St. Lazarus Of Bethany St. Lupus Of Troyes St. Olaf
St. William Of Saint-Brieuc St. Martha

ஜுலை 29

J}a

mary

தூய மார்த்தா (ஜூலை 29)

நிகழ்வு

கலாத்தியா என்ற பகுதியில் லேவியத்தான் என்ற உயிரினம் இருந்தது. அதன் பாதி உடல் விலங்கு போலவும், மீதி உடல் மீனைப் போன்றும் இருந்தது. ஒரு குதிரையையும் விடவும் அது பெரியதாக இருந்தது. இவ்வுயிரினம் அவ்வழியாகப் போவோர் வருவோர் எல்லாரையும் பிடித்து சாப்பிட்டு வந்தது. கடல்வழியாகப் போவோரையும் அது அவ்வாறே துன்புறுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள். எனவே அவர்கள் மார்த்தாவிடம் வந்து, தங்களை அந்தக் கொடிய மிருகத்திடமிருந்து காப்பாற்றுமாறு கெஞ்சிக் கேட்டார்கள். மார்த்தாவும் அவ்வுயிரினம் வாழ்ந்து வந்த டரஸ்கான் (Tarascon) பகுதிக்குச் சென்று, சிலுவையின் துணையுடன் அதனைக் கொன்று வீழ்த்தினார். அதனால் மக்கள் பெருமகிழ்ச்சி பேரானந்தம் அடைந்தார்கள்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக்கொண்டாடும் மார்த்தா பெத்தானியாவைச் சேர்ந்தவர். இவரோடு உடன் பிறந்தவர்கள்தான் இயேசு அதிகமாக அன்பு செய்த லாசர் (யோவா 11:5), மற்றும் மரியா. மார்த்தா எப்போதுமே கடின உழைப்பாளியாக, உதவும் நல்ல உள்ளத்தினராக விளங்கினார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. விவிலியத்தில் இவர் சில பகுதிகளில் இடம்பெற்றாலும், அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கும்போது மார்த்தா எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

விவிலியத்தில் மார்த்தா இடம்பெறும் முதல் பகுதி லூக்கா நற்செய்தி 10: 38-42. இங்கே அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்த இயேசுவுக்கு பணிவிடை செய்யவேண்டும், அவரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்பதற்காக பரபரப்பாக இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனக்கு உதவி செய்ய வராத தன்னுடைய சகோதரியான மரியாவின் மீது குறைபட்டுக் கொள்கிறார். இதைக் கண்ணுற்ற இயேசு மார்த்தாவிடம், “மார்த்தா, மார்த்தா!, நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே, மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்கிறார் (லூக் 10:41- 42). இங்கே மார்த்தா வீட்டில் மூத்தவள் என்பதாலும், தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் இயேசுவுக்கு சிறப்பானதொரு விருந்துகொடுக்கவேண்டும் என்ற ரீதியில் பரபரப்பாக அலைகின்றார்.

மார்த்தா இடம்பெறும் இரண்டாவது பகுதி யோவான் நற்செய்தி 11: 21 -27 ஆகும். இப்பகுதி மார்த்தா ஆண்டவர் இயேசுவிடத்தில் எத்தகைய நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. லாசர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வருகின்ற இயேசுவிடம் மார்த்தா, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்கிறார். இயேசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் கேட்கமுடியும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மார்த்தா கேட்டதற்கு இயேசு, “உயிர்த்தெழுதலும் வாழும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று சொல்லி மிகப்பெரிய மறை உண்மையை வெளிப்படுத்துகிறார். அப்போதுதான் மார்த்தா, “நீரே மெசியா! நீரே இறைமகன்!, நீரே உலகிற்கு வரவிருந்தவர்” என்று தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுக்கிறார். ஏறக்குறைய இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்து, அவரைப் பற்றி அறிந்துகொண்ட பேதுருவின் அறிக்கையை (மத் 16:16) ஒத்ததாக இருக்கின்றது மார்த்தாவின் அறிக்கை.

மார்த்தா இடம்பெறும் மூன்றாவது பகுதி யோவான் நற்செய்தி 12:2 ஆகும். இப்பகுதியில் மார்த்தா தன்னுடைய சகோதரன் இலாசரை உயிர்பித்த இயேசுவுக்கும் அவரோடு இருந்த அவருடைய சீடர்களுக்கும் விருந்து படைக்கின்றார். இயேசு இங்கே மார்த்தா தருகின்ற விருந்தை அன்போடு ஏற்றுக்கொள்கிறார், அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மார்த்தா எப்போதும் தன்னுடைய வீட்டை நாடிவோரை வல்லவராக, நல்லவராக விளங்கினார் என்பதைத்தான் இப்பகுதியானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

விவிலியம் மட்டுமல்லாது திருச்சபையின் மரபுகளும் மார்த்தாவைப் பற்றி ஒருசில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, சினம்கொண்ட யூதர்கள் லாசர், மார்த்தா மற்றும் அவருடைய சகோதரி மரியா ஆகிய மூவரையும் ஒரு படகில் கட்டி வைத்து, அதில் துடுப்பு எதுவும் வைக்காமல், கடலில் அனுப்பி விட்டனர். ஆனால் அவர்கள் மூவரும் இறைவனுடைய அருளால் உயிர்தப்பி, பிரான்சு நாட்டில் உள்ள மர்செல்லஸ் என்ற இடத்தில் தரையிறங்கினார். அங்கே லாசர் ஆயராகவும், அவருடைய சகோதரி மரியா ஒரு குகைக்குச் சென்று தனியாக இறைவனிடம் வேண்டி தன்னுடைய வாழ்நாளைக் கழித்ததாகும், மார்த்தா ட்ரஸ்கான் என்ற இடத்தில் பெண்களுக்கான் ஒரு துறவற சபையை நிறுவி, அங்கேயே தன்னுடைய இறுதி நாட்களைச் செலவிட்டதாகும் அறிந்துகொள்கிறோம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இறைவனுக்கு மட்டுமே முதலிடம்

மார்த்தா தன்னுடைய இல்லத்திற்கு வந்த இயேசுவுக்கு சிறப்பாக விருந்து உபசரிக்கவேண்டும் என்பதற்காக பரபரப்பாக அலைகின்றார். அதனால் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வாழ்வுதரும் வார்த்தைகளைக் கேட்க மறந்துவிடுகின்றார். இன்றைக்கு நாமும் கூட, மார்த்தாவைப் போன்று இறைவனுக்கு முக்கியத்துவம் தராமல், உலக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வாழ்ந்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு நம்மிடம் சொல்கிறார், “தேவையானது ஒன்றே, அதுதான் அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவது” (மத் 6:33).

நாம் இறைவனுக்கு நம்முடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் தந்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருத்தந்தை மூன்றாம் யூஜின் திருத்தந்தையாக இருந்தபோது, அவருக்கு ஆன்ம குருவாக இருந்தவர் பெர்னார்டு என்பவர். ஒருசமயம் திருத்தந்தை மூன்றாம் யூஜின் தன்னுடைய ஆன்ம குருவிடம், “திருச்சபையின் அன்றாட அலுவல்களுக்கு இடையே எனக்கு இறைவனிடம் ஜெபிப்பதற்கு நேரமே இல்லை” என்று அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கு அவர், “உமது ஞான வாழ்வுக்கு முதலிடம் கொடுத்து, ஜெபத்தில் முழுமையாக கருத்தூன்றி நிற்காவிடில், திருச்சபையில் உம் அலுவல்கள் எல்லாம் நீர் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் உம்மை நரகத்திற்கே இட்டுச் செல்லும். இது எச்சரிக்கை” என்றார்.

திருத்தந்தை அவர்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில் என்னுடைய அலுவல்களுக்கு மத்தியில் எனக்கு ஜெபிப்பதற்கு நேரமே இல்லை என சாக்குப்போக்குச் சொல்கிறோம். ஆனால் இறைவனோடு இணைந்திராத வாழக்கை அடித்தளமில்லாத வீட்டிற்குச் சமம் என நாம் புரிந்துகொண்ட வாழவேண்டும்.

இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்தல்

மார்த்தா ஆண்டவர் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இயேசுவை மெசியா, இறைமகன், உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் என்ற நம்பிக்கை அறிக்கை செய்கிறார், அதுமட்டுமல்லாமல் அவர் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்று சொல்லி, இயேசுவிடம் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மார்த்தாவைப் போன்று நாம் (இறைவனிடம்) அசைக்க நம்பிக்கையோடு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நம்புகிறவருக்கு எல்லாம் கூடும்” என்று (மாற் 9:23), ஆகவே, நாம் நம்பிக்கையோடு இருக்கும்போது எல்லாம் நலமாகும் என்பதே உண்மை.

ஒருசமயம் இளைஞன் ஒருவன் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் தீர்வதற்கு ஆலோசனை வேண்டி, பக்கத்து ஊரில் இருந்த மகானைச் சந்திக்கச் சென்றான். ஆனால் அவன் அங்கு சென்றபோது, அந்த மகானைச் சந்திப்பதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பதைக் கண்டு மலைத்துப் போய் நின்றான். ‘இத்தனை மக்களுக்கு மத்தியில் நான் எப்படி இந்த மகானைச் சந்திப்பது என்று ஏமாற்றத்தோடு நின்றான்.

அப்போது அந்த இளைஞனுக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர், “தம்பி! இன்று என்னால் இந்த மகானைச் சந்திக்க முடியும், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீ நம்பு. அது நடக்கும்” என்றார். பெரியவரின் வார்த்தைகளைக் கேட்டு அந்த இளைஞன் மகானை எப்படியாவது இன்றைக்கு சந்தித்துவிட முடியும் என நம்பத் தொடங்கினான். அவன் நம்பிய சில மணித்துளிகளிலேயே மகான் அந்த இளைஞன் தன்னிடம் வருமாறு அழைத்தார். அவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. “இத்தனை ஜனத்திரளுக்கு மத்தியில் அவர் எப்படி என்னை அழைத்தார்?” என்று வியப்பு மேலிட பெரியவரிடம் கேட்டான். அதற்கு அவர், “நீ அவரைச் சந்திக்க முடியாது என நினைத்தாய், அது போன்றே நடந்தது. பிறகு நீ அவரைச் சந்தித்துவிட முடியும் என நம்பத் தொடங்கினாய். நீ நம்பியது போலவே நடந்தேறியது” என்றார். ஆம். நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும். ஆகவே, நாமும் தூய மார்த்தாவைப் போன்று நம்பிக்கையோடு வாழ்வோம்.

விருந்தோம்பலில் சிறந்து விளங்குதல்

மார்த்தா எப்போதும் விருந்து உபசரிப்பில் சிறந்து விளங்கினாள். இயேசு தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோதெல்லாம் அவர் அவருக்கு சிறப்பாக உணவு வழங்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அதனால்தான் என்னவோ இன்றைக்கு நாம் அவருடைய விழாவைக் கொண்டாடுகின்றோம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்திற்கு வந்த மூன்று வானதூதர்களுக்கு சிறப்பான ஒரு விருந்து படைத்தார். அதனால் மகிழ்ந்த வானதூதர்கள் மூவரும் ஆபிரகாம் தம்பதியினருக்கு அவர்களுடைய முதிர்ந்த வயதில் குழந்தைப் பேற்றைத் தந்தார்கள். நாமும் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image