St. Claudia St. Cajetan

St. Sixtus2

ஆகஸ்டு 7

J}a

mary

தூய இரண்டாம் சிக்ஸ்துஸ் (ஆகஸ்ட் 07)

“அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளத்தை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்க்காகச் சிந்தப்படும் இரத்தம்” என்றார் (மத் 26: 26 -28)

வாழ்க்கை வரலாறு

சிக்ஸ்துஸ் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர். இவர் எந்த ஆண்டில் பிறந்தார் என்பது பற்றிய சரியான குறிப்புகள் இல்லை. இவர் வளர்ந்தது படித்தது எல்லாம் உரோமையில்தான்.

குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், 257 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 30 நாள் திருத்தந்தையாக உயர்ந்தார். இவருடைய காலத்தில் திருமுழுக்கு தொடர்பாகக் குழப்பங்கள் நிலவின. அத்தகைய குழப்பங்களை இவர் தன்னுடைய சாதுயர்மான பேச்சினால் தீர்த்துவைத்தார். அது போன்று சிறிய ஆசியா, ஆப்ரிக்கா போன்ற இடங்களில் அமைதி ஏற்பட பெரும் பங்காற்றினார்.

சிக்ஸ்துஸ் திருத்தந்தையாக இருந்த சமயத்தில் உரோமையை வலேரியான் என்பவன் ஆண்டுவந்தான். தொடக்கத்தில் அவன் கிறிஸ்தவர்களோடு இணக்கமாகத்தான் இருந்தான். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல மக்ரியன் என்பவன் அவனுடைய மனதை மாற்றினான். ஆம், மக்ரியான் வலேரியானிடம், கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடிவந்து வழிபாடு செய்கின்றார்கள் என்றும், அவர்கள் உரோமைக் கடவுளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றும் பற்றி வைத்தான். இதனால் சினங்கொண்ட வலேரியான், கிறிஸ்தவர்கள் உரோமைக் கடவுளுக்கு பலி செலுத்தவேண்டும் என்றும் அப்படி பலி செலுத்தாவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அரசாணை பிறப்பித்தான்.

அரசாணை ஒரு பக்கம் இருந்தாலும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஒன்றுகூடி வந்து, இறைவழிபாடு செய்து வந்தார்கள். 258 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 6 ஆம் நாள், திருத்தந்தை சிக்ஸ்துஸ் ஒருசிலரோடு சேர்ந்து, தூய கலிஸ்துசின் கல்லறைக் கோவிலில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த தருணத்தில் படைவீரர்களோடு அங்கு வந்த வலேரியான், திருத்தந்தை அவர்களையும் அவரோடு இருந்தவர்களையும் படுகொலை செய்தான். இவ்வாறு திருத்தந்தை சிக்ஸ்துஸ் அவர்கள் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி, தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இரண்டாம் சிக்ஸ்துசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்கருணை ஆண்டவரிடத்தில் பக்தி

தூய இரண்டாம் சிக்ஸ்துஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் நற்கருணை பலியை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார் என்பதை அறிகின்றோம்.

இன்றைக்கு வேண்டுமானால், திருப்பலி நிறைவேற்றுவதற்கோ அல்லது திருப்பலியில் கலந்துகொள்வதற்கோ அவ்வளவு எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அன்றைய காலத்தில் அப்படியில்லை. அது சவால் நிறைந்த காரியமாவே இருந்திருக்கின்றது. அப்படியிருந்தபோதும் தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் நற்கருணைக் கொண்டாடங்களில் கலந்துகொண்டார்கள். காரணம் அவர்கள் நற்கருணையை தங்களுடைய வாழ்வின் ஊற்றும் உச்சமும் எல்லாமுமாக நினைத்தார்கள். இன்று நாம் நற்கருணைக்கு அத்தகைய முக்கியத்துவத்தைத் தருகின்றோமா? அல்லது அதில் முழுமையான ஈடுபாட்டோடு கலந்துகொள்கின்றோமா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு நம்மால் நற்கருணை விருந்தை எளிதாக நிறைவேற்ற முடிவதாலும், அதில் எளிதாகக் கலந்துகொள்ள முடிவதாலும் என்னமோ அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டோம் என எண்ணத் தோன்றுகின்றது. நற்கருணை என்பது சாதாரண அப்பத்துண்டு அல்ல, அது ஆண்டவர் இயேசு மெய்யாகவே குடிகொண்டிருக்கின்ற ஓர் உணவு. அந்த உணவை நாம் நம்பிக்கையோடு உட்கொள்கின்றபோது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

இந்த இடத்தில் இன்னொரு செய்தியை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில் பக்தியோடு நற்கருணை விருந்தில் கலந்துகொள்கின்ற நாம், அந்த நற்கருணை நமக்குச் சுட்டிக்காட்டுகின்ற பகிர்வு, தியாகம், உண்மையான அன்பு போன்ற பண்புகளையும் நமது வாழ்வில் கடைபிடிக்க முயற்சிக்கவேண்டும். பலர் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையோ அதற்கு முரணானதாக இருக்கும். நம்முடைய வழிபாடு வாழ்க்கையோடு பின்னிப் பிணைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவின் வழி நடப்பவர்கள் என அழைக்கப்பட தகுதியுள்ளவர்களாக முடியும்.

ஆகவே, தூய இரண்டாம் சிக்ஸ்துஸின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவழியில் நடப்போம். நற்கருணை ஆண்டவருக்கு நமது வாழ்வில் உரிய முக்கியத்துவம் தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image