St. Alphonsa St. Leopold

ஜுலை 28

தூய அல்போன்சா

mary

as

தூய அல்போன்சா (ஜூலை 28)

நிகழ்வு

அல்போன்சா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தபோது, அவரை அருகே இருந்து கவனித்துக்கொண்டவர் லூயிசா என்னும் சகோதரி. ஒருநாள் இரவு வேளையில் சபைத்தலைவி உர்சுலா என்பவர் இல்லத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் அல்போன்சாவின் அறையியிலுள்ள விளக்கு மட்டும் அணைக்கப்படாமல் எரிந்துகொண்டிருந்தது, அறையில் அவர் யாரோ ஒருவரோடு பேசுவது போன்று இருந்தது. இந்த இரவு வேளையில் அல்போன்சா யாரோடு பேசிக்கொண்டிருக்கிறார், ஒருவேளை அவருக்கு உதவிசெய்யச் சென்ற சகோதரி லூயிசாவோடு பேசிக்கொண்டிருக்கிறாரா? என்று அவருடைய அறையில் இருந்த ஜன்னல் வழியாக உற்றுப்பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை மெய்சிலிக்க வைத்தது. ஆம், அல்போன்சா அவருக்கு உதவி செய்யச் சென்ற லூயிசாவோடு பேசிக்கொண்டிருக்கவில்லை, அவர் தூங்கி வெகுநேரமாகிவிட்டதுபோலும். மாறாக அவர், தந்தை சவாரா குரியாகோசிடம் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த உர்சுலா சத்தம் ஏதும் எழுப்பாமல் தன்னுடைய அறைக்குத் திரும்பிவிட்டார்.

அடுத்த நாள் காலையில் சபைத்தலைவி உர்சுலா, அல்போன்சாவைப் போய் பார்த்தபோது, அவருடைய நோய் முற்றிலுமாக நீங்கியிருந்தது, குறிப்பாக சிறுவயதில் அவருடைய கால்களில் தீயினால் ஏற்பட்டிருந்த காயம் காணமால் போயிருந்தது. இதைக் கண்டு சகோதரி உர்சுலா கடவுளைப் போற்றிப் புகழத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

அல்போன்சா கேரளாவில் உள்ள குடமாளூர் என்னும் ஊரில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அன்னா என்பதாகும். ஆனால் ஊரில் இருந்தவர்கள் இவரைச் செல்லமாக ‘அன்னக்குட்டி’ என அழைத்தார்கள். அல்போன்சா சிறுவயதிலேயே தன்னுடைய தாயை இழந்தார். அதனால் இவர் தன்னுடைய அன்னையின் சகோதரியிடமே வளர்ந்து வந்தார். அவர் மிகவும் கண்டிப்பு உள்ளவராக இருந்தார். சில நேரம் அவர் அல்போன்சாவை அடித்து உதைப்பார். ஆனாலும் அவர் அல்போன்சாவைப் கோவிலுக்கு அனுப்பி வைக்கத் தவறியதில்லை. அல்போன்சாவுக்கு அவருடைய பாட்டி புனிதர்களைப் பற்றிய கதைகளை எடுத்துச் சொன்னார். இதனால் அவர் புனிதர்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு வளர்ந்தார். குறிப்பாக இவர் குழந்தைத் தெரசாவிடம் அளவு கடந்த பக்தி கொண்டு வளர்ந்தார்.

அல்போன்சாவிற்கு 13 வயது நடந்தபோது அவருடைய சிற்றன்னை அவரை ஒருவருக்கு மணமுடித்துக்கொடுக்க நினைத்தார். ஆனால் அல்போன்சாவிற்கு அது பிடிக்கவே இல்லை. அவர் ஒரு துறவியாக வாழவேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். தன்னுடைய விருப்பத்தை சிற்றன்னையிடம் அவர் எடுத்துச் சொன்னபோது, “அதுவெல்லாம் முடியாது நான் சொல்லும் ஆளை மணந்துகொள், இதைத் தவிர்த்து வேறு ஏதும் என்னிடத்தில் பேசாதே” என்று சொல்லி அவருடைய விரும்பத்திற்கு மறுப்புத் தெரிவித்தார். எப்படியாவது இதிலிருந்து தப்பிக்கவேண்டும் என சிந்தித்த அல்போன்சா, தன்னுடைய கால்களை தீயில் வைத்து சுட்டுக்கொள்ளலாம் என நினைத்தார். அதன்படி அவர் தன்னுடைய கால்களை தீம்பிழம்பில் வைத்தார். ஆனால் தவறுதலாக அவர் தீப்பிழம்புக்குள் விழுந்துவிட்டார். இதனால் அவருடைய கால்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு அவருடைய திருமண காரியங்கள் நின்றுபோயின. அல்போன்சா தன்னுடைய விருப்பப்படி 1927 ஆம் ஆண்டு பரனஞானத்தில் உள்ள தூய கிளாரா மடத்தில் கண்ணியராகச் சேர்ந்தார். 1928 ஆம் ஆண்டில்தான் அன்னக்குட்டி என்ற தன்னுடைய அல்போன்சா என மாற்றிக்கொண்டார்.

சபையில் சேர்ந்த பிறகு அல்போன்சா அதிக நேரங்களை ஜெபத்தில் செலவழித்தார். தூய குழந்தைத் தெரசாவின் மீது சிறுவயது முதலே அதிக பற்று கொண்டிருந்ததால் அவரைப் போன்று ஒரு புனிதையாக மாற நினைத்தார். இதற்கிடையில் அவருக்கு தலைவலி, வயிற்றுவலி என அடிக்கடி வந்தன. அவற்றையெல்லாம் அவர் பொறுமையோடு தாங்கிக்கொண்டார்.

இந்த நேரத்தில்தான் அவர் சங்கனாச்சேரிக்கு மாற்றலாகிப் போனார். அங்கே இவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். இவர் பாடங்களை நடத்திய விதம், மாணவர்களோடு அன்போடு பழகிய விதம் இவையெல்லாம் மாணவர்களிடத்தில் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. மாணவர்களும் இவரை முழுமையாக அன்பு செய்தார்கள். சிறுது காலம் அங்கு பணியாற்றிய அல்போன்சா அதன்பிறகு மீண்டுமாக பரனஞானத்திற்கே திரும்பி வந்தார். இப்போது அவரை கூடுதலாக உடல்நோய்கள் வாட்டின. ஆனாலும் அவர் துன்பங்கள் வழியாக இறைவன் தன்னை அன்பு செய்கிறார், துன்பங்கள் வழியாக இறைவன் தன்னுடைய பாடுகளில் பங்குபெறச் செய்கிறார் என்று அவர் தனக்கு வந்த துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள், சபையில் இருந்த சகோதரிகள் சிலர் “அல்போன்சா புனிதையை போன்று நடித்துக்கொண்டிருக்கிறாள்” என்று விமர்சித்தார்கள. இச்செய்தி சபைத்தலைவி உர்சுலாவின் காதுகளை எட்டியது. அவர் அல்போன்சாவிடம் இதுபற்றிச் சொல்லியபோது, “இயேசு தன்னை விமர்சித்தவர்களை மன்னித்து அன்பு செய்தார். அதுபோன்று நானும் என்னைப் பற்றி விமர்சிப்பவர்களை மன்னித்து அன்புசெய்கிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட சபைத்தலைவி அல்போன்சாவின் மீது இன்னும் அதிகமாக மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்.

அல்போன்சாவிற்கு எதிர்காலத்தில் நடப்பதை முன்னரே தெரிந்துகொள்ளும் திறனை கடவுள் கொடுத்திருந்தார். எதிர்காலத்தில் நடக்க இருந்த நிறைய காரியங்களை (தன்னுடைய சாவையும்தான்) முன்னரே தெரிந்துகொண்டார்.. இதனால் நிறைய மக்கள் அவரிடத்தில் வந்தார்கள். அவரிடம் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்படியாக கேட்டார்கள். அதுபோன்றே இவருடைய ஜெபத்தின் பயனாக அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறியது. இந்த சமயத்தில் அல்போன்சாவிற்கு நாளுக்கு நாள் அவருடைய உடலில் இருந்த வயிற்றுவலி (Ulcer) முற்றியது, அதோடு கூட அவருக்கு நிமோனியாக் காய்ச்சலும் வந்தது. இப்படி பலவாறு உடல் உபாதைகளைச் சந்தித்த, அல்போன்சா 1946 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வைத் துறந்தார். இவருடைய அடக்கத் திருப்பலில் பேசிய ரொமுல்ஸ் என்ற அருட்தந்தை, “அருட்சகோதரி அல்போன்சாவின் பொருட்டு ஒருநாள் இந்த பரனஞானத்திற்கு கர்தினால்களும் ஆயர்களும் ஏராளமான மக்களும் வருவார்கள்” என்றார். அவர் சொன்னது நிறைவேறியது. ஆம் இன்றைக்கு பரனஞானத்தில் உள்ள தூய அல்போன்சாவின் கல்லறைக்கு ஏராளமான மக்கள் போகிறார்கள். தாங்கள் கேட்ட வரங்களை அவர் வழியாக பெற்று வருகிறார்கள்.

அல்போன்சாவிற்கு 1986 ஆம் ஆண்டு, திருந்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் முத்திப்பேறு பட்டம் கொடுக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. தூய அல்போன்சா இந்திய நாட்டின் முதல் புனிதையாக உயர்ந்து விண்ணிலே நமக்காக பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இந்திய நாட்டின் முதல் புனிதையான தூய அல்போன்சாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

துன்பங்களை ஏற்றுக்கொள்ளல்

நற்செய்தியில் இயேசு கூறுவார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (மத் 16: 24). இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய அல்போன்சா தன்னுடைய வாழ்வில் நிறையத் துன்பங்களையும் சிலுவைகளையும் நோய்நொடிகளையும் சந்தித்தார். அவற்றையெல்லாம் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்; தனக்கு வந்த நோய்கள் வழியாக இயேசு தன்னை முழுமையாக அன்புசெய்கிறார் என நினைத்தார். அந்தத் துன்பங்கள், நோய்நொடிகள் வழியாகவே இறைவனை மேலும் மேலும் கண்டுகொண்டார்.

நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை நாம் எத்தகைய மனநிலையோடு ஏற்றுக்கொள்கிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பங்களைக் கண்டு, கடவுளைச் சபிக்கின்றோமா? அல்லது துன்பங்கள்தான் இன்பத்திற்கான நுழைவாயில் என்பதை உணர்ந்துகொள்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். ‘உளிதாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும், வலிதாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்” என்பார் கவிஞர் பா. விஜய். ஆகவே நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை நாம் பொறுமையோடு தாங்கிக்கொள்ளும்போது ஒருநாள் உயர்ந்த இடத்தை அடைவோம் என்பது உறுதி.

ஃபார்சூன் 500 நிறுவனங்களின் ஆலோசகராக இருந்தவர் டோனி வேய்ன்ரைட் என்பவர். ஒருமுறை செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி கொடுக்க அதிகாலை ஆறுமணிக்கு நேரம் தந்திருந்தார். பேட்டியும் நடந்தது. பேட்டிக்கு முதல் நாள், டோனியின் கால்மூட்டில் ஒரு தசை உள்ளே கிழிந்திருந்தது. வலது கண்ணில் இரத்த நாளமொன்று கசியத் தொடங்கியிருந்தது. அவர் அப்பாவுக்கு உடல்நிலை திடிரென்று மோசமானது. அப்படியிருந்தும் அவர் போட்டிகொடுத்தார். பேட்டியின் போது டோனி செய்தியாளரிடம் சொன்னார். “ஆறு வயதில் எனக்குத் தரப்பட்ட பாடம் வலி தாங்குதல். நான் எடுத்த முடிவுகளிலிருந்து வலியாலோ வருத்ததாலோ பின்வாங்குவதே இல்லை. இதுதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம்” என்று.

ஆம், நாம் வலிகளைத் தாங்கும்போது வாழ்க்கை வளமையாகும். ஆகவே, தூய அல்போன்சாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், நமது வாழ்வில் வரும் துன்பங்களைத் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image