Tranfiguration of Jesus St. Hormisdas

ஆகஸ்டு 6

இயேசுவின் உருமாற்றம்

mary

இயேசுவின் உருமாற்றம்

நிகழ்வு

1456 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையே பெல்கிரேட் என்னும் இடத்தில் கடுமையான போர் மூண்டது. இந்தப் போரில் ஹுன்யாடி ஜோன்ஸ் என்பவர் கிறிஸ்தவர்களின் சார்பாக நின்று போர்தொடுத்தார். போரின் முடிவில் கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வெற்றிகொண்டார்கள். அவர்கள் இத்தகையதொரு வெற்றியை இறைவனின் துணையால்தான் பெற்றார்கள் என்பதை நன்கு உணர்ந்தார். இதை அறிந்த அப்போதைய திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துஸ் என்பவர் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவை கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வெற்றிகொண்ட அந்த ஆகஸ்ட் 6 ஆம் நாளில் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா ஆகஸ்ட் 06 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நிகழ்வை – விழாவைக் - குறித்துச் சொல்கின்றபோது திருத்தந்தை பெரிய கிரகோரியார், “இயேசு சொன்ன ‘மானிட மகன் எருசலேமிற்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்’ என்று வார்த்தைகளால் சீடர்கள் குழம்பிப் போய் இருந்தார்கள். எனவே, அப்படிப்பட்ட சீடர்களுக்கு தன்னுடைய விண்ணக மகிமையைக் காண்பிப்பதற்காகவும், தாம் அடைய இருக்கும் பாடுகளின் உட்பொருளை உணர்த்தவுமே இயேசு இந்த உருமாற்ற நிகழ்வை நிகழ்த்திக் காட்டினார்” என்று சொல்வார். ஆம், இது முற்றிலும் உண்மை. ஏனென்றால் உலகை மீட்க வந்த மெசியா துன்புறவேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. எனவேதான், இயேசு தன்னுடைய உருமாற்ற நிகழ்வின் வழியாக எருசலேமில் தான் அடைய இருக்கும் பாடுகளின் உட்பொருளை அவர்களுக்கு தெளிவாக விளக்குகின்றார்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மோசேயும் எலியாவும் தோன்றியதன் அர்த்தம் என்ன என்பதும் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. அதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய காரணங்களில் முதலாவது, இயேசு வாழ்ந்த காலத்தில் அவரை சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் எனவும் நினைத்தார்கள் (மத் 16:14). இத்தகைய குழப்பங்களைத் தெளிவுபடுத்தவும், இயேசு, தான் ஓர் இறைவாக்கினர் மட்டுமல்ல, இறைவாக்கினர்களுக்கு எல்லாம் மேலான இறைவன் என்பது இந்த நிகழ்வின் வழியாகத் தெளிவாகின்றது. இரண்டாவது, இயேசுவின் மீது எப்போதும் ‘மூதாதையர்களின் சட்டங்களை மீறுகின்றார்’ என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த உருமாற்ற நிகழ்வில் திருச்சட்டத்தை வழங்கிய மோசேயும் பெரிய இறைவாக்கினராகிய எலியாவும் வருவதால், இயேசு திருச்சட்டத்தையும், இறைவாக்கினையும் அழிக்க அல்ல, மாறாக அதனை நிறைவேற்ற வந்திருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தபடுகின்றது (மத் 5:17)

மூன்றாவது விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மோசேயும் எலியாவும் மீண்டுமாக மண்ணகத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வாழ்வுகொடுக்கின்ற ஆற்றல் இயேசுவுக்கு உண்டு என்ற செய்தியும் வலியுறுத்தப்படுகின்றது. நான்காவதாக மோசேயும் எலியாவும் தோன்றியது, எருசலேமில் நிகழ இருக்கும் இயேசுவின் பாடுகளைக் குறித்து பேசுவதற்கே என்றும் சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்வின் வழியாக குழப்பத்தில், அவ நம்பிக்கையில் இருந்த சீடர்கள் இயேசுவின் பாடுகளைக் குறித்த தெளிவைப் பெறுகிறார்கள், அவர்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மூவொரு கடவுளின் பிரசன்னமும் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். எப்படி என்றால், இயேசுவும் மோசேயும் எலியாவும் தொடர்ந்து பேசிகொண்டிருக்கும்போது, ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிடுகிறது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவி சாயுங்கள்” என்ற குரல் ஒலிக்கிறது (மத் 17:5). மேகம் என்பது பழைய ஏற்பாட்டில் கடவுளின் பிரசன்னத்தை உணர்த்தக்கூடியதாக இருக்கின்றது (விப 19:9). ஆகவே, இயேசுவின் உருமாற்றத்தின் மூலமாக இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்ல, இறைவனின் திருமைந்தன், அவருடைய விண்ணக மகிமையின் ஒரு பகுதிதான் இந்த உருமாற்றம் போன்ற செய்திகள் வலியுறுத்தப்படுகின்றது.

இவ்விழா ஏழாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. 1456 ஆம் ஆண்டுதான் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துஸ் என்பவர் இவ்விழாவை ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்று வரை இவ்விழா அந்நாளிலேயே கொண்டாடப்பட்டு வருகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், இவ்விழா நமக்கு உணர்ந்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசுவுக்கு – இறைவனுக்கு – செவிசாய்த்தல்

இயேசுவின் உருமாற்றத்தின் போது ஒளிமயமான மேகத்திலிருந்து ஒலித்த குரல், “இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்” என்றது. அப்படியானால் நாம் இயேசுவுக்கு செவிகொடுத்து வாழவேண்டும். அப்படி நாம் வாழ்கின்றபோது இறைவன் நம் பொருட்டு பூரிப்படைவார். அது மட்டுமல்லமால், நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. நற்செய்தியில் பேதுரு ஆண்டவர் இயேசுவிடம், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடதானே உள்ளன” (யோவா 6: 68) என்று கூறுவார். ஆம், இயேசுவின் வார்த்தைகள் வாழ்வுதரக் கூடிய வார்த்தைகள். அவருடைய வார்த்தைக்கு நாம் செவிமடுத்து வாழும்போது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நாம் இயேசுவின் குரலுக்கு செவிமடுத்து வாழ்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் யாராருக்கெல்லாமோ செவிகொடுக்கின்றோம். இயேசுவுக்கு செவிகொடுப்பதில்லை. அதனாலேயே நாம் நிலைவாழ்வைப் பெற தகுதியற்றுப் போய்விடுகின்றோம். ஆகவே நாம் இயேசுவுக்கு செவிகொடுத்து வாழும் மக்களாவோம்.

இன்பமான வாழ்வுக்கு, துன்பங்களை ஏற்கத் துணிய வேண்டும்

இவ்விழா நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான செய்தி துன்பங்களை ஏற்றுக்கொள்வதாகும். இயேசு கிறிஸ்து மானுட மீட்புக்காக பாடுகளை, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார்; துன்பத்தின் வழியே இன்பமான வாழ்க்கையை அடைய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால் இதைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் குறிப்பாக பேதுரு இயேசுவிடம், ஆண்டவரே உமக்கு இந்த துன்பம் வேண்டாம் என்று தடுக்கப் பார்க்கின்றார். அதனால்தான் இயேசு அவரைக் கடிந்துகொள்கிறார். நாம் துன்பங்களை மன உறுதியோடு ஏற்கின்றபோது மகிழ்வான வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.

ஒருமுறை கோவில் சிலையும் வாயிற்படியும் பேசிக்கொண்டன. வாயிற்படி வருத்தமாய் சொன்னது: “இருவரும் ஒரே மலையில்தான் பாறையாய்க் கிடந்தோம். ஒரே கோவிலில் நீ சிலையானாய். நான் படியானேன். வருபவர்கள் என்னை மிதிக்கிறார்கள். உன்னைத் துதிக்கிறார்கள். இது என்ன நியாயம்?”. அதற்கு சிலை சொன்னது, “உன்னையும் என்னையும் ஒரே உளிதான் பரிசோதித்தது. நான் என் மேல் விழுந்த அடிகளை ஏற்றேன். நீ அதற்கு எதிர்ப்பு காட்டினாய். அடிகள் நம்மை அழிப்பதற்கல்ல, செதுக்குவதற்கு. இதைப் படியாததால் நீ படியாகவே இருக்கின்றாய்” என்று கூறியது.

ஆம், நாம் வலிகளைத், துன்பங்களைத் தாங்கிக்கொண்டு வாழும்போது அதனால் உயர்வடைவோம் என்பது உண்மை. எனவே, இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவில், அவருக்கு செவிமடுத்து வாழ, துன்பங்களைத் துணிவோடு ஏற்றுக்கொள்ள தீர்மானம் எடுப்போம். அதன்படி வாழ முயல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

 

image