St. Mamas St. Clare St. Joan of the Cross

ஆகஸ்டு 17

சிலுவையின் தூய ஜோன்

mary

சிலுவையின் தூய ஜோன்

நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும் (பிலி 2:4)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜோன் டெலானோ, பிரான்சு நாட்டில் உள்ள சாமூர் என்னும் இடத்தில் 1666 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த இரண்டு ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்துபோனார். எனவே இவர் தனது தாயாரின் பராமரிப்பில்தான் வளர்ந்து வந்தார். அவரும்கூட ஜோனுக்கு 25 வயது நடக்கும்போது இறந்துபோனார். இதனால் இவர் தனிமரமானார்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஏதாவது கடை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்று ஜோன் முடிவெடுத்தார். அதன்படியே ஒரு சிறிய கடையை வைத்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தன்னுடைய பிழைப்பை ஓட்டி வந்தார். ஜோன் இருந்த சாமூரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் ஒன்று இருந்தது. அதற்கு ஏராளமான மக்கள் வந்து போனார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் ஜோன் அங்கு கடையைத் தொடங்கியிருந்தார்.

நாட்கள் ஆக ஆக, அவருடைய கடை நன்றாக ஓடத் தொடங்கியது. இதனால் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியில் இரவு பகல் பாராமல், ஞாயிற்றுக்கிழமை கடன் திருநாள் என்றுகூடப் பாராமல், அந்த கடையே கதியெனக் கிடந்தார். இதைப் பார்த்த சாமூரில் இருந்த பங்குத்தந்தை அவரிடம், “எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்று கிடக்காதே, கடவுளுக்கு என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கு. அப்போது உன்னுடைய வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும்” என்று புத்திமதி சொன்னார். இதைத் தொடர்ந்து ஜோன் கடவுளுக்கென்று சிறிதுநேரம் ஒதுக்கி ஜெபித்து வந்தார்.

இது நடந்து சில மாதங்கள் கழித்து, பிரான்செஸ் சௌசெட் என்ற பெண்மணி சாமூருக்கு வந்தார். அவர் ஜோனை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஜோனிடம், “மனித வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதில் மட்டும் இல்லை. மாறாக பிறருக்குக் கொடுப்பதில் அடங்கியிருக்கின்றது” என்று சொன்னார். இவ்வார்த்தைகள் ஜோனை ஏதோ செய்தது. அவ்வார்த்தைகளை ஆழமாக சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜோன், அதிலிருந்த உண்மைப் பொருளை உணர்ந்தவராய், தன்னுடைய வீட்டில் தங்க இடமில்லாது அலைந்தவருக்கு தங்க இடம் கொடுக்கத் தொடங்கினார். பின்னாளில் தன்னுடைய கடை முழுவதையுமே கைவிட்டப்பட்டோர், அனாதைகள், முதியோர் போன்றோர் தங்குவதற்கான ஒரு இடமாக மாற்றி, அங்கேயே ஒருசில பெண்களின் உறுதுணையோடு Sisters of St. Anne of Providence என்றொரு சபையை நிறுவினார்.

இப்படி மக்களால் கைவிடப்பட்ட, ஏழைகள், அனாதைகள், முதியோர் இவர்களுக்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணித்த ஜோன் 1736 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1982 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

சிலுவையின் தூய ஜோன் அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கொடுத்து வாழப் பழகுவோம்

தூய ஜோனின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான் அதுதான் நம்மிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடுத்து வாழ்வதாகும். ஒரு காலத்தில் பணம் சம்பாதிப்பதே தன்னுடைய வாழ்வின் லட்சியமாக நினைத்து வாழ்ந்தார் ஜோன். பின்னாளில் அறிவுத் தெளிவுபெற்று இருப்பதை பிறருக்குக் கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது என்பதை உணர்ந்து அதன்படி தன்னுடைய கடையையே ஏழை, எளியவருக்குப் பயன்படும்படி கொடுத்தார். அதனால் பலரும் வாழ்வடையக் காரணமாக இருந்தார்.

தூய ஜோனை நினைவுகூருகின்ற நாம், நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதற்கு முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விவிலியம் நமக்குச் சொல்லக்கூடிய மிக முக்கியமான் செய்தி, “பெறுவதில் அல்ல, கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது” என்பதாகும். ஆம். நாம் நம்மிடம் இருப்பதை இல்லாதவருக்கும் தேவையில் உள்ளவருக்கும் கொடுக்கின்றபோது உண்மையான மகிழ்ச்சியை அடைக்கின்றோம். அதைவிடுத்து, நாம் சம்பாதித்த செல்வத்தை நமக்கு மட்டுமே வைத்திருக்கும்போது அதனால் பயனொன்றும் விளையப் போவதில்லை.

ஆகவே, தூய சிலுவையின் தூய ஜோனை போன்று இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழக் கற்றுக்கொள்வோம். தேவையில் உள்ளவர்களில் தேவையை உணர்ந்து, அவற்றைப் பூர்த்தி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

 

image