St. Maximilian Kolbe

ஆகஸ்டு 14

மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே

mary

மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே (ஆகஸ்ட் 14)

 

நிகழ்வு

கோல்பே சிறுவயது முதலே மரியன்னையின் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவர் வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மரியன்னை அவருக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் அவர் கோல்பேயிடம் வெள்ளை மற்றும் சிகப்பு நிற கிரீடங்களைக் காட்டி, “வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளமாக இருக்கின்றது, சிகப்பு நிறம் மறைசாட்சியத்தைக் குறிக்கின்றது. இந்த இரண்டு கிரீடங்களில் உனக்கு எந்தக் கிரீடம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு கோல்பே சிறிதும் தாமதியாமல், “எனக்கு இரண்டு கிரீடங்களும் வேண்டும்” என்றார். கோல்பே தான் சிறுவயதில் தேர்ந்துகொண்டது போன்று பின்னாளில் அவர் மறைசாட்சியாக உயிர்துறந்தார்.

வாழ்க்கை வரலாறு

மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே 1894 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் போலந்து நாட்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஜூலியஸ், தாய் மரிய கோல்பே என்பவர் ஆவார். கோல்பேயின் திருமுழுக்குப் பெயர் ரைமென்ட் என்பதுதான். பின்னாளில் அவர் குருவாக மாறியபிறகு கோல்பே என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். இதனால் இவருடைய பெற்றோரால், இவரை பள்ளிக்கு அனுப்பிவைத்து, படிக்க வைக்க முடியவில்லை. எனவே, இவர் தன்னுடைய தாய்க்கு ஒத்தாசையாக வீட்டு வேலைகளைச் செய்துவந்தார்.

ஒருமுறை கோல்பேயிடம் இருந்த அறிவுத்திறனைப் பார்த்த அவ்வூரில் வசித்து வந்த வைத்தியர் ஒருவர், அவருடைய படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். அன்றிலிருந்தே அவர் பள்ளிக்கூடத்திற்குச் சென்று படிக்கத் தொடங்கினார். கோல்பே படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்த அவர் பிரான்சிஸ்கன் சபையில் (OFM) சேர்ந்து, 1919 ஆம் ஆண்டு குருவாக மாறினார். சிறுவயது முதலே மரியன்னையிடம் அதிகமான பக்தி கொண்டிருந்த கோல்பே “City of Immaculate” என்னும் நகரைத் தோற்றுவித்தார். அங்கே Knights of the Immaculate என்னும் பத்திரிக்கையை நடத்தினார். அதற்கு ஆயிரக்கணக்கில் வாசகர்கள் சேர்ந்தார். அதன்வழியாக அவர் ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்தார், அன்னை மரியாளைப் பற்றியும் அதில் அதிகமாக எழுதி வந்தார். 1930 ஆம் ஆண்டு ஜப்பானுக்குச் சென்ற கோல்பே, அங்கே Garden of Immaculate என்னும் நகரைத் தோற்றுவித்து, அங்கேயும் இயேசுவைபற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார். சிறுது காலம் அங்கு இருந்த கோல்பே, பின் அங்கிருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவந்தார்.

இந்த சமயத்தில் யூதர்களுக்கு எதிரான ஹிட்லருடைய அடாவடித்தனமும், அடக்குமுறையும் தொடங்கியது. யூதர்கள் என்று யாரெல்லாம் கண்ணில் பட்டார்களோ, அவர்களையெல்லாம் ஹிட்லருடைய நாசிப்படை கைதுசெய்து, சித்ரவதை முகாமில் அடைத்துவைத்து கொலைசெய்தது. கோல்பேயோ ஆஸ்விட்ஸ் எனப்படும் இடத்தில் யூதர்களுக்கு ஆதரவு அளித்துவந்தார். இதைக் கேள்விப்பட்ட நாசிப்படை 1939 ஆம் ஆண்டு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. கோல்பேயை சில மாதங்கள் சித்ரவதை முகாமில் வைத்திருந்த நாசிப்படை, பின்னர் அவரை விடுதலை செய்து அனுப்பியது. ஆனால் 1941 ஆம் ஆண்டில் அவர் மீண்டுமாக கைதுசெய்யப்பட்டு சித்ரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டார். இம்முறை அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானார்.

இவர் சிறையில் இருந்த தருணத்தில், சிறைவாசிகளுக்கு நற்செய்தியை அறிவித்து வந்தார். அதன்வழியாக கோல்பே அங்கே இருந்தவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். ஒருநாள் இவருடைய சிறைக்கூடத்தில் இருந்த கைதி ஒருவர், தப்பித்து ஓடிவிடவே, இதை அறிந்த சிறைக் கண்காணிப்பாளர் இவருடைய சிறைக்கூடத்தில் இருந்த பத்துப் பேரைத் தேர்த்தேடுத்து, அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப் போவதாக உத்தரவிட்ட்டார். அந்தப் பத்துப் பேரில் ஒருவர் பிரான்சிஸ் கஜோவ்னிக்ரேக் (Francis Gajownicrek) என்பவர் ஆவார்.. அவர் சிறை அதிகாரியிடம், “நான் இறந்துவிட்டால், என்னுடைய மனைவி பிள்ளைகளை யார் காப்பாற்றுவது?” என்று கதறி அழுதார். இதைப் பார்த்த கோல்பே, அந்தக் கைதியின் மீது இரக்கம்கொண்டார். பின்னர் அங்கிருந்த சிறையதிகாரியிடம், “இவருக்காக நான் சாவை ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். கோல்பேயின் வார்த்தைகளைக் கேட்ட சிறை அதிகாரி ஒருநிமிடம் அதிர்ந்துபோய் நின்றார். பின்னர் அந்த சிறை அதிகாரி கோல்பேயை மரண தண்டனை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் அனால், விஷ ஊசி பாய்ச்சப்பட்டு கோல்பே தன்னுடைய உயிரைத் துறந்தார்.

தன்னோடு வாழ்ந்த சக மனிதர் ஒருவருக்காக தன்னுடைய உயிரைத் துறந்த கோல்பே 1982 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பேயின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நண்பருக்காக உயிர்தரல்

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 15:13). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் கோல்பே என்று சொன்னால், அது மிகையாகாது. அவர் தன்னோடு இருந்த ஒரு சிறைக் கைதிக்காக உயிரைத் தரத் துணிந்தார். நாம் நம்மோடு வாழக்கூடிய மக்களுக்காக உயிரைத் தர முன்வராவிட்டாலும் அவர்களுக்காக துன்புறத் துணிகிறோமா என சிதித்துப் பார்க்கவேண்டும். ஆனால், பலநேரங்களில் நாம் ‘என்னுடைய குடும்பம்’, ‘என்னுடைய இனம்’ என்ற குறுகிய வட்டத்திலே வாழ்ந்து இறந்து போய்விடுகிறோம். ஆண்டவர் இயேசு எல்லாரும் வாழ்வு பெற தன்னுடைய உயிரைத் தர முன்வந்தார். அவரைப் போன்று நாமும் பிறருக்காக நம்முடைய உயிரைத் தர முன்வரும்போது நாமும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளலாம்.

ஒருமுறை ஒரு பிரபலமான பள்ளிக்கூடத்திலிருந்து மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெரிய, திடகாத்திரமான மாணவன் ஒருவன் மிகவும் மெலிந்த தேகமுடைய மாணவன் ஒருவனை அடி அடியென அடித்துக்கொண்டிருந்தான். இதைப் பார்த்து கூட்டம் கூடியதே ஒழிய, யாருமே சண்டையை விலக்கிவிட முன்வரவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு மாணவன், திடகாத்திரமான மாணவனைப் பார்த்து, “தயவுசெய்து இந்த மாணவனை அடிக்கவேண்டாம், ஒருவேளை நீங்கள் அடிக்கவேண்டும் என்று நினைத்தால் அதற்கு என்னை அடியுங்கள், நான் எவ்வளவு அடியை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்கிறேன். அவனை மட்டும் அடிக்கவேண்டாம்” என்று கெஞ்சிக் கேட்டான். இதைப் பார்த்து சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம் மிரண்டு போய் நின்றது. கூட்டத்தோடு அந்த திடகாத்திரமான மாணவனும் மிரண்டு போய் நின்றான். பின்னர் அந்த திடகாத்திரமான மாணவன், மெலிந்த தேகம் கொண்ட மாணவனை விட்டுவிட்டு, புதிதாக வந்த மாணவனை அடி அடியென அடித்து, தன்னுடைய கோபம் அனைத்தையும் தீர்த்துக்கொண்டான். எல்லா அடிகளையும் பொறுத்துக்கொண்ட அந்த மாணவன் உடல் முழுவதும் காயங்களோடு நடக்க முடியாமல் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான்.

இப்படி இன்னொரு மாணவனுக்காக தன்மேல் அடிகளை வாங்கிக்கொண்ட மாணவன் வேறு யாருமல்ல, பின்னாளில் ஆங்கில இலக்கியத்தில் மிகப்பெரிய கவிஞராக மாறிய லார்ட் பைரோன் என்பவரே ஆவார். அவர் பிறர்மீது அக்கறை கொண்டு வாழ்ந்ததனால்தான் என்னவோ, இறைவன் அவருக்கு கவிதையில் புலமையைத் தந்திருக்கிறார். நாமும் நம்மோடு வாழும் சக மனிதர்களுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ளும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, தூய மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பேயின் விழாவை கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம். பிறருடைய துன்பங்களை போக்க முன்வருவோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா பேற்றினை கொடையாகப் பெற்று மகிழ்வோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image