St. John Vianney

ஆகஸ்ட் 4

தூய ஜான் வியான்னி

mary

தூய ஜான் வியான்னி (ஆகஸ்ட் 04)

பங்குத் தந்தையரின் பாதுகாவலர்
ஒப்புறவு அருட்சாதனத்தின் வழிகாட்டி

நிகழ்வு

கல்வியில் மிகவும் பின்தங்கிய வியான்னி, அவருடைய ஆன்மீக குரு பெல்லி என்பரின் பரிந்துரையின் பெயரில் 1815 ஆம் ஆண்டு குருவாக மாறினார். ஆனால் அவர் குருவாக மாறிய பிறகும்கூட ஓராண்டு காலம் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. காரணம் அவர் அறநெறி இறையியலில் (Moral Theology) மிகவும் பின்தங்கி இருந்ததால் அவ்வாறு நடந்தது. ஓராண்டிற்குப் பிறகு அவருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டது. அவரிடத்தில் முதன்முறையாக ஒப்புரவு அருட்சாதனம் செய்தது அவருடைய ஆன்மீக குருதான். அவர் ஒப்புரவு அருட்சாதானத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு வியான்னியிடத்தில் சொன்ன வார்த்தை: “ஒரு காலத்தில் உன்னிடம் ஒப்புரவு அருட்சாதனம் செய்துகொள்ள ஆயர்கள், கர்தினால்கள் முதற்கொண்டு எல்லாரும் வருவார்கள்” என்பதாகும். ஆம், வியான்னியின் ஆன்மீக குரு சொன்னது நடந்தது. வியான்னி ஆர்ஸ் நகரில் பங்குத்தந்தையாக நாற்பத்தியோரு ஆண்டுகள் பணியாற்றியபோது அவரிடத்தில் பாவ சங்கீர்த்தனம் கேட்க எத்தனையோ பெரிய பெரிய மனிதர்கள் வந்தார்கள். அவரிடத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவோருக்காக சிறப்புப் பேருந்துகள், இரயில்கள் இயக்கப்பட்டன.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று என்ற இயேசுவின் வார்த்தைகள் ஜான் மரியா வியான்னியின் வாழ்க்கையோடு மிகவும் சரியாகப் பொருந்தியது.

வாழ்க்கை வரலாறு

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சியின் காரணமாக மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இறைப்பற்றாளர்களும் பயந்து பயந்து கடவுளை வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் ஜான் மரிய வியான்னி 1786 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள லயன்ஸ் என்னும் நகருக்கு அருகில் உள்ள டார்டில்லி (Dardilly) என்னும் சிற்றூரில் இருந்த ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மத்தேயு வியான்னி, தாய் மரிய பெலுஸ் என்பவர் ஆவார். வியான்னி குடும்பத்தில் நான்காவது குழந்தை. இவருடைய குடும்பத்தில் மொத்தம் ஏழுபேர். வியான்னி சிறுவயதில் ஆடுகளை மேய்த்து அதன்மூலம் குடும்பத்திற்குப் பேருதவியாக இருந்தார். அந்த காலகட்டத்தில் எல்லாம் அவர் மிகவும் பக்தியுள்ள சிறுவனாகவே வளர்ந்துவந்தார். அப்போது அவருக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் குருமடத்தில் சேர்ந்தார்.

குருமடத்தில் சேர்ந்த இவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்தக் காலத்தில் குருமடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்கள் அனைத்தும், இலத்தின் மொழியில் இருந்தன. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வியான்னியால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை, சரியாகப் படிக்கவும் முடியவில்லை. அவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை நியமித்து பாடங்களைச் சொல்லிக்கொடுத்தபோதும், அவரால் பாடங்களைப் படிக்கமுடியில்லை. இதனால் அவர் சரியான மக்கு, கழுதை என சொல்லப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அத்தகைய தருணங்களில் அவருடைய ஆன்மீக குருவான பெல்லிதான், “வியான்னி படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியவராக இருக்கலாம். ஆனால் அவர் ஆன்மீகத்தில், ஜெப வாழ்வில் மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர்” என்று சொல்லி, அவர் குருவாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்தார். இதனால் 1815 ஆம் ஆண்டு வியான்னி குருவாக மாறினார்.

குருவாக மாறிய பிறகு வியான்னி, அவருடைய ஆன்மீக குருவுக்குக் கீழ்தான் ஓராண்டு காலம் உதவியாளராக இருந்தார். அதன்பிறகு அவர் லயன்ஸ் நகரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலையில் உள்ள, 250 கிறிஸ்தவக் குடும்பங்களைக் கொண்டாட ஒரு சாதாரண குக்கிராமமாகிய ஆர்ஸ் என்னும் ஊரில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வியான்னி ஆர்ஸ் நகரின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டபோது, அப்போது முதன்மை குருவாக இருந்த சைமன் என்பவர் வியான்னியிடம், “ஆர்ஸ் நகர மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், நீங்கள்தான் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஊட்டவேண்டும்” என்று சொல்லி அனுப்பி வைத்தார். வியான்னியும் முதன்மை குருவின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு ஆர்ஸ் நகருக்குப் பயணமானார்.

ஆர்ஸ் நகருக்குச் சென்றபோது, அங்கே வயதான மூதாட்டிகள்தான் ஆலயத்திற்கு வந்தார்கள். மக்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். மக்களை இறைவனிடத்தில் அழைத்துவர வியான்னி, கடுமையாகப் போராடினார், அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று, அவர்களோடு பேசி அவர்களை இறைநம்பிக்கையில் வளர்த்தெடுத்து, அதன்மூலம் அவர்களை இறைவனிடத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.

வியான்னி ஆர்ஸ் நகருக்குச் சென்ற பத்து ஆண்டுகளில் மக்களுடைய ஆன்மீக வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்தது. நிறையப்பேர் ஆலயத்திற்கு வரத்தொடங்கினார்கள். அவரிடமிருந்து ஒப்புரவு அருட்சாதனம் பெற்றுக்கொண்டு அவர்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழத்தொடங்கினார். வியான்னி ஒவ்வொருநாளும் பதினான்கிலிருந்து பதினெட்டு மணி நேரம் ஆலயத்தில் செலவழித்தார், மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற்றுக்கொள்ள ஆயர்கள் முதற்கொண்டு பெரிய பெரிய மனிதர்கள் எல்லாரும் வந்தார்கள். இதனால் ஆர்ஸ் நகருக்கு சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

வியான்னி தன்னிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் மனங்களை ஊடுருவிப் பார்க்கும் திறனைப் பெற்றிருந்தார். ஒருசமயம் அவரிடத்தில் ஒப்புரவு அருட்சாதனம் பெறவந்த மனிதரிடத்தில், “நீ ஒப்புரவு அருட்சாதனம் செய்து முப்பது ஆண்டுகள் ஆயிற்று அல்லவா?” என்றார். இதைக் கேட்டு அவர் மலைத்துப் போய், “ஆம், நான் ஒப்புரவு அருட்சாதனம் செய்து முப்பது ஆண்டுகள் ஆயிற்று” என்றார். இப்படி தன்னிடம் வருகின்ற மக்களின் மனங்களை ஊடுருவிப் பார்க்கும் திறனை வியான்னி பெற்றிருந்ததால், அவரிடத்தில் யாரும் எதையும் மறைக்கவில்லை. இவர் ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், ஏழைக் குழந்தைகள் கல்வி பெற அவர்களுக்கென்று தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். அதன்வழியாக அவர்களுக்கு கல்வியறிவு புகட்டினார். இவரைப் பார்த்து, பிரான்ஸ் நாட்டில் ஏராளமான பேர் இப்படி கல்விநிறுவனங்களைத் தொடங்கினார்கள்.

வியான்னியின் புகழ் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே இருந்தது. இதைப் பார்த்து பொறாமைப் பட்ட ஒருசிலர் குருக்கள், இவரைக் குறித்து, முட்டாள், கழுதை, ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லி விமர்சித்தார்கள். இந்த விமர்சனம் ஆயருடைய காதுகளையும் எட்டியது. அப்போது ஆயர், வியான்னியை விமர்சித்த குருக்களிடம், “நீங்கள் முட்டாள் என்று விமர்சிக்கும் வியான்னியிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கின்றது” என்று பதிலடி கொடுத்தார். வியான்னி தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தூர வீசிவிட்டு, இறைப்பணியை தொடர்ந்து செய்துவந்தார்.

இப்படி ஓய்வே இல்லாமல் உழைத்த வியான்னி 1859 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1925 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டு, இவர் குருக்களின் பாதுகாவலராக உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

‘Cure Of Ars’ என அழைக்கப்படும் தூய ஜான் மரியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

வலுவின்மையில் வெளிப்படும் இறைவல்லமை

வியான்னி படிப்பில் பின்தங்கியவராக இருந்தாலும் ஆன்மீக வாழ்வில், ஜெப வாழ்வில் சிறந்தோங்கி விளங்கினார். அதனால்தான் இறைவன் அவர்மீது தன்னுடைய இறைவல்லமையைப் பொழிந்து வலுவற்ற அவரை வலுவுள்ளவராக மாற்றுகின்றார்.

தன்னுடைய கடைசிக் காலங்களில் வியான்னி சாத்தானால் அதிகமாக சோதிக்கப்பட்டார். சாத்தான் வந்து, அவருடைய அறைக்குள் புகுந்து மேசையை புரட்டிப் போடும், பொருட்களை தூக்கி எறியும். ஒருசமயம் சாத்தான் வந்து, இவரைத் துன்புறுத்தியபோது இவர், “அப்பாலே போ சாத்தானே” என்று அதனைப் பார்த்து கத்தினார். ஆனால் சாத்தானோ, அவர் இலத்தீனில் சொன்ன வார்த்தைகளில் இருந்த இலக்கணப் பிழையைக் சுட்டிக்காட்டி, அவரை ஏளனம் செய்துகொண்டே, அவருடைய அறையை விட்டு ஓடியது. அந்தளவுக்கு இவர் கல்வியறிவில் பின்தங்கியவராக இருந்தாலும் இறைவல்லமையால் நிறைந்திருந்தார் இறைவன் அவருடைய வலுவின்மையை தன்னுடைய வல்லமையால் சிறந்தோங்கச் செய்தார்.

தூய பவுல் கொரியந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில், தன்னுடைய உடலில் தைத்த முள்ளை நீக்குமாறு ஆண்டவரிடம் பலமுறை கேட்பார். ஆனால் ஆண்டவராகிய கடவுளோ அவரிடம், ‘என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்று தேற்றுவார் (2 கொரி12: 7-9). ஆம், நாம் யாரும் வலுகுறைந்தவர்கள் என நினைத்துக் கவலைப்படவேண்டாம். இறைவன் வலுவற்றவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றுவார். அதைதான் பவுலின் வாழ்க்கையிலிருந்தும், வியான்னியின் வாழ்க்கையிலிருந்தும், ஏன் மீட்பின் வரலாற்றில் வருகின்ற மோசே, தாவீது, பேதுரு போன்ற பலருடைய வாழ்க்கையிலிருந்தும் கண்டு கொள்கிறோம்.

ஆகவே, தூய ஜான் மரியா வியான்னியின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளை வாழ்வாக்குவோம். நாம் எளியவர், வறியவர், ஒடுக்கப்பட்டவர் என நினைத்து வருந்தாமல், இறைவன் நம்வழியாய் அற்புதங்களைச் செய்வார் என்பதை நம்புவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

========

இன்றைய சிந்தனை
-Fr. Yesu Karunanidhi
4 ஆகஸ்ட் 2022

புனித ஜான் மரிய வியான்னி

இன்று மறைமாவட்ட அருள்பணியாளர்களின், பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின், எல்லா அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஜான் மரிய வியான்னி - காண்பதற்கு ஈர்ப்பான உருவம் அவருக்கு இல்லை.

காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை.

அகுஸ்தினார், அக்வினாஸ் போல இறையியல் கருத்துருக்களை வழங்கவில்லை.

இஞ்ஞாசியார் போல பெரிய சபையை நிறுவி மறைப்பணி செய்யவில்லை.

சவேரியார் போல நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்து நற்செய்தி அறிவித்ததில்லை.

செபஸ்தியார், அருளானந்தர் போல மறைக்காக இரத்தம் சிந்தவில்லை.

இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால்தான், இன்று ஆங்கில அகராதியில், 'Vianney Syndrome' என்ற சொல்லாட்சியே உருவாகிவிட்டது. அதாவது, சாதாரண மனிதர் போல இருந்தாலும், அறிவுக்கூர்மை குறைவாக உள்ளவர்களின் அறிவுநிலையை அகராதி இப்படி அழைக்கிறது.

தன்னை மற்றவர்கள் கழுதை என அழைத்ததாகவும், 'ஆனால், இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்று அவர் தன் சக மாணவர்களிடம் சொன்னதாகவும், அவருடைய சமகாலத்து ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார்.

'இவருடன் அருள்பணிநிலைப் பயிற்சிக்கு ஒன்பது பேர் இணைந்தனர். அவர்களில் ஒருவர் கர்தினாலாகவும், இருவர் ஆயர்களாகவும், மூவர் பேராசிரியர்களாகவும், மூவர் முதன்மைக் குருக்களாகவும் மாறினர். இவர் ஒருவர் மட்டும் புனிதராக மாறினார்' என்றும் இவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு.

'எளிய வழியில் புனிதம்' என்றும், 'வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இவர்.

நீடித்து நிலைக்கக் கூடிய எதுவும் நீடித்த நேரம் எடுக்கிறது என்பது வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணிநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் (12 வயது) அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுகின்றார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்பு கேட்கின்றார். மத்தியாஸின் உள்ளம் தங்கம் போல உருகுகின்றது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொள்கின்றார். பிற்காலத்தில் டுபுக் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) மறைமாவட்டத்தின் ஆயரான மத்தியாஸ் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும், வியான்னியின் வார்த்தைகளில் இருந்த இயலாமையை நினைத்துப் பார்த்தார்.

தான் மற்றவர்களால், 'கழுதை' என அழைக்கப்பட்டாலும், 'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்பதில் உறுதியாய் இருந்தார் வியான்னி.

மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், 'கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!' என்று புரிந்தவர், வாழ்ந்தவர், புனிதராக உயர்ந்தவர்.

இவரிடம் நான் கற்கும் சில பாடங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

1. காதுகளை மூடிக்கொள்தல்

வண்டு கதை ஒன்று சொல்வார்கள். இயற்பியலில் காற்றியக்கவியலில் ஒரு கோட்பாடு உண்டு. இறக்கைகள் உந்தித் தள்ளும் காற்றின் நிறைக்குக் குறைவான நிறை கொண்ட எந்த உயிரினமும் பறக்க முடியாது. ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு வண்டு. ஏன் வண்டுகளால் பறக்க முடிகின்றன? அவற்றுக்கு இயற்பியல் தெரியாது அவ்வளவுதான். தன்னைப் பற்றிய எல்லா எதிர்மறையான செய்திகளுக்கும் காதுகளை மூடிக்கொண்டார். தன்னை அழைத்த இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவருக்குத் தன் இதயத்தைத் திறந்தார் வியான்னி. தன் செயல்களையும் தாண்டிய தன்மதிப்பை உணர்ந்தார்.

2. அருள்பணியாளர் அடையாளம் போதும்

'நான் ஓர் அருள்பணியாளர், அது போதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் வாழ்வின் இலக்கு, நோக்கம், செயல்பாடு என இருந்தது. இன்று அருள்பணியாளர்-ஆசிரியர், அருள்பணியாளர்-வழக்கறிஞர், அருள்பணியாளர்-சமூகக் காவலர், அருள்பணியாளர்-மருத்துவர், அருள்பணியாளர்-எழுத்தாளர் என நிறைய இரட்டை அடையாளங்களை நாம் தேடுகிறோம். அருள்பணியாளர் என்பதே ஓர் அடையாளம்தான். அந்த அடையாளத்தை முழுமையாக வாழ்ந்தால் - செபித்தால், திருப்பலி நிறைவேற்றினால், மக்களைச் சந்தித்தால், அவர்களின் குறைகளை நிறைவு செய்தால், தன் உடல்நலனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் - அதுவே போதும். தன் ஒற்றை அடையாளத்தை நிறைவாக ஏற்று, அதை முழுமையாக வாழ்ந்தார் வியான்னி.

3. சிறுநுகர் எண்ணம், சிறுநுகர் வாழ்வு

இவருடைய தாழ்ச்சி இவருடைய சிறுநுகர் எண்ணத்தில் வெளிப்பட்டது. இவருடைய எளிமை அவருடைய சிறுநுகர் வாழ்வில் வெளிப்பட்டது. நான் எளிமையை இப்படித்தான் பார்க்கிறேன். அதாவது, என் நுகர்தலைக் குறைத்தலே எளிமை. நுகர்தலை அதிகரிக்க, அதிகரிக்க,பொருள்களை அதிகரிக்க, அதிகரிக்க, நான் எனக்கும் கடவுளுக்கும், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறேன். என்னைப் பற்றியே நிறைய எண்ணிப் பார்க்கும்போது இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறேன். குறைவான எண்ணங்கள், குறைவான எதிர்பார்ப்புகள், குறைவான பொருள்கள், நிறைவான வாழ்வு எனத் தன்னையே கட்டமைத்துக் கொண்டார் வியான்னி.

4. தெளிவான மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு

வியான்னியின் மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு மூன்றே விடயங்களை மட்டுமே கொண்டிருந்தது: திருப்பலி நிறைவேற்றுதல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், மறைக்கல்வி கற்பித்தல். அவருடைய சமகாலத்தில் இதுதான் மக்களின் தேவையாக இருந்தது. தேவைகளை உணர்ந்து, தெளிவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார் வியான்னி. ஆனால், இன்று நம் பங்குகளில் நிறைய மேய்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன: திருப்பலி நிறைவேற்றுதல், மறைக்கல்வி எடுத்தல், அருள்சாதனங்களை வழங்குதல், இல்லங்கள் சந்திப்பு, இயக்கங்கள், பக்தசபைகள், குழுக்கள், சந்திப்புக்கள், திருப்பயணங்கள், சிறப்பு தியானங்கள், பக்தி முயற்சிகள், பிறரன்புச் செயல்கள். இன்று நிறைய தேவைகள் இருக்கின்றன. ஆனால், தெளிவுகள் இல்லை. ஒவ்வோர் அருள்பணியாளரும் இலக்குத் தெளிவுடன் இருக்க வேண்டும் என நம்மை அழைக்கின்றார்.

5. நிலைப்புத்தன்மை

தன் அருள்பணி வாழ்வு முழுவதுமே வியான்னி ஒரே ஒரு பணித்தளத்தில் - ஆர்ஸ் நகரில் - மட்டுமே பணியாற்றினார். தன் ஆர்ஸ் நகரம் தன்னை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதன் தட்பவெட்பநிலை தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், தன் சொந்த ஊரைவிட தான் தூரமாக இருந்தாலும், தன் மக்களுக்காக இறுதிவரை அதே இடத்தில் நிலைப்புத்தன்மை கொள்கிறார் வியான்னி.

6. மாற்றம் கண்முன்னே நடக்கும்

மது, கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற மூன்று பிறழ்வுகள் கோலோச்சிய இடத்தை, தன் செபத்தாலும், உடனிருப்பாலும், எளிய வாழ்வாலும் புரட்டிப் போட்டார் வியான்னி. யாருமே செல்ல அஞ்சிய ஓர் இடத்திற்கு, இரயில்களில் மக்கள் குவிந்தனர். தன் கண் முன்னே மாற்றத்தைக் கண்டார் வியான்னி. நம் கண்முன்னே மாற்றத்தைக் காண இயலாதபோதுதான் அருள்பணி வாழ்வில் சோர்வு வருகிறது. மாற்றம் நம் கண்முன்னே சாத்தியம் என உணர்த்துகிறார் வியான்னி.

7. இலக்குத் தெளிவு

தான் ஆர்ஸ் நகரத்தில் காண விரும்பிய மாற்றத்தைக் கனவு கண்டார். அந்த ஒற்றைக் கனவை தன் எல்லாமாக மாற்றினார். தன் இறைவேண்டல், திருப்பலி, வழிபாடு, வீடு சந்திப்பு, நோயுற்றோர் சந்திப்பு, பயணம் என அனைத்திலும் தன் மக்களை மட்டுமே நினைவில் கொண்டிருந்தார்.

8. வலுவற்ற அவர் வலுவற்றவர்களின் உணர்வை அறிந்தார்

தானே இயலாமையில் இருந்ததால் மற்றவர்களின் இயலாமையை அறிந்தார். மற்றவர்கள் வார்த்தைகளைக் கேட்டு பொருள் உணர்ந்த வேளையில், இவரோ மற்றவர்களின் ஆன்மாக்களின் மௌனம் கேட்டுப் பொருள் உணர்ந்தார். ஆன்மாக்களை ஊடுருவிப் பார்த்தன அவருடைய கண்கள். 'எனக்காக ஒருவர் இருக்கிறார்' என்று தன் மக்கள் உரிமை கொண்டாடும் அளவுக்கு அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்.

9. உடலில் தைத்த முள்

அவருடைய உடல்நலக் குறைவு உடலில் தைத்த முள்போல அவரை வாட்டியது. உணவுக்கும் ஊட்டத்துக்கும் உடல்நலத்துக்கும் உரிய நேரத்தை அவர் கொடுக்கவில்லை. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், அருகில் செல்லும் பயணத்திற்கும் அடுத்தவரின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், 'என் அருள் உனக்குப் போதும்' என்ற இறைவனின் உடனிருப்பை நிறையவே உணர்ந்தார்.

இம்மாபெரும் மனிதரை மறைமாவட்ட அருள்பணியாளர்களிய நாங்கள் பாதுகாவலராகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறோம்.

அருள்பணியாளர்களாகிய எங்களுக்கு இவர் ஒரு சவால்.

இவருடைய பரிந்து பேசுதல் எங்களுக்கு நம்பிக்கை தருவதாக!

இவருடைய வாழ்வு எங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக!

-அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்


 

image