St. Cyriacus St. Dominic

ஆகஸ்டு 8

டொமினிக் (சுவாமிநாதர்)

mary

டொமினிக் (சுவாமிநாதர்)

நிகழ்வு

டொமினிக் வாழ்ந்த காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த பஞ்சத்தினால் ஏராளமான மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். இதைப் பார்த்த டொமினிக் தன்னிடம் இருந்த எல்லா செல்வத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தான் படிப்பதற்காக வைத்திருந்த புத்தகங்களையும் கூட விற்று, அதிலிருந்து வந்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். டொமினிக்கின் இச்செயல், அவர் வாழ்ந்த நகரில் இருந்த ஏராளமான பணக்காரர்களின் மனசாட்சியை உலுக்கியது. எனவே, அவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை ஏழை மக்களுக்குக் கொடுத்து, அதன்மூலம் பஞ்சத்தைப் போக்குவதற்கு ஓரளவு பாடுபட்டார்கள்.

வாழ்க்கை வரலாறு

டொமினிக் 1170 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள காஸ்டல் (Castle) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை கோஸ்மான் பெலிஸ், தாய் ஜானே ஆசா என்பவர் ஆவார். இவருடைய குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். டொமினிக் பிறப்பதற்கு முன்பாக அதாவது, அவர் தன்னுடைய தாயின் கருவறையில் இருக்கும்போது, தாய் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில், ஒரு நாயானது தன்னுடைய வாயில் விளக்கு ஒன்றை கவ்விக்கொண்டு, தான் போகும் இடமெல்லாம் ஒளியேற்றிக்கொண்டே போனது. இந்தக் கனவின் மூலமாக, தன்னுடைய வயிற்றிலிருந்து பிறக்கும் குழந்தை உலகிற்கு ஒளியாய் விளங்கும் என அவர் புரிந்துகொண்டார். டொமினிக்கிற்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டபோதும் அவருடைய பாட்டி, அவரது நெற்றியில் விண்மீன் ஒன்று இருப்பதைக் கண்டார். இதன்மூலம் டொமினிக் ஒரு சாதாரண குழந்தை அல்ல, அவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

டொமினிக் அகுஸ்தினார் சபையில் சேர்ந்து குருத்துவப் படிப்பிற்காக தன்னையே தயாரித்து, 1203 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1205 ஆம் ஆண்டு, அவர் ஓஸ்மா நகரில் இருந்த ஆயர் தியோகோ தி அனசெடோ என்பவரோடு சேர்ந்து, பிரான்சு நாட்டிற்குப் பயணப்பட்டார். அப்போது அவர் வழியில் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஏனென்றால், அங்கிருந்த மக்கள் அல்பிஜீயன்ஸ் என்னும் தப்பறைக் கொள்கையால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தார்கள். “உலகில் உள்ள நன்மைக்கு ஒரு காரணகர்த்தா உண்டு. ஜடப்பொருள் அனைத்தும் தீயது” என்பது அவர்களின் வாதமாக இருந்தது. இந்த வாதத்தின் அடிப்படையில் கிறிஸ்துவின் மனித அவதாரத்தையும் அருட்சாதனங்களையும் அவர்கள் மறுத்தார்கள். மனித இன உற்பத்தியையும் அவர்கள் கூடாதென வாதாடினார்கள். இப்படிப்பட்ட ஒரு தப்பறைக் கொள்கையை எதிர்க்க டொமினிக் கடுமையாக உழைத்தார். இதற்காக ஒரு சபையை நிறுவ திருத்தந்தை அவர்களைச் சந்திக்கச் சென்றார்.

இவர் திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டை சந்தித்து, தப்பறைக் கொள்கைகளை எதிர்க்கவும் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கவும் ஒரு சபையை நிறுவவேண்டும் என்ற தன்னுடைய கருத்தைச் சொன்னபோது அவர், “ஏற்கனவே திருச்சபையில் நிறைய சபைகள் இருக்கின்றன. இதில் புதிய ஒரு சபையா?” என்று சொல்லி டொமினிக்கின் வேண்டுகோளை மறுத்துவிட்டார். அன்று இரவு அவர் தூங்கும்போது ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் திருச்சபை முழுவதும் அழிந்துபோவதாகும், அதனை டொமினிக் வந்து காப்பாற்றுவதாகும் கனவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டார். அடுத்தநாளே அவர் டொமினிக்கை அழைத்து, புதிய சபையை நிறுவுவதற்கு முழு சம்மதம் தெரிவித்தார். அப்படித் தோன்றியதுதான் OP எனப்படும் போதகர் சபையாகும். இச்சபையானது 1216 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் திருத்தந்தை அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு டொமினிக் தன்னோடு ஆறு சகோதரர்களை சேர்த்துக்கொண்டு, அல்பிஜியன்ஸ் எனப்படும் தப்பறைக் கொள்கையை முழுமூச்சோடு எதிர்த்தார். அது மட்டுமல்லாமல், இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்தார்.

டொமினிக் அன்னை மரியாவின் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். இன்றைக்கு நாம் சொல்லக்கூடிய ஜெபமாலை பக்திக்கு அவர்தான் தொடக்கமாக இருந்தார். ஜெபமாலையில் சொல்லப்படக்கூடிய ‘மங்கள் வார்த்தை’ ஜெபத்தின் வழியாக மரியா மீட்புத் திட்டத்தில் எப்படி பங்கேற்றாள் என சிந்திக்க அழைத்தார். அது மட்டுமல்லாமல், மரியாவோடு இயேசுவைப் பற்றியும் தியானிக்கவேண்டும் என்பதற்காக ‘கர்த்தர் கற்பித்த ஜெபத்தையும்’ அதன் உள்ளே இணைத்தார். இவ்வாறு அவர் ஜெபமாலை பக்தி எங்கும் பரவவும், அதன்வழியாக தப்பறைக் கொள்கைகள் ஒழிக்கப்படவும் கடுமையாகப் பாடுபட்டார்.

டொமினிக் தாழ்ச்சிக்கும் ஏழ்மைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார். அதனை தன்னுடைய சபையைச் சேர்ந்தவர்களும் கடைப்பிடித்து வாழவேண்டும் என கற்பித்தார். இவரும் பிரான்சிஸ் அசிசியாரும் சமகாலத்தவர். இப்படி இறைவனின் கரங்களில் சிறந்ததோர் கருவியாக செயல்பட்ட டொமினிக் 1221 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்தபோது இவருடைய சபை பல்வேறு நாடுகளில் பரவியிருந்தது. 50,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர் 1234 ஆம் ஆண்டு புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய டொமினிக்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அன்னை மரியாவிடம் பக்தி

தூய டொமினிக் அன்னை மரியாவிடம் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தன்னுடைய வாழ்வின் இக்கட்டான நேரங்கில் மட்டுமல்ல, எல்லா நேரங்களில் அன்னையிடம் ஜெபித்தார். அதன்வழியாக எதிர்வந்த சவால்கள் அனைத்தையும் துணிவோடு வெற்றிகொண்டார். ஜெபமாலை ஜெபிக்கும் பக்தி முயற்சியே இவரால்தான் தொடங்கப்பட்டது என்றால், இவர் அன்னையிடம் எந்தளவுக்கு பக்திகொண்டு வாழ்ந்திருப்பார் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

டொமினிக்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் மரியன்னையிடம் பக்திகொண்டு வாழ்கிறோமா?, அதிலும் குறிப்பாக ஜெபமாலை பக்தியில் வளர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், “ஜெபமாலை சொல்லக்கூடிய குடும்பம் அழகான குடும்பம்” என்பார். அதே போன்ற ஒன்பதாம் பத்திநாதர், “ஜெபமாலை சொல்லக்கூடிய படையை மட்டும் எனக்குத் தாருங்கள், நான் இந்த உலகையே மாற்றிக் காட்டுவேன்” என்று கூறுவார். இவர்களது வார்த்தைகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஜெபமாலை எவ்வளவு சக்தி வாய்ந்த கருவி என நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆகவே, நம்முடைய தனிப்பட்ட ஜெபத்தில், குடும்ப ஜெபத்தில் ஜெபமாலை சொல்வதற்கு முயற்சி எடுப்போம். அதன்மூலம் அன்னையின் அருள் பெறுவோம்.

ஏழைகளிடம் அன்பு

தூய டொமினிக் ஏழைகள், எளியவர்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அவர்களுக்காக தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்தார். டொமினிக்கைப் போன்று நாம் ஏழைகள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் இயேசு தன்னைப் பின்பற்ற நினைத்த செல்வரான இளைஞரிடம் கூறுவார், “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடமைகளை விற்று எழைகளுகுக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” (மத் 19: 21). நாம் இயேசு சொல்வதைப் போன்று உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டாம், மாறாக அவர்களுக்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கலாம். அவர்கள்மீது உண்மையான அக்கறை கொண்டு வாழலாம். அதுவே உண்மையான சீடத்துவ வாழ்வாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

வீதியில் ஒரு சின்னஞ்சிறுமி உணவில்லாமல் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். தீவிரமான உணர்வுகள் கொண்ட அவர் கோவிலுக்குச் சென்று கடவுளை உடனே காணவேண்டுமென்று தவத்தில் அமர்ந்தார். கடவுளும் தோன்றினார். “அந்தச் சிறுமி குளிரிலும் பசியிலும் வாடுகிறாளே! அவள் துன்பத்தைத் தீர்க்க நீ என்ன செய்தாய்?” என்று கோபமாகக் கேட்டார். கடவுள் அமைதியாகச் சொன்னார், “அதற்குத் தான் உன்னைப் படைத்தேன். உன்னாலான உதவியைச் செய்திருக்கலாமே” என்று. அம்மனிதர் எதுவும் பேசாது அமைதியாய் வெளியே போனார்.

நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழக்கூடிய மக்களிடத்தில், அதிலும் குறிப்பாக ஏழை எளியவரிடத்தில் அன்பும் அக்கறையும் கரிசனையும் கொண்டு வாழவேண்டும். அதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, தூய டொமினிக்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று இறைப்பணிக்காக நம்மையே முழுவதும் அர்ப்பணிப்போம், அன்னையிடம் ஆழமான பக்தியும், அடுத்தவர்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image