St. Rock St. Stephen Of Hungary

ஆகஸ்டு 16

ஹங்கேரி ஸ்டீபன்

mary

ஹங்கேரி ஸ்டீபன் (ஆகஸ்ட் 16)

“ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைபற்றும், இறைபற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்” ( 2 பேது 1: 5-7)

வாழ்க்கை வரலாறு

பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹங்கேரியை கேஜா என்பவர் ஆண்டு வந்தார். இவருடைய மகனாக 975 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஸ்டீபன். இவர் பிறந்த பத்தாம் ஆண்டில் அதாவது 985 ஆம் ஆண்டு குடும்பமே, தூய ஆல்பர்ட் என்பவரால் கிறிஸ்தவ மறையைத் தழுவியது. அன்றிலிருந்தே இவருடைய குடும்பம் பக்தியில் சிறந்து விளங்கி வந்தது.

ஒருசில ஆண்டுகள் கழித்து ஸ்டீபனின் தந்தை மன்னர் கேஜா இறந்துபோனதால், ஸ்டீபன் அரசராகப் பொறுபேற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஸ்டீபன் ஆட்சிப் பொறுப்பை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு மக்களுக்கு நல்லதொரு ஆட்சியினை வழங்கத் தொடங்கினார். இவர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு செய்த முதல் காரியம் நாட்டு மக்களிடையே அமைதியை, ஒற்றுமையைக் கொண்டுவந்ததுதான். இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இவர் செய்த இரண்டாவது காரியம் கிறிஸ்தவ மதத்தை ஹங்கேரி நாட்டின் அரச மதமாக்கி, அனைவரும் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றச் செய்தது. இதனால் இவருக்கு திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டரிடமிருந்தே பாராட்டுக் கடிதம் வந்தது.

இதனை ஓர் உந்துசக்தியாக எடுத்துக்கொண்டு, ஸ்டீபன் இன்னும் பல நல்லகாரியங்களைச் செய்தார். குறிப்பாக நிறைய ஆலயங்களையும் துறவற இல்லங்களையும் கட்டி எழுப்பினார். இதோடு மட்டுமல்லாமல், ஏழை எளியவர் தங்குவதற்கென்று விடுதிகளையும் கட்டித் தந்தார்.

ஸ்டீபன் ஏழை எளியவரிடத்திலும் கைவிடப்பட்ட மக்களிடத்திலும் பிச்சைக் காரர்களிடத்திலும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். ஒரு சமயம் தெருவோரங்களில் இருக்கக்கூடிய பிச்சைக்காரர்களுக்கு உதவுவதற்காக கையில் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, இரவு நேரத்தில் சாதாரண ஒரு மனிதனைப் போன்று நகர்வலம் சென்றார். அவர் தங்களுக்குத்தான் உதவ வருகின்றார் என்பதுகூட தெரியாமல், பிச்சைக்காரர்கள் அவரிடத்தில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியே போனார்கள். இதை நினைத்து அவர் மனதிற்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்.

ஸ்டீபென் மரியன்னையிடம் ஆழமான பக்திகொண்டிருந்தார். தன்னுடைய அரசியல் வாழ்வில் சந்தித்த எல்லாச் சவால்களையும் பிரச்சனைகளையும் அவரிடத்தில் எடுத்துச் சொல்லி ஆறுதல் அடைந்து வந்தார். மேலும் மக்களை நல்லமுறையில் வழிநடத்துவதற்கான எல்லா ஆற்றலையும் அவர் மரியன்னையிடமிருந்தே பெற்று வந்தார்.

ஆண்டுகள் உருண்டோட உருண்டோட இவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நிறையப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாயிற்று. இவருடைய அன்பு மகன் எமேரிக் நோயினால் தாக்கப்பட்டு இறந்துபோனார். மகனுடைய இறப்பிற்குப் பிறகு அடுத்து யார் பதவி ஏற்பது என்ற போட்டி அவருடைய உறவினர்களுக்கு மத்தியிலே ஏற்பட்டது. எந்தளவுக்கு என்றால் அவரைக் கொல்வதற்குக் கூட, அவருடைய உறவினர்கள் முயன்று பார்த்தார்கள். ஆனால் எல்லாவிதமான தந்திரங்களையும் முறியடித்து, ஸ்டீபன் மக்களைத் தொடர்ந்து நல்வழியில் வழிநடத்தி வந்தார்.

இப்படி மக்களை இறைவழியில் வழிநடத்தி, தானும் இறைவழியில் நடந்த ஸ்டீபன் 1038 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1083 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஹங்கேரி ஸ்டீபனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மரியன்னையிடத்தில் பக்தி

தூய ஹங்கேரி ஸ்டீபனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நாம் வியக்கக்கூடிய ஒரு காரியம், அவர் மரியன்னையிடம் கொண்டிருந்த பக்திதான். அவர் மரியன்னையிடம் கொண்டிருந்த பக்தி, அவருக்குப் பல நேரங்களில் தெம்பூட்டியது, ஒருசில நேரங்களில் அவருக்கு ஆபத்தில் பேருதவியாக இருந்தது. தூய ஹங்கேரி ஸ்டீபனைப் போன்று நாம் மரியன்னையிடம் பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மரியன்னை பிள்ளைகளாகிய நமக்காகத் தன் திருமைந்தனிடம் எப்போதும் பரிந்து பேசுகின்றவர். அப்படிப்பட்டவர், நமக்காகவும் பரிந்து பேசி, நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றித் தருவார் என்பது ஆழமான உண்மை.

ஆகவே, தூய ஹங்கேரி ஸ்டீபனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image