St. Veronica St. Hermagorus St. John Gualbert

ஜுலை 12

தூய ஜான் கால்பர்ட்

mary

தூய ஜான் கால்பர்ட் (ஜூலை 12)

“இயேசு பேதுருவிடம் கூறியது, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்” (மத் 18:22)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜான் கால்பர்ட் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரில் 993 ஆம் ஆண்டு, ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் மிகவும் பக்தியாக இருந்தார். ஆனால் வளர்ந்து பெரியவனாகியபோது, உலகப் போக்கிலான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.

இதற்கிடையில் இவருடைய சகோதரன் ஹூக் என்பவரை ஒருவன் கொன்றுபோட, அவனை எப்படியாவது பழி தீர்க்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தார். இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்கின்றபோது, புனித வெள்ளியன்று இவர் தேடிக்கொண்டிருந்த எதிரி இவரிடத்தில் எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாதவாறு வசமாக மாட்டிக்கொண்டான். இதுதான் சமயம் என்று இவர் அவனைக் கொல்லமுயன்றபோது, அவனோ இவர் காலில் விழுந்து, “ஆண்டவர் இயேசுவின் பெயரால் என்னை மன்னித்துவிடு” என்று கெஞ்சிக் கேட்டான். இது குறித்து சிறிதுநேரம் யோசித்த இவர், மன்னிப்பதுதான் சரியான முடிவு என்று நினைத்து, அவனை மனதார மன்னித்து அனுப்பினார்.

இதற்குப் பிறகு, இவர் சான் மினியாடோ என்ற ஆலயத்திற்குச் சென்று, அங்கு இவர் தான் அதுவரை செய்த குற்றங்களுக்காக மன்னிப்புக் கேட்டார். இறைவனும் இவரை மன்னிப்பது போல் இவருக்குத் தோன்ற, இவர் தூய ஆசிவாதப்பர் சபையில் சேர்ந்து அங்கே துறவியாக வாழத் தொடங்கினார். இவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையையும் இவருடைய ஜெப வாழ்க்கையும் பார்த்த சபையில் இருந்த முக்கியமான பொறுப்பாளர்கள், இவரை சபையின் தலைவராக உயர்த்தத் திட்டமிட்டார்கள். அதற்குள் இவர் அங்கிருந்து வெளியேறி, கால்நடையாகவே அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்.

ஒருகட்டத்தில் இவரோடு இருவர் சீடர்களாகச் சேர்ந்தார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பில் இவர் வல்லம்பரோசா என்ற இடத்தில் துறவுமடம் ஒன்றை நிறுவினார். அதில் தூய ஆசிர்வாதப்பர் சபையில் இருந்த ஒழுங்குமுறைகளையே நடைமுறைப்படுத்தினார். நாட்கள் செல்லச் செல்ல, இவருடைய சபையில் நிறையப்பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள்.

ஜான் கால்பர்ட் பக்தியில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாமல் ஏழைகளிடத்திலும் வறியவர்களிடத்திலும் மிகுந்த அன்புகொண்டு வாழ்ந்து வந்தார். ஒருசமயம் இவர் இருந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட மக்கள் உணவில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் இவர் மக்களுக்கு எப்படி உணவளிப்பது என்று யோசித்தார். உடனே இவர் பொருள் வைப்பு அறைக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு உருக்கமாகச் செபித்தார். இதனால் அந்த வைப்பு அறையில் இருந்த பொருட்கள் பல மடங்கு பெருகியது. அதனைக் கொண்டு இவர் பசியால் வாடிய மக்களுக்கு உணவினைப் பகிர்ந்து கொடுத்தார்.

இப்படி பக்தி நெறியிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்கிய ஜான் கால்பர்ட் 1073 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1193 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஜான் கால்பர்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மன்னிப்போம் மறப்போம்

தூய ஜான் கால்பர்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் தன்னுடைய எதிரியை மன்னித்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகின்றது. இவரைப் போன்று நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கின்றமோ, மன்னிப்பதோடு மட்டுமல்லாமல், அதனை மறக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனெனில், பல நேரங்களில் நாம் நமக்குத் தீங்கு செய்தோரை மன்னித்தாலும் மறப்பதில்லை.

ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் விஷவாயுச் சிறையில் இருந்தவர் கோரி பிரவுன். ஹிட்லர் யூதர்களை லட்சக்கணக்கில் சிறைப்படுத்திக் கொன்றபோது அவர்களுக்குத் தம் வீட்டில் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்ததற்காக இவரும் இவருடைய சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டு பயங்கரமாகச் சித்ரவதை செய்யப்பட்டனர். இதில் இவரது சகோதரி சிறையில் இறந்தே போனார்.

இது நடந்து ஒருசில ஆண்டுகள் கழித்து கோரி பிரவுன் விடுதலையாகி ஜெர்மானியரை மன்னிப்பது பற்றி பல ஊர்களுக்கும் சென்று உரை நிகழ்த்தி வந்தார். ஒருமுறை இவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் உரையாற்றி முடித்ததும் ஒருவர் இவருக்குக் கை குலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார். அவர் கோரி பிரவுன் சிறையில் இருந்தபோது சிறைக்காவலராக இருந்தவர். கை கொடுத்த கோரி அவரை இனம் கண்டு கொண்டபோது அவர் உடல் நடுங்கியது; வெறுப்பு உணர்ச்சி பொங்கியது. உடனே தனது கையை திருப்பி எடுக்க நினைத்தார். அப்போதுதான் அவர் உணர்ந்தார். மன்னிப்பு வழங்குவது பற்றி உரை நிகழ்த்தினாலும் மன்னிப்பது அவ்வளவு எளிதானது அல்ல அன்று.

ஆம், மன்னிப்பது சிரமம்தான். ஆனாலும் மன்னிப்பவரே இயேசுவைப் போன்று மாமனிதர் ஆகின்றார்.

ஆகவே, தூய ஜான் கால்பர்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மன்னித்து வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image