St. Christopher St. James The Greater

ஜூலை 25

திருத்தூதரான தூய யாக்கோபு (சந்தியாகப்பர்)

mary

திருத்தூதரான தூய யாக்கோபு (சந்தியாகப்பர்)

நிகழ்வு

‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்’ (மாற் 16:15) என்ற ஆண்டவரின் கட்டளையை ஏற்று யாக்கோபு ஸ்பெயின் நாட்டிற்கு, நற்செய்தி அறிவிக்கச் சென்றார். ஆனால் யாக்கோபுவால் அங்கே நல்லமுறையில் நற்செய்தி அறிவிக்க முடியவில்லை, போதுமான கல்வியறிவு இல்லாதது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அங்கு இருந்தவர்கள் அவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். இதனால் அவர் மிகவும் சோர்வுற்று எப்ரோ நதிக்கரையில் அமர்ந்திருந்தார். அப்போது மரியன்னை அவருக்குக் காட்சி கொடுத்து அவரைத் தேற்றினார். அதுமட்டுமல்லாமல் மரியன்னை அவருக்கு தன்னுடைய உருவம் பொறித்த மரத்தால் ஆன சுரூபத்தைக் கொடுத்து, இதை வைத்து இங்கே ஓர் ஆலயம் கட்டி எழுப்பு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் மறைந்து போனார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு யாக்கோபு மன உறுதிபெற்று துணிவோடு நற்செய்தி அறிவித்தார். அதோடு மரியன்னை தனக்குச் சொன்னதுபோன்று எப்ரோ நதிக்கரையில் அவருக்கு ஓர் ஆலயம் கட்டியெழுப்பினார். இவ்வாலயம் ‘Our Lady of Pillar’ என இன்றுவரை அழைக்கப்பட்டு வருகின்றது.

வாழ்க்கை வரலாறு

யாக்கோபு கலிலேயாவில் பிறந்தவர். இவருடைய தந்தை செபதேயு, தாய் சலோமி என்பவர் ஆவார். இந்த சலோமி என்பவர் இயேசுவின் தாய் மரியாவின் சகோதரி. ஆதலால், இயேசுவும் யாக்கோபுவும் நெருங்கிய உறவினர்.

ஒருசமயம் யாக்கோபும் அவருடைய சகோதரர் யோவான் மற்றும் அவருடைய தந்தை செபதேயும் அவருடைய பணியாளர்களும் கடலில் மீன்படித்துக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த இயேசு யாக்கோபிடமும் யோவானிடமும், “என் பின்னே வாருங்கள்” என்றார். உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள் இயேசு பணிவாழ்வில், அவரோடு நெருக்கமாக இருந்த சீடர்களில் யாக்கோபுவும் ஒருவர் என்பது நம்முடைய கவனத்தில் வைக்கக்கூடிய ஒன்று. யாக்கோபு இயேசுவோடு மிகவும் முக்கியமான தருணங்களில் உடனிருந்திருக்கிறார். தொழுகைக்கூடத் தலைவராகிய யாயிரின் மகளைக் குணப்படுத்தும்போது அவரோடு உடனிருந்திருக்கிறார் (மாற் 5: 37- 48), இயேசுவின் உருமாற்றத்தின்போதும் (மாற்கு 9: 28), கெத்சமணி தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்தபோதும் (மத் 26:32) யாக்கோபு அவரோடு உடனிருந்திருகிறார்.

யாக்கோபு அதிகமாக உணர்ச்சிவயப்படக்கூடியவராக இருந்தார். ஒருமுறை இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேம் நோக்கிச் செல்லும்போது புறவினத்தார் அதிகமாக வாழ்ந்த சமாரியா வழியாகச் செல்ல நேர்ந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களைப் போகவிடாமல் தடுத்தனர். இதனால் சினம்கொண்ட யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரனான யோவான், “ஆண்டவரே, வானத்திலிருது தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?” என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்கள் பக்கம் திரும்பி அவர்களைக் கடிந்துகொள்கிறார் (லூக் 9: 51- 56). இன்னொரு முறை யாக்கோபு தன்னுடைய தாய் மற்றும் சகோதரனோடு வந்து இயேசுவிடம், நீர் ஆட்சியுரிமையோடு வரும்போது உமது வலப்புறமும் இடப்புறமும் அமர்வதற்கான வாய்ப்புத் தாரும்” என்று கேட்கின்றார். அப்போது இயேசு அவரிடம், “நான் குடிக்கப் போகும் துன்பக் கிண்ணத்தில் உன்னால் (உங்களால்) குடிக்க இயலுமா? என்று கேட்டுவிட்டு தொடர்வார், “என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்று சொல்லி, அவர்களிடத்தில் தலைமைப் பொறுப்பு என்பது அதிகாரம் செலுத்த அல்ல, பணிவிடை செய்வதற்கு என்பதைக் தெளிவாக விளக்குகின்றார்.

இப்படி பலவீனங்களோடு இருந்த யாக்கோபைத் தான், இயேசு முதன்மைச் சீடர்களில் ஒருவராகத் தேர்ந்துகொள்கிறார். அவருக்கு சரியான பயற்சிகள் கொடுத்து, அவரை தன்னுடைய பணிக்காகத் தயாரிக்கின்றார்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, யாக்கோபு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று, அங்கே சிலகாலம் நற்செய்தி அறிவித்தார். பின்னர் அந்தப் பொறுப்பை தன்னுடைய சீடர்களிடம் கொடுத்துவிட்டு, யூதேயாவிற்குத் திரும்பி வந்தார். அப்போது யூதேயாவை ஏரோது அக்ரிப்பா என்பவன் ஆண்டு வந்தான். இவன் பெரிய ஏரோதுவின் பேரன். இவன் உரோமையர்களை மகிழ்ச்சிப்படுத்த யாக்கோபைப் பிடித்து சிறையில் அடைத்து, பின்னொரு நாளில் கொன்றுபோட்டான். இவர் கொல்லபப்ட்ட ஆண்டு கி.பி. 44 ஆகும். யாக்கோபுதான் மறைசாட்சியாக உயிர்நீத்த முதல் திருத்தூதர். யாக்கோபு கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு, அவருடைய சீடர்கள் வந்து, அவருடைய உடலை ஸ்பெயின் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். 814 ஆம் ஆண்டு இரிக் பிளேவியா நகரில் இருந்த தியோடோமிர் (Theodomir) என்ற ஆயரின் கனவில் யாக்கோபு தோன்றி, தன்னுடைய உடல் கம்போஸ்டெல்லா என்ற இடத்தில் இருக்கின்ற செய்தியை வெளிப்படுத்தினார். அதன்பிறகு அவருடைய உடல் இருந்த இடத்தில் பெரிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. அது இன்றைக்கு உலகின் மிக முக்கியமான மூன்று திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

போர்வீரர்கள் இவரிடத்தில் ஜெபித்தால், போரில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய யாக்கோபின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்

சவால்களைக் கடந்துவருதல்

தூய யாக்கோபு அதிகமாக சினம் கொள்ளக்கூடியவராக இருந்தார். அப்படிப்பட்ட மனிதர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு தன்னுடைய குறைபாடுகளை/ தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட சவால்களை கடந்துவெள்ளக்கூடிய மனிதராக விளங்கினார். ஸ்பெயின் நாட்டில் யாக்கோபு தொடக்கத்தில் நற்செய்தி அறிவித்தபோது அவருக்கு பல்வேறு விதமான சவால்கள் வந்தன. அவற்றையெல்லாம் அவர் இறைவனின் துணையால், தன்னுடைய விடாமுயற்சியால் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார்.

தூய யாக்கோபின் விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய வாழ்வில் வரும் சவால்களை அல்லது நம்மிடம் இருக்கும் குறைபாடுகளைக் கடந்து வெற்றிகொள்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கிறிஸ்டோபர் ரீவ் என்றொரு மேலை நாட்டுச் சிந்தனையாளர், உலகின் உன்னதமான வெற்றிகளை, சாகசங்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். “உங்கள் ஆராய்ச்சியில் யார் மிகச் சிறந்த வெற்றியாளர்?” என்று கேட்டபோது அவர் சொன்னார், “வாழ்வின் சவாலான நேரங்களில் மற்றவர்கள் அயர்ந்தும், அதிர்ந்தும் போகையில், அந்தச் சூழலைத் தாண்டி வருவதென்று தீர்மானித்து மேலும் முன்னே போகும் சாமானிய மனிதர்கள் எல்லாருமே சாதனையாளர்கள் அல்லது வெற்றியாளர்கள்தான்”. கிறிஸ்டோபர் ரீவ்வின் வார்த்தைகளை வைத்துப் பார்க்கும் யாக்கோபு தனக்கு வந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றிக்கொண்டதால் அவரும் சாதனையாளர்தான், வெற்றியாளர்தான். அவரைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் வரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும் போது சாதனையாளர்களே.

இயேசுவுக்காக துன்பங்களை ஏற்கத் துணிதல்

நற்செய்தியில் இயேசு யாக்கோபைப் பார்த்து, “நான் குடிக்கப்போகும் துன்பக்கிண்ணத்தில் (உன்னால்) உங்களால் குடிக்க இயலுமா?” எனக் கேட்பார் (மத் 20:22), அதற்கு யாக்கோபு ஆம் என பதிலளிப்பார். இயேசுவிடம் ஆம் என்று சொன்ன யாக்கோபு இதனை கி.பி. 43-44 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றி காட்டுகிறார். கிபி 43 ஆம் ஆண்டு யூதேயாவை ஆண்டுவந்த ஏரோது அக்ரிப்பா, உரோமை அரசாங்கத்தைக் மகிழ்ச்சிப்படுத்த அபியத்தார் என்ற தலைமைக்குரு வழியாக, யாக்கோபைக் கைது செய்யச் சொன்னான். அபியத்தார் என்ற அந்தத் தலைமைக் குரு, தன்னுடைய பணியாளராகிய ஜோசியா என்பவர் வழியாக யாக்கோபுவை அவருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்தான்.

அவர்கள் யாக்கோபை இழுத்துக்கொண்டு வரும் வழியில் முடக்குவாத முற்ற ஒருவர் இதைக் கேள்விப்பட்டு, “யாக்கோபே! என்மீது இரங்கும், என்னுடைய நோயைக் குணப்படுத்தும்” என்று கத்தினார். யாக்கோபுவும் அவர்மீது இரங்கி, “ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீ குணமாகு” என்று சொன்னார். உடனே அவர் எழுந்து நடக்கத் தொடங்கினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த யாக்கோபின் கழுத்தின் கயிற்றைக்கட்டி இழுத்துக்கொண்டு போன ஜோசியா ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தலைமைக் குரு அபியத்தார் ஜோசியாவிடம், “நீ கிறிஸ்துவைப் பின்பற்றுவதை விட்டுவிடவில்லை என்றால், நீயும் இந்த மனிதரோடு கொல்லப்படுவாய்” என்றார். அதற்கு ஜோசியா நான் எக்காரணத்தைக் கொண்டும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதை விட்டுவிடமாட்டேன்” என்றார். இறுதியில் யாக்கோப்போடு ஜோசியாவும் கொல்லப்பட்டார்கள், தங்களுடைய இறப்பின் வழியாக யாக்கோபு, இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

தூய யாக்கோபுவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் போன்று இயேசுவுக்காக நம்மைத் தர முன்வருகிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு கூறுவார், “தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் (யோவா 12:25), யாக்கோபு தன்னுடைய வாழ்வை தனக்காக அல்ல, இயேசுவுக்காக அர்ப்பணித்தார். அதனால் எல்லாவிதமான ஆசியையும் பெற்றார். நாமும் இயேசுவுக்காக நம் வாழ்வை அர்ப்பணிக்கும்போது எல்லா ஆசிரையும் பெறுவோம் என்பது உறுதி.

ஆகவே, திருத்தூதரான தூய யாக்கோபுவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image