St. Emygdius St. Oswald Our Lady of Snow

ஆகஸ்ட் 5

புனித மரியாவின் பேராலய அர்ச்சிப்பு விழா

mary

mary

புனித மரியாவின் பேராலய அர்ச்சிப்பு விழா (ஆகஸ்ட் 05) (Our Lady of Snow)

“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்” (லூக் 1: 47 -48)

வரலாற்றுப் பின்புலம்

உரோமை நகரில் ஐந்து பேராலயங்கள் இருக்கின்றன. லாத்தரன் பேராலயம், பேதுரு பேராலயம், பவுல் பேராலயம், தூய லாரன்ஸ் பேராலயம், பெரிய நாயகி பேராலயம் என்பவையே அந்த ஐந்து பேராலயங்கள் ஆகும். இதில் அன்னை மரியாவுக்கென்று நேர்ந்தளிக்கப்பட்ட பேராலயம்தான் பெரிய நாயகி பேராலயம். அதனைத் தான் இன்று நாம் நினைகூர்ந்து கொண்டாடுகின்றோம்.

பின்வருவது இதனுடைய வராலற்றுப் பின்புலமாகும். நான்காம் நூற்றாண்டின் மையப்பகுதியில் உரோமையில் யோவான் என்ற மரியாவின் பக்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு மரியாவின்மீது ஆழமான பக்தி இருந்தது. ஆனால், இவருக்கோ குழந்தை பாக்கியம் இல்லை. எனவே இவர் மரியாவிடம், “அன்னையே! நீர் மட்டும் எனக்கு ஒரு குழந்தையைத் தந்தால், நான் என்னுடைய உடைமைகளை எல்லாம் விற்று உமக்கு ஓர் ஆலயம் கட்டுவேன்” என்று வேண்டினார்.

அவர் இவ்வாறு இருக்கும்போது மரியன்னை அவருக்குக் கனவில் தோன்றி, “நீ நகருக்கு வெளியே உள்ள பணி உறைந்திருக்கும் எஸ்களின் மலையில் ஓர் ஆலயம் கட்டு, நான் உனக்கொரு குழந்தையைத் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். கனவில் மரியன்னை சொன்ன இந்த செய்தியைக் கேட்டு யோவான் மிகவும் சந்தோசப்பட்டார். பின்னர் அவர் நம்பிக்கை நிறைந்த உள்ளத்தினராய், அப்போது திருத்தந்தையாக இருந்த லிபேரியசிடம் சென்று, நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த திருத்தந்தை அவர்கள் உடனே ஆலயம் கட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு, விரைவில் அந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட உதவி செய்தார்.

திருத்தந்தை லிபெரியஸ், மரியன்னைக்காக ஆலயம் கட்டுவதற்கு உதவிகள் செய்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது என்னவென்றால், அவருடைய காலத்தில் நொஸ்டோரியஸ் என்ற ஆயர், இயேசு வெறும் மனிதர் மட்டுமே, அவருக்கு இறைத்தன்மை கிடையாது, ஆதலால், மரியா மனித இயேசுவுக்கு மட்டும்தான் தாய் என்று சொல்லிவந்தார். இந்த சமயத்தில்தான் மரியன்னையின் இக்காட்சி நிகழ்ந்தது. அதனால் அவர் மரியா இறைவனின் தாய் என முழுமையாக நம்பி, அவருக்கு ஆலயம் கட்டி எழுப்பப்பட எல்லா வகையிலும் உதவினார்.

மரியன்னை, கனவில் யோவானுக்கு வாக்குறுதி அளித்தது போன்று அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இது நடந்து ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு அதாவது 431 ஆம் ஆண்டு எபேசில் பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. அதில் மரியா இறைவனின் தாய் என பிரகடனம் செய்யப்பட்டது. இது நடந்து ஒருசில ஆண்டுகள் கழித்து திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் என்பவர் பெரிய நாயகியின் பேராலயத்தை புதுபிக்கத் தொடங்கினார். அவர் முன்னெடுத்த முயற்சியின் பலனாக அப்பேராலயம் காண்பவரை வியக்கும்படி செய்தது.

ஆண்டுகள் உருண்டோட ஆயிரக்கணக்கான மக்கள் அப்பேராலயத்திற்கு வருகை புரியத் தொடங்கினார்; அது மட்டுமல்லாமல் அங்கு சென்றோர் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொண்டார்கள். இதைப் பார்த்த திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1568 ஆம் ஆண்டு, பெரிய நாயகியின் பேராலயப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

பெரிய நாயகியின் பேராலய அர்ச்சிப்பு விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அன்னையிடம் ஆழமான பக்தி

இவ்விழா நமக்கு உணர்த்துகின்ற மேலான உண்மை, நாம் ஒவ்வொருவரும் ஆழமான பக்தியும் நம்பிக்கையும் கொண்டு வாழவேண்டும் என்பதுதான். யோவான் தனக்கொரு குழந்தை வேண்டும் என்று மரியன்னையிடம் ஆழமான நம்பிக்கையோடும் பக்தியோடும் மன்றாடினார். அதனால் அவருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைத்தது. நாமும் அத்தகைய நம்பிக்கையும் பக்தியும் கொண்டு வாழ்கின்றபோது அவர் நமக்கு ஏராளமான ஆசிர்வாதங்களை தன் திருமைந்தன் வழியாகப் பெற்றுத் தருவார் என்பது உறுதி. ஏனென்றால், “அன்னையின் பிள்ளை அவலமாய் சாவதில்லை”..

அகவே, நாம் மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image