கள், அனாதைகள் இவர்களுக்கு ஏன் நாம் உதவி செய்யக்கூடாது என்று மிகத் தீவிரமாக யோசித்தார். அதன் வெளிப்பாடாக இவர் Little Sisters of the Immaculate Heart என்றொரு சபையை நிறுவினார். இதில் ஏராளமான பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பினால், இவர் பல நல்ல பணிகளைச் செய்து வந்தார்.

ஏழை எளியோர், பல்வேறு விதமான நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் ஆற்றி வந்த சேவை, பல தரப்பினரிடமிருந்தும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதே நேரத்தில் ஒருசிலர் இவருடைய வளர்ச்சியைப் பிடிக்காமல், இவருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார்கள். குறிப்பாக இவரைத் தேவையற்ற விதங்களில் எல்லாம் விமர்சனம் செய்தார்கள். அவற்றையெல்லாம் இவர் பொறுமையோடு தாங்கிக்கொண்டார்.

மக்களுடைய விமர்சனங்கள் ஒருபுறம் இவரைத் தாக்கியது என்றால், இவருக்கு வந்த நீரழிவு நோய் இவரைக் கடுமையாகத் தாக்கியது. அதனால் இவரால் முன்புபோல் பணிகளைச் சிறப்பாகச் செய்யமுடியாமல் போனது. ஒருகட்டத்தில் இவருடைய நோய் முற்றவே, இவர் படுத்தபடுக்கையாகி, 1942 ஆம் ஆண்டு இறந்துபோனார். இவருக்கு 2002 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ஏழை எளிய மக்களுக்காகவும் நோயாளிகள் நலம்பெறவும் தன்னுடைய வாழ்வினை அர்ப்பணித்த தூய பவுலினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நோயாளிகளை கவனித்துக்கொள்வோம்

தூய பவுலினின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் ஏழை எளியவர்களிடமும் நோயாளிகளிடமும் கொண்டிருந்த கரிசனையும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுவுக்கு வந்து போகின்றது. அவர் நோயினால் பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பு மக்களையும் பராமரித்துக் கொண்டார், அவர்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுத்தார். இவரைப் போன்று நாம் நோயாளிகளிடத்தில் கரிசனையும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு குடும்பங்களிலும் சரி, சமூகத்திலும் சரி உடல், மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவர்களிடத்தில் அல்லது இவர்களுக்கு மத்தியில் நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை, முதியோர்களைக் கண்டும் காணாமல் போகின்ற போக்குதான் அதிகமாக இன்று நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலில் நாம் அவர்களுக்கு சேவை செய்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இந்த இடத்தில் தன்னுடைய மாத வருமானத்தில் இருபத்து ஐந்து சதவீதத்தை நோயாளிகளுக்கும் கைவிடப்பட்ட முதியவர்களைப் பராமரிப்பதற்காகவும் செலவிடும் மதுரைக்கு அருகில் உள்ள பரசுராம்பட்டியைச் சார்ந்த ஆறுமுகம் அவர்களைக் குறித்துச் சொல்லியாக வேண்டும். சிறு வயதிலே தன்னுடைய தந்தையை இழந்த இவர், ஏழை எளிய மாணவர்களுக்கு உதவியும் வீதியோரங்களில் இருக்கின்ற நோயாளிகளைக் கவனித்துக் கொண்டும் வருகின்றார். அதற்காக தன்னுடைய மாத வருமானத்தில் இருபத்து ஐந்து சதவீதத்தைச் செலவு செய்து வருகின்றார்.

தானுண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று வாழ்வோருக்கு மத்தியில் பிறருக்காக வாழும் ஆறுமுகம் ஒரு நல்ல உதாரணம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image